23 Nov 2019 11:38 amFeatured
பாஜக-சிவசேனா அதிக இடங்களை வென்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனால் கடந்த 12ந்தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.
இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துகொண்ட சிவசேனா புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.
இந்த நிலையில், மராட்டியத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல- சரத்பவார்
பாஜகவை ஆதரிப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். பாஜகவோடு கூட்டணி ஏற்படுத்தியிருப்பது தமது உறவினர் அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவின் விளக்கம்
தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சார்பில் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் என்ற அடிப்படையில் அஜித் பவார் ஆதரவு கடிதம் அளித்ததால் பதவியேற்பு நடந்தது என்று பாஜகவின் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
கட்சியுடன் குடும்பமும் உடைந்தது
தேசியவாத காங்கிரஸ் கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டதாக கட்சி தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.