17 Oct 2019 12:24 pmFeatured
மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதை முதலமைச்சர் பழனிசாமி நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால் முதலமைச்சர் பழனிசாமி ஊரைவிட்டு வெளியேற தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் சென்னையில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் திமுக மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் வந்தால்தான் திண்ணை ஞாபகம் வருகிறது என்று சாடிய முதலமைச்சர் பழனிசாமி மு.க.ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை வாங்கி ஏமாற்றுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டுவைத்திருப்பவர்கள் என்ற பட்டியலைக் கேட்டு பெற்றிருக்கிறார்கள். ஸ்டாலின் ஏன் அடிக்கடி லண்டன் போகிறார்?. எங்களை ஏன் வெளிநாடு போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்லியாகிவிட்டது. இப்போது நாங்கள் கேட்கிறோம் நீங்கள் பதில் சொல்லுங்கள். ஆனால், இதுவரை பதிலே கிடைக்கவில்லை.” என்று கூறினார்.
முதலமைச்சரின் விமர்சனத்துக்கு பதில் அளித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதை முதலமைச்சர் பழனிசாமி நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால் அவர் ஊரைவிட்டு வெளியேற தயாரா என்று சவால் விடுத்தார்.
நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக தளபதிசமுத்திரம், பொன்னாக்குடி, கே.டி.சி.நகா், பா்கிட்மாநகரம், சீவலப்பேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “கடந்த மக்களவைத் தோ்தலின்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியைத் தந்ததற்காக வாக்காளா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் ஆதரவால் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக திகழ்கிறது.
நான் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெறுகிறேன். இதைப்பற்றி விமர்சனம் செய்கின்றனர். நான் பெறும் மனுக்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படும். அதுவரை இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்படும். இதுபற்றி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து நிறைவேற்றி தருவோம்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 122 பேர் இருக்கின்றனர். அவர்கள் என்றாவது தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றது உண்டா? பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டது உண்டா? இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த துப்பில்லை. அவர்கள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்?
இந்த ஆட்சியைப் பார்த்து தொடர்ந்து நான் கேட்டுக்கொண்டிருப்பது என்னவென்றால், முதலமைச்சர் பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். எதற்கு வெளிநாடு சென்றீர்கள் என்று கேட்டால், முதலீடுகளை ஈர்ப்பதற்கு என்று கூறினார்கள். சரி, எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது, எத்தனை தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு பதில் இல்லை.
நான் வெளிநாடுகளுக்கு சென்றேன். சுற்றுலாவுக்காகவோ, பொழுதைபோக்குவதற்காகவோ போகவில்லை. ஜப்பானுக்கு போனேன். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு அங்கே சென்று ஜப்பான் அதிகாரிகளுடன் பேசி தேவையான நிதியைப் பெற்றுவந்தேன். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான நிதி பெற சென்றிருந்தேன். நான் சென்னை மேயராக இருந்தபோது, அமெரிக்காவில் மேயர்களுடைய மாநாடு நடந்தது. அதற்கு என்னை அனுப்பிவைத்தார்கள்.
தனிப்பட்ட முறையில் நான் வெளிநாட்டுக்கு போயிருக்கலாம். ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் போகவில்லை. தனிப்பட்ட முறையில் போயிருந்தால் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், முதலமைச்சராக, அமைச்சராக வெளிநாடு முதலீடைப் பெறப்போகிறோம் என்று கூறிவிட்டு போயிருக்கிறீர்கள். ஆகவே என்ன முதலீடு பெற்றீர்கள் என்று சொல்லவேண்டும் இல்லையா? ஆகவேதான், நாங்கள் நீங்கள் வெளிநாட்டுக்கு முதலீட்டைப் பெறச் சென்றீர்களா? அல்லது கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ய சென்றீர்களா என்றுதானே நாங்கள் கேட்கிறோம். ஆனால், இதைக்கேட்டால், ஸ்டாலினுக்கு ஸ்விஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். எட்டு ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருக்கிறீர்கள். போதாதற்கு மத்திய அரசின் துணை இருக்கிறது. அதனால், எனக்கு ஸ்விஸ் வங்கியில் பணம் இருப்பதை நீருபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் அரசியலில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு விலக தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் முதலமைச்சர் ஊரைவிட்டே ஓடத் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அண்மையில் ஸ்விட்சர்லாந்து, ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் முதல் பட்டியலை இந்திய அரசிடம் ஒப்படைத்த நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஸ்விஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால், முதலமைச்சர் ஊரைவிட்டே ஓடத் தயாரா?
மேலும் ஒரு சவால்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தாம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் விபத்தில் முதல்வரானவர். இதை சுட்டிக்காட்டினால் தனிப்பட்ட முறையில் ஆவேசமாக பேசுகிறார் அவர். இப்போது இன்னொரு சவால் விடுகிறேன்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது எம.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? அப்போதுதான் மக்களின் முதல்வர் யார் என்பது தெரியும்.
என்றும் சவால்
விடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தை
சூடாக்கியுள்ளது.