17 Apr 2019 12:34 amFeatured
தூத்துக்குடியில் திமுக கூட்டணி வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முடிவடைந்தது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் முன்னாள் எம்.பி கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் தூத்துக்குடி குறிஞ்சி நகரில் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமானவரித்துறை பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.
சோதனை நிறைவடைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ”கிட்டதட்ட 2 மணி நேரமாக ஐடி அதிகாரிகள் இங்கு சோதனையில் ஈடுபட்டனர். 8.30 மணியளவில் அவர்கள் அதிரடியாக வீட்டினுள் நுழைந்த பொழுது நான் வருமான வரித்துறை சோதனைக்கான ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டேன். இரவு நேரத்தில் இவ்வாறு சோதனை நடத்த அனுமதி இருக்கிறதா என்று கேட்டேன். இது எதற்கும் அவர்களிடம் உரிய பதில் இல்லை. எனினும், இங்கிருந்த அனைவரும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்தோம்.
இந்நிலையில், இரவு 9.30 மணியளவில் என் பெயரில் ஒரு சம்மன் இருப்பதாகவும், அதற்கு நான் உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், அந்த புகாரை என்னிடம் காட்டவில்லை. இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது.
விசாரிக்க வந்தபோதோ கேண்டிடேட் கேண்டிடேட் என்று இரண்டு முறை சொன்னார்களே தவிர வேறெந்த பதிலையும் சரியாக சொல்லவில்லை.
மேலும், ஒரு மணி நேரத்திற்கு பிறகான சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவர்களுக்கு வந்த புகார் உண்மையில்லை என்றும் திரும்பி சென்றுள்ளனர்.
முன்பாக, இந்த சோதனை குறித்து அறிந்த தளபதி ஸ்டாலின் அவர்கள், 'தேனியில்
ஒ.பி.எஸ் மகன் வாக்குக்கு தலா 1000 ரூபாய் பணம் தருகிறார். அவர் மீது
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர். அங்கு, ஏன் சோதனை
நடத்தவில்லை?' என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். அதையேதான் நானும்
கேட்கிறேன்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களையும், பயமுறுத்தல்களையும் எதிர்கட்சி வேட்பாளர்கள் மீது ஏவுகிறது ஆளும்கட்சி. எந்தவொரு அடிப்படையும், நியாமும் இன்றி வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதே அவர்களது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
இது முற்றிலும் ஜனநாயக விரோத போக்கையே காட்டுகிறது. எந்தவொரு பிரச்சனையையும் நாங்கள் சந்தித்து எதிர்கொள்வோம். தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை மூலமாக எதிர்கட்சிகளை பயமுறுத்த நினைக்கிறது மோடி அரசு. அவர்கள் தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். வேலூர் போல இங்கேயும் தேர்தலை ரத்து செய்ய முடியுமா என்கிற நப்பாசையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆவணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினார் எங்களுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசை நிராசையாகிவிட்டது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் தொண்டர்கள் மேலும் மேலும் உத்வேகத்துடன் தேர்தல் களத்தில் பணியாற்றுவார்கள்.
இதைவிட மிகப்பெரிய பிரச்சினைகளையெல்லாம் பார்த்த மிகப்பெரிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். இந்த சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சியல்ல திமுக.” என்று தெரிவித்தார்.