Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள்

18 Nov 2024 11:21 amFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!
thennarasu Pictures kurunji

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களின் தமிழ் பெயர்களும் பூக்களும்

கபிலர் தமிழ்ச்சங்கப் புலவர்களில் மிக புகழ் பெற்றவர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இவரால் அதிகமான சங்கபாடல்கள் பாடப்பெற்றுள்ளது.  இவர் பாடிய 200 க்கும் மேற்பட்ட பாடல்களில் பத்துப்பாட்டு எனும் நூலில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று.  இப்பாடலில் மூலம் இரே இடத்தில் ஒரே தடவையில் 99 வகையான தாவரத்தின் பெயர்களை பட்டியல் இட்டிருப்பதன் மூலம் கபிலர் காவியங்களின் மட்டுமல்ல தாவரவியலின் அறிஞராகவும் திகழ்ந்தவர்.

குறிஞ்சிப்பாட்டு மலர்கள்

மலர்களைப் பறித்த தலைவியும் தோழியும்

. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,           65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,                       70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,                    75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை                           80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,                          85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,                      90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்                   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ (61-98)

1. காந்தள் (Variety of Glory Lily)

காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்

2.  ஆம்பல் (White Water Lily)    

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை நீர்ச்சுனைகளிலும் , மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

3.  அனிச்சம் (A delicate flower)

மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம். மென்மைக்கு உதாரணமாக திருக்குறளில் கூறப்படும் மலர் அனிச்சம் பூ ஆகும். ‍

அனிச்சம் நுகர்ந்தாலே வாடிவிட கூடிய ஒரு மென்மையான மலர்.மென்மை மட்டும் அல்லாமல் புலனுணர்வு கொண்ட மிகச்சில மலர்களுள் ஒன்று இந்த அனிச்சம். சுவாசமோ, ஸ்பரிசமோ அல்லது ஏன் ஒரு சிறு தென்றல் காற்றின் வருடல் கூட இந்த மலரில் மாற்றத்தை ஏற்படுத்துமாம்.  இளஞ் சிவப்பிலும், அழகிய ஆரஞ்சிலும்ஊதா நிறத்திலும் அழகாய் மலர்ந்திருக்கும் சூரியன் வெளிச்சம் இருக்கும் திசையில் இலைகள் திரும்பி கொண்டே இருக்கும்

"மோப்பக் குழையும், அனிச்சம்; முகம் திரிந்து
நோக்கக் குழையும், விருந்து."

மோந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்;
முகம் மலராது திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர் விருந்தினர்

4.  குவளை (Purple Indian Water – Lily)

செங்குவளை, கருங்குவளை, நீலக்குவளை என்றெல்லாம் நிறத்துக்கேற்ப அழைக்கபடும் மல்ர் இது. சங்கப் பாடல்களில் உவமையாக இம்மலர் பயன் படுத்தப்ட்டிருக்கும். தேவாரம், திருப்புகழ், திருமந்திரம் என அனைத்திலும் பாடப்பட்ட மலர் இது. பெண்ணின் விழிகளுக்கு ஒப்பிடப்படும் மலர் இது.

இது மலைப் பக்கத்துச் சுனைகளில் மிகுதியாகப் பூத்திருக்கும். ஆனால் சில இடங்களில் கழி, பொய்கை, போன்றவற்றிலும் வளர்ந்திருக்கக் காணலாம். குவளையில் சிவப்பு நிறமும், நீல நிறமும் உடைய இரு இனம் உண்டு.

5.  குறிஞ்சி (Kurinji, Neela kurinji flower)

இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி என ஆச்சரியமூட்டும் இயற்கையின் முன்னேநிலங்களை ஐவகையாய் பிரிக்கையில்மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என பிரிக்கப்பட இம்மலரே காரணம்.

இது கார்காலத்தில் மலரும் என்பதைக் `கார் மலர்க்~ குறிஞ்சி' என்ற மதுரைக் காஞ்சியால் அறிகிறோம். இதன் காம்பு கருமையான நிறமுடையது என்பதையும், அது தேனுடைய பூ என்பதையும், அறிய முடிகிறது.

குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டு்மே பூப்பது குறிஞ்சியின் சிறப்பு. எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.

6.  வெட்சி (Scarlet Ixora)

வெட்சி' சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ.மரங்களின் தீ பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும் பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்டும்.

குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது இதனைச் `செச்சை' என்றும் வழங்குவர். இதன் முகை சிவல் என்ற பறவையின் காலில் உள்ள முட்களைப் போன்று இருக்கும் என்ற செய்தியினை அகப்பாடலடி தெரிவிக்கின்றது. வெட்சிப் பூ பெரியதாக இருக்கும். காம்பு சிவப்பாக இருக்கும்.

`வெட்சி மாமலர்', 'செங்கால் வெட்சி' என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

7.  செங்கோடுவேரி (Rosy – flowered leadwort)  

செங்கொடிவேலி ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை வெட்சியைப் போலவே இருந்தாலும் வேறுபாடுகள் நிறையவே உண்டு .  ஒரே கொத்தில் நூற்றுகணக்கான மலர்கள் ஒரே சமயத்தில் மலரும்வெட்சியில், நூற்றுக்கணக்கில் மலர்கள்அதே கொத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாதக் கணக்கில் இருக்கும்.  பல்வேறு மருத்துவபலன்களை தன்னகத்தே கொண்டதான இம்மலர் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாவதுபோல் ஆவதும் உண்டு

8.  தேமா (Sweet Mango)

தேமாம்பூ; ஆம்பிரம்; மாம்பூ என அழைக்கப்படும்.  முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும், முதலில் புளிப்பாகவும் கனிந்த பின் இனிப்பாகவும் இருக்கும் பழத்தைத் தரும் பூ / அதனைத் தரும் மரம்.

9.  மணிச்சிகை – செம்மணிப் பூ (Crab’s eye)

மணிச்சிகை புதர்கள் போல் காணப்படும் ஒரு மெல்லிய கொடி, 3-5 மீ நீண்டு வளரும். முட்டை-இதயம்-வடிவ இலைகளோடு இளஞ்சிவப்பு-ஊதா வெள்ளை புனல் வடிவ பூக்களோடு கடற்கரைகள் மற்றும் உப்பு மண்ணில் வருட்ம் முழுமைக்கும் பூக்கும் பூ இது.

தாளிக்கொடி - மஞ்சிகம் , மஞ்சிகை என அழைக்கபடும்.

10.   உந்தூழ் – பெருமூங்கிற் பூ (Largebamboo)

நெடிதுயர்ந்து வளரும் புதர் தாவரம் மூங்கில் எனவும் அழைக்கப்படும்.
புதர் தாவரம் ஆகிய மூங்கிலின் மலர் பெயர்தான் உந்தூழ்.  எப்போதாவதுதான் மலரும் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் வகையும் உண்டு எப்போது பூக்கும் என்று தெரியாத வகையும் உண்டு.

11.   கூவிளம்– வில்வம் (Bael)

வில்வம். கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம்

தாவர அமைப்பு - வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப் படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது.

12.   எறுழம் (A hill country tree with red flowers)

சிவப்பு பூக்கள் எங்கும் காணப்படும் இந்த ஏறுகொடி பல பெரிய மரங்கள் மற்றும் புதர்கள் மீது 5-10 மீட்டர் வரை படர்ந்து வளரும். பூக்கும் பருவம் குளிர் மற்றும் பிப்ரவரியில் உச்ச காலம் ஆகும்.

13.   சுள்ளி – மரம் (Ceylon ebony)

கருங்காலி வகை மரம் / அதன் பூ

சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம். அழகிய அடர் சிவப்பு இதன் மலர் நிறம்வெளிர் பச்சை, அடர் பச்சை என இதன் இலைகளின் நிறம், நெடிதுயர்ந்து வளரும் இந்த மரம், பார்க்க எல்லா மரத்தையும் போல இருந்தாலும் இது உறுதிக்குப் பெயர் போனது

14.   கூவிரம் (A mountain tree)

கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.கூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.

15.   வடவனம் 

வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது.

துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.

ஆலமரம் / அதன் பூ

"ஆல் போல் தளைத்து
அருகு போல் வேரூன்றி "

எனும் வாக்குக்கமைய தாயாகிய மரம் வளர்த்த சேயாகிய விழுதுகள், தாயின் கடைசி காலத்தில் அவள் பாரத்தை தாங்கும் என உறவுக்கும் ஒப்புமை கூற வைக்கும் மரம். ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது.

16. வாகை (Sirissa, Albizzia)

வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீர்கமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

17. குடசம்– வெள்ளை நிறப்பூ(Conessi bark)

குடசம் கிரிமல்லிகை, மலைமல்லிகை குடசப்பாலை என அழைக்கபடும். அழகிய இளம் வெள்ளையில் இதழ்கள் நடுவே இளம் மஞ்சளில் திலகம் வைத்தார் போல சிறு கோடுடன், அடர் பச்சையில் இலைகள் காணப்படும்.

இதனை வெட்பாலைப் பூ என்பர்.

குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குளிப்பிடுகின்றன. குடை போன்று இருக்கும் பூ ‘குடசம்’. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

18.   எருவை – நாணல்(European bambooreed)

கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல்.

கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிரிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும்.

19.  செருவிளை ( White – flowered mussel – shell)

செருவிளை என்பது வெண்ணிறம் கொண்ட சங்குப்பூ வகை. கரிசண்ணி என்றும் அழைக்கப்படுகின்ற பூவும் இதுவே. சங்கு பூ, தந்திரப் பூக்கள் அபராஜிதா, காக்கானம், வெள்ளை காக்கானம் பெயர்கள் உண்டு

20.  கருவிளை

ஊதாநிற சங்குப்பூ; காக்கணம் என்றும் அழைக்கப்படும் குறிஞ்சிப்பாட்டு பூ.

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

21.   பயினி (A kind of tree peculiar to hilly tracts)

குறிஞ்சிப் பாட்டில் கபிலர், ""பயினி வானி பல் இணர்க்~ குரவம்"" என்றார். `பயினி' என்பதற்கு நச்சினார்க்கினியர் `பயினிப்பூ' என்று உரை கூறினார். சங்க இலக்கியத்தில் வேறு எங்கும் `பயினி' என்பது கூறப்படவில்லை. பிற்கால இலக்கியமாகிய பெருங்கதையில் ""பயில் பூம் பயினி"" என வரும் சொற்றொடரைக் கொண்டு பார்த்தால் `பயினி' மரத்தில் பூக்கள் அடர்ந்திருக்கும் என்று அறியலாம். வட்டேரியா இண்டிகா என்னும் தாவரப்பெயர் உள்ள மரத்தைப் `பயின்' என்று மலையாள மொழியில் அழைப்பர் என்று காம்பிள் கூறியுள்ளார். இம்மரத்தின் பூக்கள் கொத்தாக உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் கன்னடத்திலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள 2500 அடி உய‌ரமுள்ள மலைப்~ பாங்கில் வளரும்.

22.   வானி (A species oftree)

வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.சுழல் அல்லது சுழல் மரம் என்றும் அழைக்கப்படும்.

23.  குரவம் (Common bottle flower tree)

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர் - மலைவசம்பு அல்லது குரவகம் அல்லது Common blue-bottle flower இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கக்கூடும். குரவம்,குரவு, குரா என்றும் இதனை வழங்குவர். குரவ மலரை, `நறும் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை' -30- குரவம் முல்லை நிலத்து மரம். முன்பனிக் காலத்தில் அரும்பு கட்டத் தொடங்கும் என்பதையும், இளவேனிற் காலத்தில் மிகுதியாகப் பூக்கும். பின்பனிக்காலமான மாசி , பங்குனியில் பூக்கும் பூ இது...

24.  பசும்பிடி – பச்சிலை மரம் (Mysore gamboge)

Garcinia ஆசியா, ஆஸ்திரேலியா, வெப்ப மண்டல மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் பொலினீசியா வளரக்கூடிய Clusiaceae பேரினமாகும். இந்த இனத்தில் உள்ள தாவரங்கள் saptrees, mangosteens (மேலும் ஊதா mangosteen, ஜி mangostana குறிப்பாக இது), garcinias அல்லது, ambiguously, "குரங்கு பழம்" என்று அழைக்கப்படுகின்றன.இவ்வின‌த்தின் ப‌ல‌ ப‌ழ‌ங்க‌ள் உட‌ன் உண்ண‌கூடிய‌வையே..

Garcinia இனங்கள் பசுமையான மரங்கள் மற்றும் புதர்கள், . பல இனங்கள் காடுகள் அழிப்புகளின்காரணமாக அழிந்து விட்டது. தெற்கு அந்தமான் தீவுகளில் அதிகமாக் காணப்பட்ட cadelliஅன இனங்கள் கிட்டத்தட்ட அல்லது முழுமையாக அழிந்துவிட்டது.

25.  வகுளம் – மகிழ் மரம் (Pointed – leaved ape – flower)

மகிழம்பூ, இலஞ்சிபூ, என மனம் கமழும் பெயர்கள் உண்டு.

மகிழ் என்றால் மகிழ்ச்சியாக இரு என பொருள் படும். மனதுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதால் இம்மலர் மகிழம் பூ என அழைக்கப்பட்டதாம். சித்த மருத்துவத்தில் சிறந்த பூ இது.

அழகிய சிறு நட்சத்திரம் போன்ற மலர்கள் மஞ்சளும், வெள்ளையும் கலந்த வண்ணத்தில், அடர் பச்சையில் சற்றே நீண்ட இலைகளை தாங்கும் கிளைகளோடு மாலையில் பூத்து, காலையில் உதிர்ந்துவிடும்பூ. மனதை மயக்கும் மலரின் மண‌ம் இப்பூவில் உண்டு.

26.  காயா – காசாமரம் (Ironwood tree)

குயம்புச்செடி, காசா மரம், பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon edule
அல்லி (இந்தி), அஞ்சனி, பூவை, பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon umbellatam.

சின்னச் சின்ன ஊதா மலர்களை அழகுற அடுக்கியது போல பூங்கொத்துகள், அவை தரும் அழகிய பச்சை நிற காய்கள், அவை மெல்ல மெல்ல அடர் சிவப்பாய் மாறி கனிகையில் கருமை நிறம் அடைகிறது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் மலரும்.

27.  ஆவிரை – செடி (Tanner’s senna)

பெயர் புதிதுபோல் இருந்தாலும் நம் அனைவரும் அறிந்த மலர் தான் போகிப் பண்டிகையின் பொது காப்புகட்டுகையில் அதனுடன் இந்த மலரையும்சேர்த்து வைப்பர்.
அழகிய மஞ்சளில் கொத்துக் கொத்தாய் மிக அழகாக பூக்கும் புதர் தாவர வகை வெளிர் பச்சையில் சின்னச் சின்ன இலைகளுடன், காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் இந்த மலருக்கு உண்டு.ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழி மூலம் . ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாவதை அறியலாம்.

28.  வேரல் – சிறு மூங்கில் (Small bamboo)

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 28-வது மலர்; சிறுமூங்கில், சின்ன மூங்கில், male bambo என்று அழைக்கப்படும் மரம்/அதன் பூ.  வெதிரம் என்பது பெருமூங்கில்.  வேரல் என்பது சிறுமூங்கில்.

உந்தூழ் பெரு மூங்கிலின் மலர்
வேரல் சிறு மூங்கிலின் மலர்

பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும்.  சிறுமூங்கில் கிழித்துப் கூடை முடையப் பயன்படும். சிறுமூங்கிலை ஊன்றுகோலாகவும் பயன்படுத்துவர்.

29.   சூரல் – சூரைச் செடி, (Oblique – leaved jujube)

சூரல் என்பது முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி.

30.  சிறுபூளை – களை (A common wayside weed)

சிறுபூளை, கண்பூளை, ஊமிள், காப்பு, சிறுபீளை,ஆமைகரம், சிறுகண் பீளை, கற்பேதி, பாஷணபேதி என்று பலவாறு அழைக்கப்படும் காட்டுக் களைப்பூடு வகையை சார்ந்த செடியாகும்.இந்த செடி கொத்துரகத்தை சார்ந்தது. நன்றாக வளரும் தன்மை கொண்டது. இச்செடி சுமார் இரண்டரை அடி வரை உயர்ந்து வளரும. பக்க வாட்டில் வெள்ளை நிறப்பூக்கள் கொண்ட கதிர்கள் பூத்திருக்கும். தமிழ் நாட்டிலெல்லா மாவட்டங்களிலும் இச்செடியை காணலாம்.

31.   குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து (Crab’s eye)

குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி

32.   குருகிலை (Flower of a tree)

மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ரவரியிலேயே பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள். இந்திய சூழலில் இரண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக வசந்த காலத்திலும் (பிப்ரவரி ஆரம்பத்தில் மே வரை), பருவ மழை (அதாவது ஜூன் ஆரம்பத்தில் செப்டம்பர்) காலத்தி்லும் புதிய இலைகள் இளஞ்சிவப்பு சிவப்பு தோன்றும்.

33.  மருதம் – மருத மரம், நீர் மருது, கரு மருது (Black winged myrobalan)

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம், மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன.நீர்ப் பெருக்கான இடங்களில், வயல்களின் ஓரங்களில், மருதம் வளர்ந்திருக்கும். மருதம் இணராகப் பூக்கும் தன்மையுடையது. பூவின் நிறம், மஞ்சள் நிறமாக இருக்கும்.

34.  கோங்கம் – மரம் (False tragacanth)

கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (bombax gossypinum or Yellow Silk Cotton Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர். காடுகளில் கோங்கம் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற் பருவம் தொடங்கியவுடன் இது மிகுதியாகப் பூக்கத்தொடங்கும். இதன் முகை உருண்டிருக்கும். எனவே, இது மகளிரின் நகிலுக்கு உவமையாகியது.தேனும், தாதும், நிறைந்த இம்மலர் இணராக மலர்ந்திருக்கும். அவற்றில் வண்டுகள் மொய்க்கும். கோங்கிலவு என்ற மரத்தின் மலர்தான் கோங்கம். பொன்னை ஒத்த தோற்றம் கொண்ட அழகிய மலர்.

35.   போங்கம் – மரம் (Red – wood)

போங்கம் குனி, குன்னி, மலை மஞ்சடை, மலமஞ்சடை, மலைமான்ஜடி, கல்மாணிக்கம் என அழைக்கபடும். இம்ம‌ர‌மான‌து மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அதிக மழை பெறும், பசுமைமாறாக் காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800-1200 மீ. உயரமான மலைகளில்) மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன. தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளில் (மத்திய சயாத்திரி) காணப்படுகின்றன.

36.  திலகம் – மஞ்சாடி மரம் (Barbados pride)

மஞ்சாடிப் பூ மரவகையைச்சேர்ந்தது.

மஞ்சாடி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுத்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இதன் வலிமை குறைந்தவையாகும்.

37.   பாதிரி – மரம் (Yellow flowered fragrant trumpet – flower tree)

பாதிரி (Stereosperm suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.  காட்டுப் பெருவழிகளில் இம் மரம் மிகுதியாக வளர்ந்து நிற்கும். ""அந்தப் பாதிரி"", `காணப் பாதிரி' என்றெல்லாம் வழங்குவார். பாதிரிமலர் செம்மையானது. பஞ்சு போன்ற துய்யினை உடையது. அதன் இதழ்கள் மெல்லியதாக இருக்கும்.

38.  செருந்தி – மரம் (Panicled golden- blossomed tree )

செருந்தி ஒரு வ‌கைக்கோரை இன‌த்தை சார்ந்த‌து.மண஼ம் வீசுகின்ற செருந்திமலர், இளவேனிற் காலம் தொடங்கியவுடன் மலர்ந்து நிற்கும். மலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும்.

இது நெட்டிக்கோரையெனவும், வாட்கோரையெனவும், தண்டான்கோரையெனவும் அழைக்கப் படும்.  செருந்திப்பூவை மக்ளீர்க்கு உவமையாக கூறிவர்.நல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற அருகருகே அடுக்கி வைத்தது போல மொட்டும் மலர்களும்,கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும்.

39.  அதிரல் – மல்லிகை வகை (Wild jasmine)

அதிரல் கொடி மரத்தில் படரும். அதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் இருக்கும். ஆற்றுமணலில் கொட்டிக் கிடக்கும். மகளிரும் ஆடவரும் இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்.  அதிரல் வேனில் காலத்தில் பூக்கும். இம்மலர் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும்.  பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.

40.  சண்பகம் – மரம் (Champak)

சண்பகம் இளவேனிற் காலத்தில் மலர்கின்ற மலர், சண்பகமலர் மணமும் குளிர்ச்சியும் உடையது. சண்பகம் என்பது என்றும் பசுமையான பெரிய தாவரம் ஒன்றாகும். இது தெற்காசியா, தென்கிழக்காசியா, சீனாவின் சில பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கிய இந்தோமலாயா சூழலியல் வலயத்தைத் தாயகமாகக் கொண்டது.[1] மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூக்களுக்காக இது வெகுவாக அறியப்படுகிறது. எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும்.

41.  கரந்தை – திருநீற்றுப்பச்சை (Fragrant Basil)

இதன் கொடி வடிவில் பெரியதாக இருக்கும். `கரந்தை மாக்கொடி' என்று பதிற்றுப்பத்துக் குறிக்கிறது. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணமும் உடையது. ""செம்பூங்கரந்தை"" என்று அகப்பாடலும், ""நறும்பூங்கரந்தை"" என்று புறப்பாடலும் கூறுவதைக் காணலாம். நாகுவின் முலையைப் போன்று பரந்து கரந்தைப் பூவின் வடிவம் அமைந்திருக்கும்.

42.  குளவி –மர மல்லிகை, காட்டு மல்லிகை (Wild jasmine, Indian cork)

குளவி – பன்னீர் பூ, மரமல்லி என அழைக்கப்படும் மலர்.

மல்லிகையின் ஒரு வகை, மரத்தில் பூக்கும் மல்லிகை, மர மல்லிகை, காட்டு மல்லிகை.

என்றாலும் வீட்டிலும் வளரும் மரம்.  மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக் காலத்தில்தான் அவைப் பூக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம் முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்து விடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும்.

43.  மா – மாமரம் ( Wild Mango tree)

மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.

44.  தில்லை – மரம் (Blinding tree)

Male Thillai Poo

Female Thillai Poo

                                                                                                    

தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயர் உண்டு. "அகிலைத் தில்லை" என்று அந்த மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார்கள். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அந்த அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. அகில்கட்டை நமக்கு பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து காலங் காலமாய் வந்து கொண்டிருந்தது.) கடற்கரையோரப் பகுதிகளில், சதுப்பு நிலப்பகுதிகளின் ஓரத்தில் தில்லை மரம் வளர்கிறது. நெய்தலும் மருதமும் கலந்த பகுதிகளில்தான் இது காணப்படும்.

45.  பாலை (Blue – dyeing rosebay, Woolly dyeing rosebay)

நிலத்தில் வளர்கின்ற மரம். வெண்ணிறத்துடன் இணராக மலரும். அதனால் `வாலினர்ப் பாலை' என நற்றிணை குறிப்பிடுகின்றது. கொடிய வேனிற்~ காலத்தில் எல்லா மரங்களும் கரிந்துபோக இம்மரம் மட்டும் தளிர்த்துப் பூ விடுகிறது. இம்மரத்தின் பெயரால் அது வளரும் நிலமும் பாலை எனப்பட்டது. 

46.  முல்லை (Arabian jasmine)

முல்லை, காட்டுப் புறங்களில் வளரும் கொடி. கார்காலத்தில் மாலை நேரத்தில் மலரும்.  காட்டுப் புறங்களில் கொன்றை, காயா, தளவம் இவற்றுடன் கலந்து காணப்படும். மற்றக் காலங்களில் வெறும் புதல்போன்று காட்சியளிக்கும். முல்லைக்கொடி, கார்காலத்தில் தளிர்த்து, ஏராளமான அரும்புகளை விடும். இதன் முகை வெண்மையாக நீண்டிருக்கும். முல்லையின் வாசத்துக்கு எல்லையே இல்லை.

47.  கஞ்சங்குல்லை – நாய்த் துளசி (White – Basil)

கஞ்சா செடி (Cannabis) ( /ˈkænəbɪs/; Cán-na-bis) பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை, கனாபிசு சற்றைவா (Cannabis sativa),கனாபிசு இன்டிகா(Cannabis indica),மற்றும் கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.

48.  பிடவம் (Bedaly emetic – nut)

பிடவம் செடி வகை சார்ந்தது.. இது சேய்மையிலும் மணம் பரப்பும் மலர்களைக் கொண்டது. கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.

49.  செங்கருங்காலி

கிராமங்களில் கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளைக் கருங்காலி என்ற மூன்று வகையான மரங்கள் தானாகவே வளர்கின்றன. பார்ப்பதற்கு கருவேலன் மரத்தைப் போல் தோற்றம் அளிக்கும். சீப்பு வடிவில் மெல்லிய இலைகள், முட்கள் நிறைந்த மெல்லிய கிளைகளில் பூக்கள், அத்துடன் தண்டில் கருவேலன் காயைப் போல், சப்பையான காய்கள் தோன்றும். ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும்.

50.  வாழை (Plantain)

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

51.  வள்ளி – கிழங்கு, கொடி(Canvolvulus batatas)

வள்ளி என்பது கொடி. Sweet poடடொ,சக்கரவள்ளிக் கிழங்கு எனப்படும்.

குறிஞ்சி நிலத்தின் வள்ளி என்ற மலர் / கொடியின் பெயரே நிலத் தெய்வமான வள்ளிக்கும் ஆகிவந்துள்ளது. வஞ்சி, கொடிச்சி என்ற பெண்களின் பெயர்களும் மலர்களின் பெயர்களே. இன்றும் நம் பெண்களுக்கு தாமரை, மல்ககை, செண்பகம் என்றெல்லாம் பெயர் வைக்கும் மரபு உண்டு.

52.  நீள்நறுநெய்தல் (White Indian water – lily)

கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் இவை~ களிலும் ஆங்காங்கு காணப்படும். `மணிப்பூ நெய்தல், என்று குறிப்பர். நலம் பெற்ற அழகிய குளிர்ந்த கண்ணிற்கு நெய்தல் மலரை உவமையாக்கி மகிழ்வர் புலவர். மாலை நேரத்தில் இம்மலர் கூம்பும். இது மிகுதியான மலர்ந்திருக்கும் காட்சி, நீலமணி நிறைந்த பொதியை அவிழ்த்து விட்டாற் போலிருக்கும்.

53. தாழை – தெங்கம்பாளை (Coconut flower with the integument covering it)

தாழை என்றதும் தாழம்பூவா??? என நினைத்திட வேன்டாம். தென்னை மரத்தின் சிறு மலர்கள் இருக்கும் பாளை, தெங்கம் பாளை தான் குறிஞ்சிப் பாட்டில் தாழை என பெயர் கொண்டது

54.  தளவம் – மஞ்சள் முல்லை (Goldenjasmine)

புதர் தாவர வகையை சேர்ந்தது.மஞ்சள் நிற மல்லிகை செம்முல்லை என்று கபிலரால் செல்லமாக அழைக்கப் பட்ட மலர் .தளவமும் முல்லை இனத்தைச் சேர்ந்தது. நச்சினார்க்~ கினியர் இதனைச் செம்முல்லை என்று குறிப்பர். மலைச்~ சாரல்களிலும் பாறைகளின் மேலும் இது படர்ந்து காணப்படும். கார்காலத்தில் மாலைநேரத்தில் மிகுதியாக மலர்ந்து நிற்கும். மணமிக்க இம்மலரின்போது சிச்சிலிப் பறவையின் அலகைப்போன்று சிறிது சிவப்பாகவும் கூர்மையாகவும் இருக்கும்.

55.   தாமரை (Lotus)

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

56.   ஞாழல் –மரம்(Heritiera Littoralis – Dryander)

இதனைப் `புலிநகக்கொன்றை' என்றும் கூறுவர்.  இது கடற்கரையில் மிகுதியாக வளர்ந்திருக்கும். பெரும்~ பான்மை இடங்களில் புன்னையையும்  ஞாழலையும் சேர்த்தே வழங்குவர். இளவேனிற்காலம் மலரும் இம்மலர் பொன்னிற வண்ணத்தை உடையது. இது மகளிர்மேல் படரும் சுணங்கிற்கு உவமையாகக் கூறப்படுகிறது.  புலி நகம் போன்ற இதழ்களை உடைய மலராதலால் இப்பெயரிட்டு அழைப்பர்.

57.   மௌவல் – காட்டு மல்லிகை (Wild jasmine variety)

முல்லை வகைகளில் ஒரு இனம் மௌவல். முல்லையைப் போன்று இதுவும் மணமிகுந்த வெண்ணிற மலர். இதன்- மொட்டு வெண்மை நிறத்துடன் கூரியதாக இருக்கும். இதற்கு மகளிரின் வெண்பற்களை உவமையாகக் கூறுவர்.  கார்காலத்தில் இது மலரும். இது வீடுகளில் மிகுதியாகப் படர்ந்திருக்கும். நொச்சி மரத்திலும் இதனைப் படர்த்தியிருப்பர்.

58.   கொகுடி – முல்லைக்கொடி வகை (A variety of jasmine creeper)

அடுக்குமல்லி எனப்படும் நறுந்தண் கொகுடிகொகுடி என்னும் மலரை இக்காலத்தில் அடுக்குமல்லி என்கின்றனர்.   இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும். தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை.

59.  சேடல் – பவள மல்லிகை (Night – flowering jasmine)

இது பாரிஜாதம் பவளமல்லி,பகடாப்பூ, மஞ்சள்பூ என்றும் குறிப்பிடப்படுகிறது. சுரசுரப்பான இலைகளையுடைய சிறுமரம். இதன் மலர்கள் பவள நிறக்காம்பும் வெண்ணிற இதழ்களையும் உடையது. மலருக்காக வீட்டுத் தோட்டங்களிலும் நந்தவனங்களிலும் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.

60.  செம்மல் – சாதிப் பூ, முல்லைப் பூ வகை (Large flowered jasmine)

சாதி மல்லிகை (Jasminum grandiflorum ) - ஸ்பானிஷ் ஜாஸ்மின், ராயல் ஜாஸ்மின், காடலோனியான் ஜாஸ்மின் என்றெல்லாம் ஆங்கிலத்திலும் சமேலி என்று இந்தியிலும் அழைக்கப்படும் மலர் இது,

https://qph.cf2.quoracdn.net/main-qimg-f4c3810271ec41138ab65caf93f7f559-lq  இதுவும் செம்மல் என விக்கிமீடியா சொல்கிறது.

61.   சிறுசெங்குரலி –கருந்தாமக்கொடிப்பூ (A mountain creeper)

விதைகளோடு கூடிய நீர் வாழ் தாவரம் இது. குட்டை செடி வகையை சார்ந்தது. 12 முதல் 15 அடி (3.6 முதல் 4.5 மீ) நீளம் வரை வளரகூடிய தாக நீரினுள் அமிழ்த்தப்ட்ட நீண்ட தண்டுகள் மேல் விசிறி-வடிவ இலைகளோடு நீரில் மிதந்து கொண்டிருக்கும் . ஜீன் மாதத்தில் துளிர்த்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை வெளிறிய‌ வெள்ளை நிற பூக்கள் பூக்கிறது.

62.   கோடல் – வெண் காந்தள் (White species of Malabar glory lily)

கோடல் என்பது வெண்காந்தள் மலர்.

63.   கைதை – தாழம் பூ (Fragrant screw -pine)

கைதை என்னும் மலர் தாழம்பூவின் இனம்.  பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர்.  கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.

64.  வழை – சுரபுன்னை (Long – leaved two – sepalled gamboge)

வழை என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது.

எல்லா மலர்களும், இலைகளுக்கு நடுவே கிளை முடியுமிடத்தில் மலரும்,

வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்.

•ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.

•குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.

•வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.

•நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.

•கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.

•குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.

•தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.

•யானை விரும்பும் தழைமரம்.

•மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.

•வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.

•வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.

65.  காஞ்சி –ஆற்றுப் பூவரசு மரம் (River portia)

ஆற்றுப்பூவரசு என அழைக்கபடும் காஞ்சிமரம் அழகு மிக்கது. மணல் மலிந்த ஆற்றுத் துறைகளில் 10. 20 மீற்றர்கள் வரை உயரமாக் வளர்ந்து 3. 7 செ. மீற்றர்கள் நீளமான இலைகளோடு மிகச்சிறிய பச்சை நிற பூக்கள் பூக்கும் பெரிய இலையுதிர் மரம் இது.சிடம்பர் முதல் மார்ச் வரை பூக்கும் மலரினம் .  தண்ணீர் நிறைந்த பொய்கை, ஆறு, மாடு, இவைகளின் கரைகளில் இது வளர்ந்து நிற்கும். இம்மலரிலிருந்து நறுமணம் கமழும்.

66.       மணிக்குலை நெய்தல் –

நீலமணி போலுங்  கொத்துக்களையுடைய தேன்

கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் இவைகளிலும் ஆங்காங்கு காணப்படும். `மணிப்பூ நெய்தல் என்று குறிப்பர். நலம் பெற்ற அழகிய குளிர்ந்த கண்ணிற்கு நெய்தல் மலரை உவமையாக்கி மகிழ்வர் புலவர்.

நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.

67.  பாங்கர் (Tooth – brush tree)

முல்லைப்பூவைப் போலத் தலையில் சூடிக்கொள்வர்.ஓமை, உகாய், உவா என வெவ்வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது.மிகச் சிறிய வெள்ளை மலர்கள் அதனூடே அதனினும் சிறிய பச்சை மொட்டுகள், வெளிர் சிகப்பில் கனிகள் மலரை விட கனிகள் அழகாய் இருக்கும்.பட்டுப் புழு வளர்ப்பில் உதவும் மரம் இது.

68.   மராஅம் – வெண்கடம்பு (Seaside Indian oak)

மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர். Taloora லேக் மரம் இலையுதிர் மரம் ஆகும் . மராஅம் மலர் ஒரு முனையத்தில் அடர்த்தியாக இல்லாது கிளை விட்டு பிரியும் மலர்க்கொத்து போல் சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும். மணம் மிக்கது. பூ வலமாகச் சுழன்றிருக்கும்.

69.  தணக்கம் – நுணா என்னும் கொடி (Small ach root)    

நுணாமரம் அல்லது மஞ்சணத்தி எனப்படும் ஒருவகை மூலிகை சிறுமரமாகும். இது விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தடிப்பான பட்டையும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும்.

70.  ஈங்கை – ஈங்குச்செடி (Species of sensitive – tree)

சங்க இலக்கியங்களின் இது கொடி என்று கூறப்படுகின்றது. நச்சினாக்கினியர், இதனை, ""இண்டங் கொடி"" என்பர். இக்கொடி பனிக்காலத்தில் செழித்து வளர்ந்து பூத்து நிற்கும். ஈங்கை மலர்கள் வெண்மை, துவர் ஆகிய இரு வண்ணங்களில் உள்ளன இம்மலரின் உட்பகுதியில் பஞ்சுபோன்ற ஒரு பொருள் அமைந்திருக்கும். அதனைத் `துய்' என்பர். அதனால் இம் மலர் `வண்ணத் துய் மலர்' என்று சிறப்பிக்கப்படுகின்றது. இம்மலர் குருவியின் குஞ்சினுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது

71.   இலவம் – மரம் (Red – flowered silk – cotton tree)

இலவம் சாரல்களில் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற்காலமே இது பூத்துக் குலுங்கும் காலம். அப்போது இலை தெரியாத அளவிற்கு மரமே பூவால் நிறைந்~திருக்கும்.இலவம்பூ சிவப்புநிறத்தில் இருக்கும். இதனை `எரிப்பூ இலவம்' என்றும், `எரிவுருவுறழ இலவம் மலர்' என்றும் புலவர்கள் பாடுகின்றனர். இதன் இதழ்கள் பெரிதாக இருக்கும். கோங்கின் நுண்தாது இதன்மீது படும்போது, பவளச் செப்பில் பொன் துகள் சொரிந்ததைப் போன்று காட்சியளிக்கும்.

72.   கொன்றை – சரக்கொன்றை (Indian laburnum)

கொன்றை மரம், இதனைக் `கடுக்கை' என்று அகநானூற்றுப் பாடல் குறிக்கின்றது. இது முல்லைநிற மரம். கார்காலத்தில் இம்மலர் பூக்கத் தொடங்கும். கொன்றை மலர்கள் மஞ்சள் நிறத்தினை உடையன. மாலைபோலப் பூக்கள் கொத்தாகப் பூத்து நிற்கும். அன்றலர்ந்த நாண்மலர் பொன் போன்றிருக்கும். மலர்ந்தபின் ஊழ்த்த மலர் பசலைக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. அது மங்கிய மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும்.

73.   அடும்பு – கொடி (Hare leaf)

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே.

74.   ஆத்தி – மரம் (Common mountain ebony)

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது.

75.  அவரை – கொடி (Field – bean)

அவரை என்பது பயன்மிக்க ஒரு கொடிவகை தாவரம். இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி. இதன் காயே அவரைக்காய். உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). நார்ப்பொருளும் நிறைய உள்ள ஒரு காய். இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும்.

76.   பகன்றை – சிவதைக் கொடி (Indian jalap)

இதனைச் `சிவதைக் கொடி' என்றும் வழங்குவர். இது பனிக்காலத்தில், மாலையில், ஞாயிறு இறங்குகின்ற பொழுது மலரும் என்று அகநானூறு காட்டுகின்றது. பகன்றைப் பூ வெண்ணிறமாக, வட்ட வடிவில் அமைந்திருக்கும். கிண்ணம் போன்ற தோற்றத்தை உடையது.

77.   பலாசம் – புரச மரம் (Palas – tree)

பலாசம் புரசு,கல்யாண முருங்கை எனவும் அழைக்க‌படுகிறது.

78.   பிண்டி (Asoka tree)

பிண்டி Caesalpinioideae என்னும் மரத்தை இக்காலத்தில் அசோகமரம் என்பர்.இந்துக்கள் அசோகமரத்தையும் புனித மரமாகவே போற்றிப் பேணி வருகின்றனர். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இம் மரத்தை ‘பிண்டி’ என்றும் ‘செயலை’ என்றும் அழைத்து வந்தனர்.அசோகமரம் அன்பின் அடையாளமாகப் போற்றப்படுகிறது.

79.   வஞ்சிப் பூ

பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி.   கவிஞர்கள் வஞ்சிக்கொடி போன்ற பெண் என வர்ணிப்பர்.

80.  பித்திகம் – பித்திகை (Large flowered jasmine)

பித்திகம் என்னும் மலரைப் பித்திகை என்றும் வழங்கினர். அந்தப் பூவின் வெரிந் (முதுகு) பகுதி சிவப்பாக இருக்கும். இந்தப் பூ மாலையில் மலரும். ஆடவர் பித்திக மாலையைச் சூடிக்கொள்வர்.

81.  சிந்துவாரம் – கருநொச்சி (Three – leaved chaste tree)

இதனை கருநொச்சிப்பூ, செங்கோட்டு மலர்கள் என்றும் அழைப்பராம்.  நொச்சியில் பல வகைகள் உள்ளன.  கருநொச்சி விசேஷமானது.  சிந்து என்னும் மலரை அடுத்து வாரம் என்னும் சொல்லைச் 'சிந்து' என்பதனுடன் சேர்த்துச் 'சிந்துவாரம்' என்னும் பெயரில் ஒரு மலரை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். வாரம் என்பது தனியொரு மலர்.

82.   தும்பை – செடி (White dead nettle, Bitter toombay)

தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை என அழைக்கபடும்

தும்பைக்கு எல்லாவகை மண்ணும் ஏற்றது. இந்தச்செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும் தாவரம். ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும்.

83.  துழாய் (Sacred basil)

துழாய் எனப்படும் துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

84.   தோன்றி – செங்காந்தள் (Malabar glory lily)

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர். மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில்  காந்தள் = செங்காந்தள்;  கோடல் = வெண்காந்தள்  என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது.

85.  நந்தி – நந்தியாவட்டம் (East Indian rosebay)

நந்தியாவட்டை (Ervatamia divaricata, Tabernaemontana divaricata, Crepe jasmine) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் குணங்கள் உடையன.

86.  நறவம் – நறுமணக்கொடி (A fragrant creeper)

நறவம் என்பது ஒரு மலர்.  நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

87.  புன்னாகம் – சிறு மரம்

புன்னாக மலர்கள் வெள்ளை நிறமானவை, மணமுடையது, மிக உயரமான மரங்கள், 35 மீ. உயரமுடையது.  மரத்தின் பட்டை வெளிப்புறத்தில் மஞ்சள் நிறமானவை, நன்கு படகு போன்ற பிளவுகளுடையது; உள்பட்டை நார் போன்றது, சிவப்பு நிறமானது

88.   பாரம் – பருத்திச்செடி (Indian cotton plant)

பாரம்பூ என குறிஞ்சிபாட்டில் அழைக்கபடும் பலர் பருத்தி parutti, [K. parti, M. parutti.] Indian cotton-plant, Gossypium herbaceum;  பஞ்சு உண்டாகுஞ் செடிவகை. பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும்.

89.  பீரம் – பீர்க்கு, கொடி (Sponge – gourd)

பீரம் பீர்க்கு ‍எனப்படும் வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய்

'பீர்க்கு' என்றால் ஒரு வகைக் கொடி.இதன் காய் கூட நீளமாக இருக்கும்.மஞ்சள் பூக்களோடு பூக்கும் இக்கொடி ஒரு வெப்பமண்டல படர்க்கொடியாகும். இரண்டு பெண் மற்றும் ஆண் மலர்கள் ஒரே தாவரத்தில் தோன்றும்.

90.  குருக்கத்தி – மாதவிக்கொடி (Common delight of the woods)

குருக்கத்தி ஒரு படர்க்கொடியாகும். வெள்ளை இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் மலர்கள் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற பழங்களோடு கொத்து கொத்தாக பூக்கும். வாசனை தரும் மலரிது. மாதவிக்கொடி என அழைக்கப்டும் குருக்கத்தி அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு மணம் வீசி மாமரத்தின் கிளையினைத் தழுவிப்படர்வதாக சங்கப்படல்கள் குறிப்பிடுகின்றன

91.   ஆரம் – சந்தன மரம் (Sandal – wood tree)

ஆரம் என குறிஞ்சிப்பாட்டில் அழைக்கபடுவது இக்கால சந்தனமரமஆகும்.

92.   காழ்வை – அகில் (Eagle – wood)

காழ்வை என குறிஞ்சிப்பாடில் கூறப்பட்டிருக்கும் அகில் முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெறுமதி மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும்.

அகில் சந்தன மர வகையைச் சார்ந்தது. அகில் கட்டை இலேசான இனிப்பும், கசப்பும் கலந்த சுவை உடையது. உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. சுமார் 60 முதல் 75 அடி வரையிலும் வளரக் கூடிய மரம். இம்மரங்களில் ஒருவித பிசின் இருக்கிறது. அதுவே அகில் எனப்படுகிறது.

93.   புன்னை – மரம் (Mast – wood)

புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்று பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்தூள் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை.

94.   நரந்தம் – நாரந்தை (Bitter Orange)

நரந்தம் என்பது ஒருவகை மலர்.இந்த நரந்தத்தைப் புல் என்பர்.

இது கிழக்கு இந்திய Lemongrass (மேலும் கொச்சி புல் அல்லது மலபார் புல் என்று அழைக்கப்படுகிறது),

வேறு பெயர்கள் :வாசனை புல் ,எலுமிச்சை புல் ,இஞ்சி புல்

லெமன் கிராஸ் ஆயில் இதனிலிருந்து தயாரிக்கபடுகிறது -இந்த லெமன் கிராஸ் ஆயில் இந்த புல்லை பதங்கமாதல் முறையில் தயாரிக்கபடுகிறது.

95.   நாகப்பூ (Iron wood of Ceylon)

நாகமரம் Mesua ferrea எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் வடிவம், இதன் இலையமைப்பு, நறுமணம் மிக்க பூக்கள், வலிமையான பலகை என்பவற்றுக்காக இது அயன மண்டலப் பகுதிகளிற் பயிரிடப்படுகிறது. இலங்கையின் அயன மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இது இந்தியாவின் அசாம் மாநிலம், தென் நேபாளம், இந்தோசீனா, மலாயத் தீபகற்கம் என்பவற்றிற் பயிரிடப்படுகிறது.

96.  நள்ளிருள்நாறி – இருவாட்சி (Big jasmine variety)

நள்ளிருள் நாறி, இருள்வாசி என்பது மருவி இருவாட்சி என வழங்கப்படுகின்றது. நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை செய்வது என்பதன் பொருள் படும்.  அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை அராபிய மல்லிகை.  கருமுகை என்றும் அழைக்கப்படும் இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப்பூ; அவ்வகைப்பூவைத் தரும் கொடி.

97.   குருந்தம் – புனவெலுமிச்சை (Wild lime)

எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. தென் இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் இது வளர்கிறது.இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை காணலாம் .

98.   வேங்கை – பெரிய மரம் (East Indian Kino tree)

வாட்டி எடுக்கும் கோடையிலும் பூமியின் வெம்மையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ சக்திகொண்ட மரம் இது.

பல ஆலயங்களில் தல விருட்சமாக வேங்கை மரம் இருக்கும். மருத்துவக் குணங்களில் அசாத்திய ஆற்றல் படைத்த வேங்கை மரத்தை நலவிருட்சம் என்றாலும் தகும்.

99.  புழகு – எருக்கம் பூ (East Indian satin – wood)

எருக்​கை சமஸ்க்ருதத்தில் அர்க என்பர். எருக்கு, அகன்று எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடியாகும். எருக்கு புதர் போன்று வளரும் ஒரு செடி. அதில் இரண்டு வகையுண்டு.  இரண்டு செடிகளும் பார்ப்பதற்கு ஒன்றுபோன்றே காணப்படும்.

(நன்றி! : மேல் உள்ள தகவல்கள் பெரும்பாலானவை  சேனைத்தமிழ் உலா என்ற முகநூல் பக்கத்தில் இருந்து எடுத்து கோராவுக்கு ஏற்றாற்போல் மாற்றித் தொகுக்கப்பட்டு உதவிய  திரு சுரேஷ்  System Engineer அவர்களுக்கு நன்றி.)

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096526
Users Today : 11
Total Users : 96526
Views Today : 15
Total views : 416657
Who's Online : 0
Your IP Address : 18.191.87.157

Archives (முந்தைய செய்திகள்)