01 May 2020 3:56 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
குறுந்தொடர் கதை
அத்தியாயம்-4
இனிகோ, தன் கைப்பிடியை இறுக்கிப்பிடித்தான். பின்
கையிலிருந்த வாளை எடுத்து வீச ஆரம்பித்தான். எதிரிலிருந்த அமுதன் “என்ன வாளை இப்படியா சுத்தறது…” என்று கத்தினான்.
“டேய்.. இந்த நாடகம் குவைத்தில நல்லா நடந்தா தான் மற்ற அரபு நாடுகளிலேயும் போட முடியும். கொஞ்சம் நல்ல படியா ஒத்துழைங்கடா..” என்றான் டைரக்ட் பண்ணிக்கொண்டிருந்த குரு.
”எல்லாம் நல்லா சூப்பரா பண்ணிடலாம்டா.. கவலைப்பட்டாதே” என்றான் அமுதன். “கிழிச்சீங்க.. இன்னும் வசனத்தை கூட ஒழுங்கா மனப்பாடம் பண்ணலே.. அந்த லேடி கேரக்டர்.. கவிதா எங்கேடா?..” குரு அழாத குறையாக கேட்டான்.
கவிதா வெளியே நின்று தன் காதலன் சோமுவோடு பேசிக் கொண்டிருந்தாள். ”நானே இந்த டிராமாவை வச்சி கொஞ்சம் நாளை தள்ளிப்போட்டிருக்கேன். இதிலே வேற நாளைக்கே பொண்ணு பாக்க வாறாங்கண்ணு அண்ணன் வயிற்றிலே புளியைக் கரைச்சிட்டுருக்கான்.
சோமு. .ஒண்ணு பண்ணு.. சீக்கிரம் நான் குவைத்துக்கு போயிற்று வரதுக்கு முன்னாலே சீக்கிரம் ஒரு வேலையத்தேடிக்க.. இல்லேண்ணா .. நான் என்ன செய்ய.. ஒரு வருசமா சொல்லிட்டுருக்கேன். நீ சும்மா என்னையே சுத்திக்கிட்டுதிறியரே.. நான் என்ன சொல்றது வீட்டிலே..” கண்களைத் துடைத்துக் கொண்டாள் கவிதா.
“எனக்கு வேலை கிடைச்சு நான் போகாத மாதிரியில்ல கவிதா பேசிக்கிட்டிருக்கே..” சோமு வருத்தத்துடன் கேட்டான்.
”பாரு .. காதலிச்சிட்டோம்.. இனி ஒருத்தனை மனசிலே ஏத்துக்க முடியுமாங்கற பயத்திலே தான் இன்னும் …. பாரு சோமு.. எங்கேயாவது சென்னை மும்பாய் போ.. வேலை தேடு.. எங்க வீட்டிலே முடியாதுண்ணு சொன்னாலும் உங்கூட ஓடி வந்துடறேன்..
எவ்வளவு நாளைக்குத்தான் ஒழிச்சு ஒழிச்சு பாத்துகிட்டே திரியிறது.. எனக்கும் இந்த வருடத்தோட காலேஜ் முடியுது..
நீ எங்கேயாவது வேலை பாக்கிறண்ணு தெரிஞ்சாலே நான் வீட்டிலே கொஞ்சம் எதுத்துப் பேசலாம்.. எங்க அண்ணன் வேற அவன் பிரண்டு ப்ரசன்னாவிற்கு எப்படியாவது கட்டி வச்சிடணும்ணு ஒத்த கால்லே நிக்கிறான் நிலமைய புரிஞ்சிக்க ..:” திரும்பவும் கண்களைத்
துடைத்துக்கொண்டாள் கவிதா.
வெளியே வந்த குரு, “ கவிதா.. கொஞ்சம் சீக்கிரம் வரியா..சீக்கிரம் ரிகர்சலை முடிச்சிட்டு பாஸ்போர்ட் விசா வேலைகளுக்கு அலைய வேண்டியதிருக்கு..” என்றான் கொஞ்சம் உக்கிரமமாக..
‘ இதோ வந்துட்டேன் குரு.. சோமு … பாருப்பா.. எங்க அண்ணன் நம்ம ஆசையிலே மண்ணள்ளிப்போட்றதுக்குள்ளே ஏதாவது வேலைய தேடிக்க…” என்றவாறு உள்ளே வந்தாள் கவிதா.
“இனிகோ.. அடுத்த சீனைக்கொஞ்சம் கவனிச்சிக்கோ.. நான் அந்த டிராவல்ஸ் ஆபீஸிற்கு போய்ட்டு வந்துடறேன்.” என்று குரு கிளம்பினான்.
“ உள்ளூருக்குள்ளே ஒழுங்கா நடிக்க மாட்டாள்.. இதிலே வேற குவைத்திலே என்ன மண்ணள்ளிப் போடப்போறாளோ..” முணு
முணுத்துக் கொண்டே ‘காட்சி 6.. யாரெல்லாம்பா… “ சபதமெழுப்பினான் இனிகோ.
“டேய் நீங்க எல்லாம் சேர்ந்து என்னைக்கலாய்க்குறது தெரியுமடா.. குவைத்திலே நான் நடிப்பிற்கு பரிசு வாங்கிட்டு வர்ரேன் பாருங்கடா” என்று சொன்ன கவிதா.. ‘வா அமுதன்.. அடுத்த சீன் நமக்குத்தான்.. சும்மா கையெல்லாம் மேல வைக்காம டயலாக்கு பேசுடா” என்றாள் கவிதா.
ஆமா..உலக மகா பேரழகி.. எல்லாம் அந்த குருவச்சொல்லணும்..” என்றவாறு டயலாக் பேச ஆரம்பித்தான் அமுதன்.
” ஆமாம் அடுத்த சீன்ல யாரு.. எப்பா.. குரு இல்லேண்ணா எல்லாரும் ஆட்டம் போட ஆரம்பிச்சிருவீங்க…கண்ணன்.. வாங்க அடுத்த சீன்ல நீங்க தான் “ என்று கண்ணனை அழைத்தான். இனிகோ
அடுத்த காட்சிக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்த போது இனிகோவின் அருகில் வந்த கவிதா, “இனிகோ .. உங்க மாமா யாரோ துபாயிலே இருக்கதா சொன்னியே.. அவங்களால நம்ம குருவிற்கு ஒரு வேலை வாங்கித்தர முடியுமா?” என்று கேட்டாள்
”கேட்டுப்பார்க்கிறேன்.. சரி.. அடுத்த சீன்ல யாரு.. அமுதன் வாப்பா..” என்றான் இனிகோ..
”சார் .. இந்த நாடகத்துக்கு.. ஏதோ க்ரீடம் பண்ணச் சொல்லியிருந்தியளாம் ஆள் வந்துருக்கு.. என்றான் தாசன்.
வெளியே வந்த இனிகோ, “ கிரீடம்.. நல்லாத்தான் வந்திருக்கு.. ஆமாம் வேல், வில்லெல்லாம் பண்ணச்சொல்லியிருந்தோமே.. என்னாச்சு..தம்பி:”என்று கேட்டான் இனிகோ.
“ சார் இதக்கொண்டு காட்டிட்டு வரச்சொன்னாங்க.. மற்றதெல்லாம் எனக்குத் தெரியாது “ என்றான் வந்த ஆள்.
“ சரி . நான் பேசிக்கொள்கிறேன். இதை வச்சிட்டுப் போ.. “ என்றான் இனிகோ.