08 Dec 2019 10:10 amFeatured
அலிசேக் மீரான்
செயலாளர், மும்பை புறநகர் திமுக
நெல்லை மாவட்டம் ஏர்வாடி தான் பேராசிரியர் சமீரா மீரானும் நானும் பிறந்து வளர்ந்த ஊர். என்னை விட இரண்டு வயது அவர் மூத்தவராக இருந்தாலும் எங்கள் நட்பில் அது எந்த இடையூறையும் ஏற்படுத்தியதில்லை.
பள்ளிப் பருவத்தில் இருந்த எங்களுக்கிடையேயான நட்பிற்கு அடித்தளமே திமுக வாக இருந்தது.
1971 பொதுத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக சுவர் விளம்பரங்கள் எழுத நானும் அவரும் ஏணியைத் தூக்கிக்கொண்டு சென்றதும், சுவர் சுவராக அவர் எழுதிய வாசகங்களும், அந்த நாட்களும் நினைவில் நிழலாடுகிறது.
மேடையில் பேசவேண்டுமென்றால் அப்படி ஒரு அலாதி பிரியம். பேரறிஞர் அண்ணாவின் மறைவையொட்டி நடந்த கூட்டத்திலும், காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவிலும் சமீரா மீரான் அவர்களின் பேச்சு பின்னாளில் அவரது பேச்சுக்களுக்கு கட்டியம் கூறுவதாகவே இருந்தது என்றால் அது மிகையாகாது.
அரசியல்,கலை,இலக்கியங்கள்,நாடகங்களில் அவர் அதிகம் நாட்டம் கொண்டவராகவே வளர்ந்தார்.
இவை எங்களது பள்ளி பருவ நாட்களின் நினைவலைகள்.
இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் சென்னை குடிபெயர்ந்தவர் சென்னை புதுக் கல்லூரியில் (New College) கல்லூரி படிப்பை தொடங்கி எம்.ஏ. மற்றும் எம்.எஸ்.சி என முதுகலை வரை பயின்றவர். ஆசிரியராக, சென்னையில் உதவி இயக்குனராக, சினிமா-நாடக வசன கர்த்தாவாக சிலகாலங்கள் தனது எண்ணங்களுக்கு தீனிபோடவர்
நான் தொழில் காரணமாக 1978 ல் மும்பையில் குடியேறினேன்.
1982 ல் மும்பைக்கு குடிபெயர்ந்த பேராசிரியர் சமீரா மீரான் முருகப்பா நிறுவனங்களில் ஒன்றான கார்போராண்டம் யுனிவர்சலின் Carborundum Universal Ltd, (Murugappa Group) முகவராக (Agencies) தொழில் நடத்திக்கொண்டிருந்தார்.
பள்ளி நாட்களுக்கு பின் மும்பை வாழ்க்கை தொடக்கத்திற்கும் இடைப்பட்டக் காலத்தில் நாங்கள் சந்திக்க இயலவில்லை.
சிலகாலங்களுக்கு பின்னர் சமீபத்தில் மறைந்த திரு.தேவதாசன் அவர்களின் பிரைட் பள்ளியில் வைத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு 1986ல் நான் சிறப்பு விருந்தினராக சென்றபோது பேராசிரியர் சமீரா மீரானை அங்கே சந்தித்தேன். அப்பொழுது ”ஆம் நான் இப்பொழுது இங்கேதான் பணியாற்றுகிறேன்” என்றார். ஆத்மதிருப்தியாக இருப்பதாகச் சொன்னார் முன்பு ஒருமுறை எங்கள் சந்திப்பின்போது தொழிலில் வருமானம் வருகிறது ஆனால் ஆத்ம திருப்தி இல்லை என்று சொன்னதை நினைத்து பார்த்தேன். சொந்த தொழிலில் இல்லாத ஆத்மதிருப்தி ஆசிரியர் பணியில் அவர் அடைந்ததை எண்ணி வியந்தேன்.
எங்கள் தொடர்பு மீண்டு,ம் துளிர்விட ஆரம்பித்தது. அவரும் ஆசிரியர் பணியுடன் வழக்கம் போல இலக்கிய கூட்டங்கள், பட்டிமன்றங்கள், தமிழ் அமைப்புகளின் தொடர்பு எனவும் மும்பை புறநகர் திமுகவின் துணைச் செயலாளர் என தனது உள்ளக்கிடக்கைகளுக்கு உரமிட்டுக்கொண்டே செல்ல, ஒரு காலகட்டத்தில் மும்பையில் நடக்கும் விழாக்களில் முழுவதுமாக வியாபித்திருந்தார்..
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் ஆரம்பித்தது முதல் தலைவராக அவரது பணி அளப்பரியது. பல எழுத்தாளர்களை எழுதவும் நூல் வெளியிடவும் ஊக்குவித்தவர். ஊக்குவித்ததோடு மட்டுமின்றி பிழை திருத்தம் முதல், புத்தகம் வெளியிடும் வரை முழு ஏற்பாடுகளையும் ஈடுபாட்டோடு செய்து வந்தவர். மும்பையில் இருந்து வெளிவந்த பல பத்திரிக்கைகள் (தினபூமி,தமிழ்டைம்ஸ் போன்ற) சிறப்புற வெளிவர அதன் ஆசிரியர் குழுக்களுக்கு அறிவிக்கப்படாத ஊதியம் பெறாத ஆசானாக விளங்கியவர் சமீரா மீரான்.
பதவியில் இருப்பவர்கள், அரசியல் பின்புலம் இருப்பவர்கள் என தேடி பிடித்து அழைத்துவந்து கூட்டங்களை நடத்துவதுதான் வழக்கம் ஆனால் இவரோ தமிழை,தமிழர் பண்பாட்டை போற்றுவோரை, திராவிட கொள்கையில் பற்றுக்கொண்டோரை, குறள் வழி நிற்போரை அழைத்து வந்து கூட்டங்களை நடத்தியவர். பாவலர் அறிவுமதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், உமாபதி போன்றோரை விரும்பி அழைத்து கூட்டங்களை நடத்தியவர், கவிஞர் இன்குலாப் அவர்களை அழைத்து கூட்டம் நடத்தியதோடு அவரது பைந்தமிழர் வாழ்க்கை முறை நாடகத்தை மும்பையில் நடத்தியவர்
கட்டபொம்மன் உள்ளிட்ட பல புனைப் பெயர்களில் பத்திரிக்கைகளில் எழுதி வந்தவர்.
ஈழ மக்களின்பால் பேரன்பு கொண்டவர் ஈழ ஆதரவு கூட்டங்களில் கலந்து கொண்டதோடு மற்றுமின்றி கூட்டங்களை நடத்தியவர்.
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு அதிகமாக மத ஈடுபாடு கிடையாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள்,மதம், ஏழை-பணக்காரன் என பாகுபாடு பாராமல் ஆத்மார்த்தமாக பழகக்கூடியவர். மும்பையில் அவரது அரசியல் பணியும் சிறப்பானது. மும்பையில் திமுக, இலக்கிய வட்டம், ஆசிரியர் வட்டம், நட்புகளுக்கும் என்போன்றோருக்கும் அவரது மறைவு பேரிழப்பே!