29 Dec 2019 5:49 pmFeatured
சிறுகதை - வே.சதானந்தன்
நான், எனது பாட்டி வீட்டிற்கு எப்போது சென்றாலும், அங்கு எனக்கென்று ஒரு நட்பு வட்டம் காத்திருக்கும், பாட்டியை சம்பிரதாயப் பார்வை பார்த்து விட்டு, சைக்கிள்களை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் பகல் காட்சியோ , முதல் காட்சியோ , களக்காடு பாக்கியலட்சுமி தியேட்டரில் பார்த்து விட்டு, பஸ்ஸ்டாண்ட் அருகே புகாரி ஹோட்டலில் பரோட்டா சால்னா சாப்பிடவில்லையென்றால் அன்றைய பாட்டி வீட்டு விசிட் முழுமை பெறாது.
அன்றும் அப்படித்தான். நான் சென்றது ஒரு நாள் விசிட் என்பதால் பாட்டியிடம் சொல்லிவிட்டு, மதியமே வீட்டுக்கு கிளம்பினாலும் திரைப்பட நினைவும் பரோட்டா சால்னாவும் மனதை பாடாய் படுத்த, பகல் காட்சி பார்த்துவிட்டு பரோட்டா சால்னா சாப்பிட்டு விட்டுதான் மாலை 7 மணி சிதம்பராபுரம்-வள்ளியூர் டவுன் பஸ்ஸில் ஏறி புறப்பட்டேன்.
பஸ் ஏர்வாடியைத் தாண்டி வள்ளியூர் நோக்கி போய்க்கொண்டிருந்தது. அருமையான, இதமான காற்று வீசியதால் தூக்கம் கண்ணைக் கட்டியது. ஒரு குட்டித்தூக்கம் போட்டவன், பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் சலசலப்பில் கண்விழித்து பார்த்தேன். பஸ் டயர் பஞ்சரானதால் பயணிகள் புலம்பிய படியே கிழே இறங்கிக்கொண்டிருந்தனர்.
நானும் பஸ்ஸை விட்டு இறங்கினேன். ஒரே குத்திருட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன் அது சம்பூத்து பகுதி. மனித நடமாட்டமே இல்லாத பகுதி. எனது மனதுக்குள் ஒரு இனம் புரியாத ஒரு கலக்கம் ஏற்பட்டது. நேரம் இரவு 8 மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது . தலைவர்களின் பெயர்களை பேருந்துகள் சுமந்து கொண்டிருந்த காலம்.
நாங்கள் வந்த கட்டபொம்மன் பஸ் கண்டக்டர் பின்னால் எல்லோரும் கூடி நிற்க, நாகர்கோவில் செல்லும் நேசமணி பஸ்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட நான்கு பஸ்கள் போய்விட, ஒரு வயதான பயணி கண்டக்டரிடம் “என்னய்யா, போர பஸ்ஸ கைகாட்டினாதான நிக்கும், நீர் பாட்டுக்கு வேடிக்க பார்த்துகிட்டு நிக்கேரு” என்றார், கோபமாக . “யோவ் பெருசு அவங்க அந்த பஸ்காரங்கையா நிக்கமாட்டானுவ, கட்டபொம்மன் வரட்டும் நிப்பாட்டுதேன்” என்று கண்டக்டர் அவரை சமாதானம் செய்தார்.
எனக்கும் கவலைதான். வேறு பஸ்பிடித்து வடக்கன்குளம் போகவேண்டும். அதற்குப் பிறகு ஒரு கி.மீ தூரத்திலுள்ள மேலக்கிளாக்குளம் கிராமத்திற்கு சைக்கிள்ல போகனும். தெரிந்தவர் கடைக்கு அருகில்தான் சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தேன். அவரும் வீட்டிற்கு போயிருந்தால், நடைபயணமாகத்தான் போயாகவேண்டும் என்ற பயம் எனது வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.
அரைமணி நேரத்திற்கு பிறகு நாகர்கோவிலுக்கான கட்டபொம்மன் பஸ் வர, அதில் ஏறி அமர்ந்தேன். காவல்கிணறு விலக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கு நின்றுக்கொண்டிருந்த ட்ரெக்கரில் ஏறி உட்கார்ந்தேன். கிளினர் கத்தி.. கத்தி.. ஆள் சேர்த்தான் ஒருவழியாக ட்ரெக்கர் புறப்பட வடக்கன்குளம் பேருந்து நிலையம் வந்து சேரும்போது இரவு பத்தரை மணி.
ஆலமர மூட்டில் சாய்த்துவைத்த எனது சைக்கிள் மட்டும் அனாதையாக நிற்க, அங்கே வந்த கார் டயர் பஞ்சர் ஒட்டும் மாசிலாமணி, ”என்ன சங்கர் வந்திட்டியா சைக்கிள உள்ளே தூக்கி வைக்கவா என்னண்ணு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்... அதுக்குள்ள வந்திட்ட” என்றவனிடம், ”சரி சரி நான் கிளம்புறேன்” என்றபடி புறப்பட. “ ரொம்ப இருட்டுவேற, காத்தும் பலமா அடிக்குது .. பார்த்து போடே..” என்ற மாசிலாமணியிடம் பதில் கூட கூறாமல். சைக்கிளில் ஏறினேன். தெருவழியாக சென்றால் தூரம் குறையும். ஆனால் தெரு நாய்கள் அதிகமாக நடமாடும் என்ற பயத்தால்,சங்கு நகர் நோக்கி மேற்கே சென்று, பின் கல் ரோடு வழியாக தெற்கு நோக்கி போகலாம் என்று சைக்கிளை ஓட்டினேன்.
ரோட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரு கம்பத்தில் பல்ப் எரிந்து ஒளியை துப்பிக்கொண்டிருந்தது. கன்கார்டியா பள்ளி வளாகம் முடியும் வரை சைக்கிளில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி, மனதிலும் எந்த ஒரு சலனமுமின்றி நிதானமாகத்தான் வந்தேன், சைக்கிள் டைனமோ லைட்டும் தெரு விளக்கும் துணையாக இருந்தன. ஆனால், அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்கவில்லை. அங்கிருந்து கொஞ்ச தூரம் போன பிறகு தெரு விளக்கு ஒன்று கூட என் கண்ணில் படவில்லை. டைனமோ லைட்டு மங்கலாத்தான் இருந்தது. பாதையின் இரண்டு பக்கமும் ஒரே இருட்டு. மேல் காற்று(மேற்கிலிருந்து) ஓங்கி வீசுகிற சீசன் அது என்பதால், காம்பவுண்ட் தாண்டியவுடன் சைக்கிளை தெற்கு நோக்கி நகரவிடாமல் கிழக்கு நோக்கி தள்ளியது அந்தக் காற்று. அது எனக்கு பழகிய விசயம் என்பதால் ரேஸ் சைக்கிள் ஓட்டுபவனை போல குனிந்து கிட்டதட்ட ஹேண்டில் மீது படுத்துக்கொண்டு ஓட்ட, காற்றைக் கிழித்துக் கொண்டு சைக்கிள் வேகம் பிடித்தது.
செம்பிகுளம் போகும் அந்த ரோட்டில் இரு பக்கமும் ஓங்கி வளர்ந்த கள்ளி மரங்களும் அவற்றின் காவலுடன் உள்ள விளைகளில் அடர்ந்த புளியம் தோப்புகளும் புதிதாக, பகலில் வருபவர்களுக்கே அச்சமூட்டக்கூடியவை .
எதோ ஒரு கலக்கத்துடனேயே தெற்கு நோக்கி அரை பர்லாங் தூரம் சென்றதும் ஓடைப் பாலம் வந்தது. திடீரென்று . “விஷ்க்.” என்ற சப்தத்துடன் ஏதோ ஒன்று தன்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். சுதாரிக்கும் முன்பே தலையில் 'சென்னை"ப் பகுதியில் ஒரு மட்டையை கொண்டு யாரோ தாக்கியது போன்ற ஒரு உணர்வு. அந்த இடம் வலித்தது .. கண்களுக்குள் மின்னட்டம் பூச்சிகள் பறந்தன. பயம் என்னைப் பற்றிக் கொண்டிருந்ததால் நடந்தது என்னவென்று என்னால் உணரமுடியவில்லை. தரையில் கால்களை ஊன்றிய படி நின்றுக்கொண்டு, அங்கும் இங்கும் பார்த்தபடியே சற்று தலையின் சென்னைப்புறத்தை தேய்த்து விட்டுக்கொண்டேன். அடுத்த நொடியில் மீண்டும் கிழக்கிலிருந்து ”விஷ்க்.... விஷ்க்....” என்ற சத்தம். இந்த முறை சுதாரித்து தலையை தாழ்த்திக்கொள்ள தலையில் ஒரு சிறு முள் கீரல் பட்டது போன்ற எரிச்சல் ஏற்பட்டது. மீண்டும் சீட்டில் ஏறி சைக்கிளை ஓட்ட, ஓடைப்பாலம் அருகே இருக்கும் கல்லறை தோட்டமும் நினைவுக்கு வர. ”அப்படி ஏதும் இருக்குமோ ?, எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, அப்படி ஒண்ணும் இருக்காது” என்று நானே பதிலையும் சொல்லிக் கொண்டு சைக்கிளை செலுத்தினேன். ஆந்தைகள் அலறும் சத்தமும் வவ்வால்களின் சிறகடிக்கும் சத்தமும் என்னுள் பீதியை அதிகமாக்கின, எதோ ஒன்று பனைமரங்கள் மீது மோத, அதோடு ஒரு சலசலப்பும் சேர்ந்து கொள்ள , சலசலப்பின் ஊடே வரும் அந்த ஊழிச் சத்தம் என்னை இன்னும் பயமூட்டியது. தூரத்தில் வெள்ளையாக இரண்டு உருவங்கள். தயக்கத்தோடு நெருங்கியவன், தெற்கே ஓடைப்பாலத்தின் மேல் இருபுறமும் உட்காரும் உயரத்திற்கு திண்ணைப் போல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் திண்டுதான் இருட்டில் வெள்ளையாக தெரிந்திருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு சற்று நிம்மதியானேன். ஆனால், இப்போது ஒரு வெள்ளை உருவம் கீழே தெரிகிறது. பாலத்தின் திண்டின் கீழ் பகுதியில் வெள்ளை வேட்டியால் யாரையோ மூடிப்போட்டிருந்தது போலிருக்கிறதே, அது, அது ...? வேட்டி காற்றில் படபடத்தது. அதை என்னவென்று பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. மனதில் பயம் கூட கூட படபடப்பும் அதிகரித்தது. சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு பாலத்தை கடந்தேன். தெற்கே ”கண்ணாடியார்” தோட்டத்தின் கேட் தெரிந்தது தோட்டத்தின் நடுவே உள்ள மோட்டார் ரூமில் ஒரு குண்டு பல்ப் மின்னிக் கொண்டிருந்தது. அப்பாட!, அப்போதுதான் மனம் சற்று ஆறுதல் அடைந்தது. ஆனால் அந்த கேட்டை நெருங்கவும் பல்ப் படீரென்று வெடித்து தன் உயிரை விடவும் சரியாக இருந்தது. ”ஷ்.ஷ்... உய்ங்... உய்ங்..”. என்று காற்று பரம்பரமென்று வேகமாக வீசியது.. காற்றின் சீற்றம் அதிகமாக ,அதிகமாக. சற்று தொலைவிலிருந்து என்னை நோக்கி ”கீ...ச்... கீ...ச். கீ...ச்” என்ற சத்தம் உச்ச ஸ்தாதியில் வந்துகொண்டிருந்தது நடப்பது என்னவென்று அறிய முடியாமலோ, விரும்பாமலோ கால்களில் ஒரு வித பாரம் ஏறி சைக்கிளை பறக்கவைத்தது. வேகம்... வேகம் என்று மனதில் சொல்லிக்கொண்டே வேகமாக சைக்கிளை ஓட்டினேன். ... ”கீ...ச்... கீ...ச். கீ...ச்” சத்தமும் ஒரு வித ஓலமும் தன்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். சட்டென்று கண்களை இருக்க மூடிக்கொண்டு இன்னும் வேகமாக சைக்கிளை மிதித்தேன். திடீரென்று யாரோ சைக்கிளை தள்ளிவிட்டது போன்று ”டப் ” என்ற சத்தத்துடன் சைக்கிள் ஒரிரு நொடி மேலெழும்பி, வானத்தில் பறந்து, மீண்டும் தரையைத் தொட்டு வேகமெடுத்தது. அந்த அதிர்ச்சியில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த சைக்கிள் டைனமோவும் உயிரை விட்டது. அப்போது, தோட்டத்து தகர கேட்டில் யாரோ கல்லை கொண்டு வேகமாக வீசியது போன்று ”டமா...ர்” என்று ஒருசத்தம். ”கீ...ச்... கீ...ச். கீ...ச்” சத்தமும் என்னை நெருங்கிவிட்டது. என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. கண்களை இருக்கமாக மூடிக்கொண்டேன். அப்போதுதான் உச்சகட்டமாக அந்த ‘கீச் , கீ...ச்” சத்தம் வந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த சத்தம் என்னைக் கடந்து எனக்குப் பின்னால் கரைந்துக்கொண்டுசென்றது. பின்னால் திரும்பி பார்க்கும் எண்ணமோ, மனோதிடமோ கொஞ்சமும் எனக்கு இல்லை. டைனமோ வெளிச்சமும் இல்லாததால், இருட்டு பழகிய பாதை என்பதால் எப்படியோ தட்டுத் தடுமாறி போய்க்கொண்டிருந்தேன். என்னவோ நடக்கப் போகிறது என்று உள்மனம் சொல்லிக்கொண்டே வந்தது. எப்படியானாலும் வீட்டை நோக்கிதான் போயாகவேண்டும் பின்னோக்கி போக முடியாது.
”அப்பனே, சுடலை சாமியே காப்பாத்தும்” என உதடுகள் முணுமுணுத்தபடியே வர, ஊரை நெருங்கிவிட்டோம் என்று நினைத்த படியே செம்பிகுளம் சாலையிலிருந்து மேலக்கிளாக்குளம் செல்ல மேற்கு நோக்கி பிரியும் மண்சாலையில் சைக்கிளை திருப்பினேன். சாலையில் மாட்டுவண்டி மற்றும் ட்ராக்டர்கள் சென்று பதிந்த இரட்டைத்தடம் மட்டும் என் கண்களுக்கு இருட்டில் இரண்டு வெள்ளை கோடுகளாக தெரிந்தது. மனம் முழுக்கப் பரவியிருந்த பயம் என்னை அழுத்த, சரியான பாதையில் எனது சைக்கிள்தான் வழி நடத்தியதோ என்னவோ, என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே சரியாக போய்க் கொண்டிருந்தேன். வீட்டிற்கு போகும் வழியில் உள்ள எனது குலதெய்வம் சுடலைமாட சாமி கோவில் கண்ணில் தென்பட, மனதில் வேண்டிக்கொண்டேன் . எப்படி வந்து சேர்ந்தேனோ தெரியவில்லை, ஒரு வழியாக வீட்டை அடைந்து விட்டேன். என் வீட்டில் அம்மா எனக்காக காத்திருக்க, எனது கோலம் கண்டு திகைத்தாள். “என்னடா கண்ணா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?“ என்றாள் பதறியபடி. சற்று நேரம் வாய்த் திறந்து எதையும் சொல்லமுடியாமல் மரம்போல நின்றேன். அம்மா என்னிடம் “என்னடா எதையாவது பார்த்து பயந்திட்டியா ?” என்றாள் வாஞ்சையாக. என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், சற்று நிதானத்துக்கு வந்து குளித்துவிட்டு வந்தவன் காய்ச்சல் அடிப்பது போல் உணர்ந்தேன். கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தேன். உடம்பு நன்றாக சுட்டது. அந்த கீச் கீச் சப்தம் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இரவு தூக்கத்திலும் அனற்றிக்கொண்டிருந்தேன். அம்மா என் நெற்றியில் திருநீர் இட்டு ”சரி ஒண்ணும் ஆகாது, பயப்படாதே” என்றாள். இரவு முழுக்க நல்ல காய்ச்சல்.
காலையில் அம்மா பள்ளிக்கு செல்லவேண்டாம் என்றாள். எனக்கு பள்ளிக்கு சென்றே ஆகவேண்டும். ஏனென்றால் அக்கவுண்டன்சி சார் லீவில் சென்றுவிட்டு இப்போதுதான் வந்து வேகமாக பாடத்தை முடித்துக்கொண்டிருந்தார். அங்கு வாத்தியார் நடத்தும் அக்கவுண்டன்சி கணக்கு ஒருபக்கம் இருந்தாலும், சல்சலென ஒலிக்கும் ”சங்கவி” யின் கொலுசு சத்தம் என்னை பள்ளிக்கூடம் நோக்கி இழுத்தது .
அந்த சலங்கை ஒலியை கேட்டபடி அவள் நடைக்கு ஏற்றவாறு சைக்கிளை ”ஸ்லொ ரேஸில்” ஓட்டிக் கொண்டு அவளிடம் பேசிக்கொண்டே போவதை ஒருநாளும் என்னால் தவிர்க்க முடியாது.
காய்ச்சலோடு பள்ளிக்குப் புறப்பட்டேன். இரவு வந்த வழியே தான் பள்ளிக்கு போகவேண்டும் இது காலை நேரம் என்பதாலும், காதல் நினைவுகள் இருந்ததாலும் இப்போது தைரியம் தானாக வந்தது.
இருவரும் பேசிக்கொண்டே செம்பிகுளம் ரோட்டை அடைந்தோம். மேற்காற்றும் வீசிக் கொண்டிருந்தது அந்த ”கீச்... கீச்..” சத்தம் அப்போதும் வந்து கொண்டு இருந்தது. பேசிக்கொண்டே சென்றவனுக்குள் பகீரென்றது , உடலில் ஒரு உதரல். அதை வெளிக்காட்டாமல் அந்த இடத்தை அடைய, அதே உச்சகட்ட ”கீச்.. கீ....ச்” சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. பகல் என்பதால் சற்று தைரியத்துடன் நின்று கவனித்தேன்.
அங்கு புளிய மரத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஓர் பெரிய கிளையோடு, மேற்கிலிருந்து கிழக்காக செல்லும் இன்னொரு கிளை உரசி உரசி நன்றாக வழவழப்பாக இருந்ததை கவனித்தேன். அதிலிருந்து தான் அந்த கீச்.. சத்தம் வந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும், இரவு பயந்ததை எண்ணி எனக்கு வெட்கமாக இருந்தது. சரி அப்படியென்றால் ”டப்” என்ற சத்தம் அத்துடன் ”சைக்கிள் பறந்தது” எப்படி என்று யோசித்தேன். அந்த கேட்டைப் பார்த்ததும் அதையும் என்னால் யூகிக்க முடிந்தது ஆம் சைக்கிள் டயரில் ரோட்டிலுள்ள கல் பட்டு, அது கேட்டில் போய் பட்டு சத்தம் எழுப்பியுள்ளது. அந்த கல்மீது சைக்கிள் டயர் ஏறியதால் வேகத்தில் சைக்கிள் துள்ளி விழுந்துள்ளது என்பதையும் அந்த அதிர்ச்சியில்தான் டைனமோ லாக் விடுபட்டு டைனமோ வெளிச்சம் போயுள்ளது என்பதையும் உணர்ந்தேன். அந்த சல சலப்பு பனைமரங்களின் சலசலப்பு என்பதையும் புரிந்து கொண்டேன்.
பாலம் அருகே சென்றபோது அந்த வெள்ளை துணியால் மூடிய உருவம் கிடந்ததே , அந்த இடத்தை உற்றுப் பார்த்தேன். அங்கே ஒரு கிழிந்த யூரியா சாக்கு, முள்செடியில் சிக்கி படபடத்துக்கொண்டிருந்தது. கூவையோ, ஆந்தையோ பறக்கும் போது தன் தலையில் மோதியுள்ளது என்பதையும் உணர்ந்தேன்.
“அப்படியென்றால் பேய், பிசாசு என்ற அந்த பயம், என்ன ஒரு மடத்தனம், என்ன ஒரு அறியாமை ?!.என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
“வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வர, கொஞ்சம் சத்தமாகவே பாடினேன். இப்போது, இந்த இடத்தில் ஏன் அந்தப் பாடலை பாட வேண்டும் என்று சங்கவி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை! நானும் எதையும் சொல்லிக் கொள்ளவில்லை!!