08 Dec 2019 10:38 amFeatured
முனைவர் வதிலை பிரதாபன்
தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம்- மகாராட்டிரா
"இயங்காதிருப்பதைவிட இல்லாதிருப்பதே மேல்" என்ற ஒற்றைச் சொற்றொடரான 'வார்த்தை சித்தர்' வலம்புரி ஜான் அவர்களுடைய உரையை தம் மனதின் ஆழத்தில் பதிந்து வைத்ததோடு அவ்வப்பொழுது எங்களிடம் பகிர்ந்து வந்த அண்ணன் சமீரா அவர்கள் ”இல்லாமல் இருந்தும்” கூட எங்களையெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் மருத்துவச்கிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தருணத்தில் கூட தான் கலந்துக்கொள்வதாக கொடுத்த வாக்குறுதி பொய்த்துவிடக் கூடாது எனக் கருதி சென்னையில் இருந்து மும்பை வந்து மும்பைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாவேந்தரது புகழ்பாடும் பட்டிமன்றத்தில் நடுவர் பொறுப்பேற்று தமது தமிழ்ப் பணியை மெய்ப்பித்தவர்.
எந்த மேடையாக இருந்தாலும் தமது உரையைத் தொடங்குவதற்கு முன்,
'என்னை தரணிக்கு அறிமுகப் படுத்திய என் தாய்க்கும்
இத் தரணியை எனக்கு அறிமுகப் படுத்திய என் தாய் தமிழுக்கும் முதல் வணக்கம்'
என்று சொல்லிய பிறகே தனது பேச்சை தொடங்குவதுண்டு. இது இதுவரை வேறு எவரிடமிருந்தும் நான் கேட்காத ஒன்று .
நிறைய படித்தவர் எனினும் தன்னடக்கம் மிகுந்தவர். கொட்டிக்கிடக்கும் அன்புக்கு சொந்தக்காரர். பழகுவதற்கு இனியவர். இனம், மதம் தரம், நிறம், உயர்வு தாழ்வு என்ற எவ்வித வேறுபாடுகளுக்கும் உட்படாது 'மனிதம்' என்ற ஒற்றைச் சொல்லுக்குள் தம்மை இணைத்துக்கொண்டு மும்பை மண்ணில் தமிழ் வளர்க்க அரும் பாடு பட்டவர்.
இருபதாண்டு காலமாக மன்றத்தின் தொடக்கத்தில் இருந்தே நான் அவரோடு இருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாக மன்றத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று மும்பையின் அனைத்துத் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதும், அவரோடு இணைந்து பணியாற்றியதும் எவருக்கும் கிடைத்தற்கரிய பேறாகவே கருதி நான் பெருமைப் படுவதுண்டு.
அமைப்பு சார்ந்து அவர் என்னிடம் ஏற்படுத்திய தாக்கததை விட அன்பு சார்ந்து ஏற்படுத்திய தாக்கம் என்னை இன்றும் கண்ணீர் சிந்த வைக்கின்றது.
'தம்பி' என்று அவர் அழைக்கின்ற அழைப்பு இன்னும் என் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
திறமைக்குரியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உயர்வுக்கு பெரும் பங்காற்றி முன்னிறுத்துவதில் அவருக்கு நிகர் அவரே!
என்னை நான் அறிந்து கொண்டதைவிட அதிகம் அறிந்து கொண்டவர் அவரே! இறுதியாக கலந்து கொண்ட மன்றக் கலந்தாய்வுக் கூட்டத்தில் 'நான் ஊருக்குப் போகின்றேன் அனைவரும் தம்பிக்கு உறுதுணையாக இருங்கள்' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதுதான் மன்றம் நடத்திய அவரது இறுதிக்கூட்டம். ஊருக்கு என்று சொன்னார் இப்படித் திரும்பி வர இயலாத ஊர் என்று சொல்லாமல் போய்விட்டார்.
அவர் அறிந்தும் அறியாமலும் அவரிடமிருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டேன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.
அந்தப்பாடம், இந்த மன்றத்தின் தலைமை ஏற்றிருக்கும் எனக்கு பல வகைகளில் உதவும்; எனது ஒவ்வொரு செயலிலும் அவர் நிறைந்திருப்பார்; என்று கூறி அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் முறையில் எனது பணிகளை தொடரவே விரும்பி நிறைவு செய்கின்றேன்.