08 Dec 2019 10:54 amFeatured
ந. வசந்தகுமார்,
திமுக இளைஞர் அணி அமைப்பாளர்-மும்பை மாநிலம்
அன்பு அண்ணன் பேராசிரியர் சமீரா மீரான் அவர்களை பற்றி என்னுடைய தாழ்மையான கருத்துக்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன் .என்னுடைய அரசியல் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கு அண்ணன் சமீரா மீரான் அவர்களுக்கு இருக்கிறது.என்னை அரசியலில் வளர்த்தெடுத்ததிலும் வார்த்தெடுத்ததிலும் பேராசிரியர் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
கழகத்தில் எப்பொழுதெல்லாம் நண்பர்களிடையே,தோழர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் தங்களுடைய பிரச்சனைகளை பேராசிரியர் அவர்களிடம் தெரிவித்து அவர்களிடம் ஆலோசனை பெற்று பலர் அந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். அந்த வகையிலேயே எனக்கும் பிவண்டி நண்பர் ஒருவருக்கும் இருந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக மாற கழகத்தவரிடையே பிணக்கு ஏற்படுவதை தடுக்கும் பேராசிரியரின் முயற்சியில் அவருக்கும் அந்த நண்பருக்கும் மிகப்பெரிய இடைவெளி விழுந்து, பேராசிரியர் அவர்களை தகாத சொற்களால் அவர் முகநூலில் விமர்சிக்க அந்த பிரச்சினை நீண்டுகொண்டே இருந்தது.
பேராசிரியர் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் இருந்த காலம் அது என்றாலும் என்னிடம் தம்பி என்னுடைய பிரச்சனையை நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் பிவண்டி கழக தோழரிடம் இணக்கமாக இருங்கள் என்று எனக்கு அறிவுரை சொன்னவர் அவர் அடிக்கடி எனக்கு அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருப்பார்.
என் போன்ற கழகத்தில் உள்ளவர்கள் கழக விசயங்களில் பிற நிர்வாகிகளிடம் தங்களது கருத்துக்களை கூற தயங்குபவர்களோ அல்லது தனிப்பட்ட விசயங்களில் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி அதற்கு வடிகால் தேடுபவர்களுக்கும் நல்வழிகாட்டியவர் .
கழகத்தில் உள்ளவர்களுக்கிடையே ஏற்படும் சிறு பிணக்கு, பிரச்சனைகளைக் கூட நினைத்து கவலைப்படுபவர், உடனடியாக பேசி அதனை நிவிர்த்தி செய்யவேண்டும் என்று நினைப்பவர், பெரும்மனம் கொண்ட அண்ணனை இழந்து வாடுகிறோம்.
அவரது மறைவு எங்களுக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய இழப்பு என்று தான் கூறவேண்டும்.
எப்பொழுது தொலைபேசியில் அழைத்தாலும் தம்பி வீட்டில் அனைவரும் நலமா பாப்பா நலமா என்று குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தன்னுடைய உறவு முறையை கூறி நலம் விசாரிப்பது அவர் வழக்கம் அந்த வகையில் என் துணைவியாரை தன் மகளாக அழைத்து என்னை அவரின் பாசத்திற்கு அடிமையாக்கியவர்.
பேராசிரியர் அவர்களை கடைசியாக கழகத் தோழர் பழனி அவர்களின் இல்லத் திருமண விழாவில் சந்தித்தது தான். அன்று கூட அவர் மும்பை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற இருந்த ஒரு பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் மருத்துவ மனையிலிருந்து தன்னுடைய உடல்நலத்தைக்கூட பொருட்படுத்தாமல் வந்து கலந்து கொண்டார். மும்பை தமிழ் மக்களின் மீதும் தமிழ் அமைப்புகளின் மீதும் எந்த அளவுக்கு அவர் பிரியம் கொண்டிருந்தார் என்பதை நான் உணர்ந்த நாள். ஆனால் அதுவே அவரை கடைசியாக பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
அவருடைய எண்ணமெல்லாம் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதுதான்.
அந்த எண்ணத்தை நிறைவேற்றிட அனைத்து கழகத் தோழர்களும் மும்பை வாழ் தமிழ் மக்களும் பேராசிரியர் மீது அன்பு கொண்டோரும் உழைப்போம்! உழைப்போம்! என உறுதி எடுத்துக் கொள்வோம்.மும்பை திமுக இளைஞர் அணியின் சார்பில் பேராசிரியர் அவர்களின் நினைவு நாளில் புகழ் வணக்கம்