03 Nov 2019 6:26 pmFeatured
நேற்று(02.11.2019) தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக மலேசியா சகோதரிகள் 'பண்ணிசைமணி' முனைவர் பண்பரசி கோவிந்தசாமி மற்றும் 'இன்னிசை வாணி' கனிமொழி கோவிந்தசாமி ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழிசைப் பாடல் நிகழ்ச்சி பாண்டுப் பிரைட் மேனிலைப்பள்ளியில் வைத்து மாலை 4 மணிக்கு தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடந்தது.
மலேசியாவில் இருந்து மும்பை வந்து இசையின் வடிவில் தமது தமிழுணர்வை மும்பைவாழ்த் தமிழர்களிடையே பகிர்வதில் பேருவகை கொள்வதாகவும் மும்பை வாழ்த் தமிழர்களின் தமிழின்பால் கொண்டுள்ள பேரன்பையும் மொழிப்பற்றையும் அறிவதில் மனம் மகிழ்வதாகவும் இருவரும் கூறினர். திரையிசையில் மகிழ்ந்து கொண்டிருப்பவர்களை தமிழிசையில் திளைக்க வைப்பதே தங்களது நோக்கமெனக் கருதி ஆங்கிலத்திற்கும் அன்னிய மொழிகளுக்கும் தம்மை அர்ப்பணித்திருப்பவர்களின் நடுவில் புலம் பெயர்ந்து சென்றாலும் அன்னைத் தமிழுக்கு அணி செய்வதே தமது கடமையென வாழ்ந்து வரும் சகோதரிகள் இருவதும் மலேசியாவில் உள்ள வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
தமது அன்னையும் ஆசானுமாக இருந்து நடனம் இசை என்ற இரு ்துறைகளிலும் புகழ்பெற்றவர்களாக தங்கள் இருவரையும் வளர்த்து கற்பித்து சிறப்பு சேர்த்திருக்கும் தமது அன்னை தமது சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நடக்கவியலா சூழ்நிலையிலும் தமக்காக ஆற்றிய அன்புப்பணிகளை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்தனர்.
காற்றினிலே...அலைபாயுதே...கண்ணோடுகாண்பதெல்லாம் போன்ற பாடல்களையும் இது போன்று வெவ்வேறு பாடல்களோடு மகாகவி பாரதியார் கவியரசு கண்ணதாசனின் சில திரையிசைப் பாடல்களையும் பாடி பார்வையாளர்களை பெரிதும் மகிழ்வித்தனர்.
மன்ற செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வே.சதானந்தன் நன்றியுரை ஆற்றினார்.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆலோசகர் மிக்கேல் அந்தோணி திரையிசைப் பாடகர் டி.எம்.எஸ்.நரசிம்மன், ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தலைவர் பொ.வெங்கடாச்சலம் மலாடு தமிழ்ச்சங்கத் தலைவர் எல்.பாஸ்கரன் தமிழ்தேசியம் அ.கணேசன், தமிழ் காப்போம் கவிஞர் இறைசா.இராசேந்திரன், தமிழறம் இராமர் மன்றத் துணைச் செயலாளர் பொற்செல்வி கருணாநிதி, துணைப் பொருளாளர் அந்தோணி சேம்ஸ், மெஹபூப் சேக், பாலமுருகன், எஸ்.பெருமாள், பேராசிரியர் பிரபு முத்துலிங்கம், கவிஞர் பாபு சசிதரன்
மலாட் தமிழ்ச்சங்கம் முருகன், அ.ரமணி, கவிதா, அலி, சங்கர் சல்மான், மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் தமிழ் ஆர்வலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.