06 Nov 2019 1:10 amFeatured
தேவதாசன் அவர்கள் சிலகாலமாக உடநிலை குன்றி வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தார் இந்நிலையில் இன்று 05.11.2019 மாலை அவரது உயிர் பிரிந்தது.
வி.தேவதாசன் அவர்கள் பாண்டுப் பகுதியில் பிரைட் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியை துவங்கி திறம்பட நடத்தி வந்தவராவார். ஆங்கில பள்ளி மட்டுமின்றி, தமிழ் மாணவர்கள் தாய்மொழியில் கல்விகற்க தமிழ் வழிகல்வி வசதியும் இந்த பள்ளியில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுப் பகுதி மாணாக்கர்கள் மட்டுமின்றி அம்பர்நாத்,உல்லாஸ்நகர், ஷாஹாட்,அம்பிவிலி,மோனா பகுதியிலிருந்தும் மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகிறனர்.
வாழ்க்கை சிறு குறிப்பு
திரு.தேவதாசன் அவர்கள் நெல்லை மாவட்டம் பரப்பாடி, இலங்குளம் ஊரை சார்ந்தவராவார். 1951 ம் ஆண்டு மும்பை வந்த இவர் ஆரம்பத்தில் (1952 -56 ) பிஷன் (Bishen) சில்க் மில்லில் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் 1956 - 57 களில் மும்பை துறைமுகத்தில் டெலி கிளார்க் ஆகவும் பின்னாளில் 1959 வரை பெஸ்ட் பேருந்தில் நடத்துனராக பணியாற்றியவர்.
தனது அயறாத உழைப்பால் படிப்படியாக தன் வாழ்வில் சிகரத்தை தொட்டவர்.
பொற்கோ போன்றவர்களுடன் இணைந்து மும்பையில் திமுகவில் பெரும்பணியாற்றியவர். மும்பை புறநகர் திமுகவின் அவைத் தலைவராக செயல்பட்டவர். இவரது செயல்பாட்டிற்காக
2018ம் ஆண்டு திமுக, முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தது
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் வி.தேவதாசன் அவர்களால் 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மன்றத்தில் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்ற அவரது கனவைஅவரது மகன் ஜேம்ஸ்தேவதாசன் அவர்ளால் நிறைவேற்றப்பட்டது
இதற்காக பெங்களூரில் அமைந்துள்ள சிலையை போலவே அரை டன் எடையும், 5 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவர் சிலை சென்னையில் தயாரிக்கப்பட்டு. மன்ற வளாகத்தில் 2017 செப்டம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டது.
பாண்டூப்பில் உள்ள பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் விருது பெற்றமைக்கு வாழ்த்திய திமுக பொருளாளர் துரைமுருகன்
பெரியார் விருது பெற்றிருக்கிற மும்பை தேவதா சன் அவர்கள், அவர்களை நான் சுமார் நாற்பது ஆண்டு காலமாக நான் அறி வேன். மராட்டிய மாநிலத்தில் தமிழரு டைய பாதுகாவலானாக இருக்கக் கூடியவர். தமிழர்களுக்கென்று பள்ளி களை ஏற்படுத்தியவர். மராட்டியத்தில் இருக்கக் கூடிய குழந்தைகள் தமிழ் மறந்து விடக் கூடாது என்பதற்காக தமிழ்ப் பள்ளியை நிறுவியவர். இளம் பிராயத்தில் ஓடியாடி கழகப் பணி ஆற்றியவர். அண்ணாவிடத்திலே விருது பெற்றவர். கலைஞரிடத்திலே மதிப்பு மதிப்பெண் பெற்றவர். நன்கு அறிமுகமானவர். எனவே அவர் இந்த விருது பெறுவதற்கு அவரை வாழ்த்து கிறேன்; பெருமைப்படுகிறேன் என அவர் வாழ்த்தியிருந்தார்
ஐயன் வள்ளுவர் சிலையை திறந்துவைத்து பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்
வள்ளுவரின் சிலையை இங்கே சிறப்பாக செய்து முடித்திருக்கின்ற நம்முடைய தேவதாசனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தேவதாசன் அவர்கள் தமிழ் மொழி, கட்சிப் பணியென, சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கல்வித் தந்தையாக இன்றைக்குக் குழந்தைகளுக்கு கல்வி ஆசானாக விளங்கிக் கொண்டிருக்கிறார். 1951 இல் முதன்முதலில் மும்பைக்கு வந்த தேவதாசன் அவர்கள், 1952 இல் தமிழ் மன்றத்தைத் தொடங்கி தமிழுக்கு சேவையாற்றி இருக்கிறார். இவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் யாரென்று கேட்டால், முத்தமிழ் காவலர். கி.ஆ.பெ.விஸ்வநாதன். ஒரேயொரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்…….
………திருமண நிகழ்ச்சி நடந்தால், அந்த மணமக்கள் பெரியவர்களிடத்தில் வாழ்த்து வாங்குவதுண்டு. அப்போது பெரியவர்கள், “பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழுங்கள்”, என வாழ்த்துவார்கள். அதன் பொருள் என்னவெனில், 16 செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என்பது. இப்போதெல்லாம் சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதால் யாரும் அப்படி வாழ்த்துவதில்லை. அதன் பொருளை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஒரு நூலில் குறிப்பிட்டார். 16 செல்வங்கள் என்பது, ‘மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ்’ ஆகியவை என்றுக் குறிப்பிட்டுள்ளார். அவர் வழியில் நம்முடைய தேவதாசன் தமிழ் மொழிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, தொடந்துப் பணியாற்றிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நல்லடக்கம்
திரு.வி. தேவதாசன் அவர்களின் பூதஉடல் வியாழக்கிழமை (07/1/2019) அன்று காலை 11 மணியளவில் பாண்டுப் பிரைட் பள்ளி வளாகத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலிக்காக வைக்கப்படுகிறது பின்னர் பவாய் ஹோலி டிரினிட்டி ஆலயவளாகத்தில் பகல் சுமார் 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
என அவரது மகன் ஜேம்ஸ் தேவதாசன் தெரிவித்துள்ளார்
தென்னரசுவின் இரங்கல்
பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் பெரும் இலக்கிய விழாக்களை நடத்தி வந்தவர் பெரியவர் திரு.வி,தேவதாசன் அவர்கள். தமிழ் மொழி மற்றும் கல்விக்கு அரும்பணியாற்றியவர்
அவரது மறைவுக்கு தென்னரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது