25 Sep 2020 1:38 pmFeatured
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74), கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்ந்தவுடன் அவர் வெளியிட்ட வீடியோவில், ‘சாதாரண காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவேன். தயவுசெய்து யாரும் எனக்கு போன் செய்து நலம் விசாரிக்க வேண்டாம்' என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 13ம் தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடனே அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், ‘எனது தந்தை எஸ்.பி.பி அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்' என்று வீடியோ வெளியிட்டார்
இதையடுத்து எஸ்.பி.பி கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். எஸ்.பி.பி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
இதையடுத்து எஸ்.பி.பியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், கடந்த ஆகஸ்டு 18ம் தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் எக்மோ கருவி பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதை தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 20ம் தேதி மாலை 6 மணியளவில், எஸ்.பி.பி நலம்பெற வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.