08 Mar 2020 10:26 amFeatured
திமுக பொதுச்செயலாளர் மறைவுக்கு, மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் இரங்கல் செய்தி
திராவிட இயக்கப் பேராசான், பெரியார் பெருந்தொண்டர், அண்ணாவின் போர்ப்படை தளபதி, கலைஞரின் உற்ற நண்பர், இனமான சிங்கம், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தனது 98 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தவர் . அவர் மறைந்த செய்தி அறிந்து பெருந்துயரடைந்தோம். பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தனது பள்ளிப் பருவம் முதல் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கொள்கையில் பற்றுறுதி மிக்கவராக தமிழகமெங்கும் பயணம் செய்தவர். தமிழர்களுக்கு தன் பேச்சாலும், எழுத்தாலும் மொழிவழி இன உணர்வை வளர்த்தெடுத்த பெருந்தகை. தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ், தமிழர், இன நலனுக்காக ஒப்புக்கொடுத்தவர். திராவிட இயக்கத்தை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த பெருந்தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். இன உணர்வையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் தன் வாழ் நாள் இறுதி வரையிலும் கற்பித்துக் கொண்டேயிருந்த பேராசிரியர் அவர்.
1999 ஆம் ஆண்டு பேராசிரியர் அவர்களை மும்பைக்கு அழைத்து அவரது பவழ விழாவை மும்பை புறநகர் திமுக சார்பில் திருவாளர்கள் தேவதாசன், பொற்கோ,அப்பாதுரை,பேராசிரியர் சமீரா மீரான் ஆகியோருடன் , நானும் இணைந்து சிறப்பாக மூன்று நாட்கள் விழா எடுத்தது மறக்கமுடியாத நிகழ்வாகும் . அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு மட்டுமன்றி தமிழினத்திற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழப்பிற்கு மும்பை திமுக தோழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.