30 May 2019 10:57 amFeatured
கடந்த ஞாயிறு அன்று சென்னை - வடபழனியில் உள்ள 'மேப்பில் ட்ரீ' நட்சத்திர விடுதியில் அமெரிக்காவின் மெர்ரிலேன்ட் பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் 'கிங் யூனிவர்சிட்டி (யூ எஸ் ஏ)யும் இணைந்து நடத்திய முனைவர் பட்டம் மற்றும் சிறந்த இலக்கியவாதிகளுக்கான விருது வழங்கும் விழா, வேந்தர் முனைவர் செல்வின்குமார் தலைமையில் நடந்தது.
பல்கலைக்கழக செயலாளர் அனிதா வரவேற்புரையாற்ற நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சமூக ஆர்வலர்களுக்கு முனைவர் பட்டத்தை வேந்தர் தமது சிறப்புரைக்குப் பிறகு வழங்கினார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பைப்பெற்ற சிறந்த நூல்களின் ஆசிரியர்கள் பத்துபேருக்கு "தி என்லைட்டன்மென்ட் அவார்ட்" (அறிவொளி விருது) என்ற விருதுகளை வழங்கி சமூக அக்கறையுடன் இலக்கியம் படைக்கும் இலக்கியவாதிகளின் பெருமைகளை விளக்கியும் இலக்கியவாதிகளுக்கு பெருமைசேர்க்கும் தானும் நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதாகவும் விருதுக்குரிய அத்தனை நூல்களும் சிறந்த முறையில் படைக்கப்பட்டிருப்பதாகவும் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
'சிகாமணி' 'போட்டி போடுவோம் பொறாமை வேண்டாம்' 'எளிய தமிழும் இனிய தமிழகமும்' 'மறக்க முடியுமா?' 'இலட்சியங்களை நோக்கிப் பயணம்' 'தடைக்கற்கள் சிதறட்டும்' 'கனவுத்தோட்டம்' நீ மட்டும் நேசிக்காமல் இருந்திருந்தால்..., 'புதிய வெளிச்சம்' 'நான் இந்த விசயநகரத்தின் பேரரசன்' ஆகிய மரபுக் கவிதை, கட்டுரை, புதினங்களின் தொகுப்புகளான பத்து நூல்களையும் இலக்கியப் பெரும் படைப்புகளாகக் குறிப்பிட்டு(Magnum Opus) இவைகளை எழுதிய நூலாசிரியர்களுக்கு "அறிவொளி விருது" வழங்கப்பட்டது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவரும் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவருமானமுனைவர் வதிலை பிரதாபன் எழுதிய 'மறக்க முடியுமா?' என்னும் மரபுக் கவிதைகளின் தொகுப்பிற்காக அவருக்கு "அறிவொளி விருது" வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மனித உரிமை மற்றும் பாதுகாப்புக் கழகத் தலைவர் டாக்டர் ஜோசப், வழக்கறிஞர் அருணாசேகர், மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வை செல்வி பவித்ரா நெறியாள்கை செய்ய, உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மக்கள் தொடர்பு அலுவலர் தங்கச்செல்வன் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
இறுதியில் மணிமேகலை பிரசுரத்தின் மேலாளர் மோகன் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.