02 May 2020 10:33 amFeatured
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும்முகமாக நாடுமுழுவதும் விதிக்கப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு மே-3 தேதி முடிவடைய உள்ள நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளுக்கு பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நோய் தொற்று தீவிரமாகவே இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென சில மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். அதே சமயம், 40 நாள் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளோடு பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது, ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு ஊரடங்கு மே 4ம் தேதியிலிருந்து மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
3ம் கட்ட ஊரடங்குக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில், சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆரஞ்ச், பச்சை மண்டல பகுதிகளுக்கு மட்டும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 21 நாட்களாக புதிய நோய் தொற்று இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் பள்ளி, வழிபாட்டு தலங்கள் என நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ள சிலவற்றை தவிர மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கவும், பஸ் டிப்போக்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள்
* சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது.
* நாடு முழுவதும் மே 18 வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.
* ஓட்டல்கள், தியேட்டர்கள், உடற் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை.
* மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும். சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயக்க தடை தொடரும்.
* மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.
* சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏனைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்.
* சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.
* சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.
* அத்தியாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
* முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
* சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை.
ஆரஞ்சு வண்ண பகுதிகளுக்கான அறிவிப்புகள்
* ஆரஞ்சு வண்ண மாவட்டங்களில் வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும்.
* மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
* மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
பச்சை மண்டலங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்
* பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
* 4 சக்கர வாகனங்களில் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் 2 பேரும் செல்லலாம்.
* நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.
* பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி.
*கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகள் திறக்கலாம்.
முக்கிய விதிகள்
* அனைத்து மாநிலங்களிலும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தவித தடையும் இல்லை. காலி சரக்கு வாகனங்கள் இயங்கவும் தடை இல்லை.
* எந்த மாநிலத்திலும் சரக்கு போக்குவரத்து எல்லை தாண்டி செல்வதற்கும் அனுமதி.
* மே 3க்கு முன் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து செயல்களுக்கும் மீண்டும் ஒரு முறை அனுமதி பெறத்தேவை இல்லை. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:
* வெளிநாட்டு பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் இயக்கம் தொடர்பாக ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவை பின்பற்ற வேண்டும்.
* வெளிமாநில மக்கள் இயக்கம் தொடர்பான உத்தரவு செல்லும்.
* மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையில்லை.
* வெளிமாநில தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் ரயில் பயணம் மேற்கொள்ள தடை இல்லை.
* மாநில அரசுகள் இந்த உத்தரவை தேசியபேரிடர் மேலாண்மை சட்டப்படி கடுமையாக பின்பற்ற வேண்டும்.
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
* கொரோனா நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை அனைத்து பொது இடங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும் பின்பற்றுவதை தவறாமல் மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.
* இதை கண்காணிப்பதற்கு கலெக்டர்கள் அதற்கென சிறப்பு அதிகாரிகளை நியமித்து மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய அரசு உத்தரவுகளை முழுமையாக அவர்கள் பகுதியில் அமல்படுத்தும் பொறுப்பு சிறப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த அதிகாரிகளின் உத்தரவை அவரது கட்டுப்பாட்டிற்குள் வரும் அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் இயக்கத்திற்கு தேவையான அனுமதியை அவர்கள் வழங்கலாம்.
* இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதபடி அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பு அதிகாரிகள் மேற்கொள்ளலாம். குறிப்பாக ஊழியர்கள், பெரிய அளவிலான பொருட்கள் போக்குவரத்து, மருத்துவமனை விரிவாக்க கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகள் எந்தவித தடையும் இல்லாமல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா பரவல் தடுக்க பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்:
* முககவசம் அணிவது கட்டாயம்.
* சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* எந்த பொது இடத்திலும் 5 அல்லது அதற்கு அதிகமானவர்கள் கூட அனுமதி இல்லை.
* திருமணங்களில் சமூக இடைவெளியுடன் அதிகபட்சம் 50 பேர் வரை பங்கேற்கலாம்.
* இறுதிச்சடங்கில் அதிகபட்சம் 20 பேர் மட்டும் பங்கேற்கலாம்.
* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்.
* பொது இடங்களில் மது அருந்துதல், குட்கா, பான், புகையிலை பயன்படுத்த தடை.
* மதுபான கடைகள், குட்கா, பான், புகையிலை உள்ளிட்டவை விற்கும் கடைகளில் ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அவர்களும் 6 அடி தூரத்துக்கு ஒருவர் வீதம் சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
அரசு, தனியார் ஊழியர்களுக்கு பணியிடங்களில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்:
* பணியிடங்களில் முககவசம் அணிவது கட்டாயம். போதுமான முககவசங்கள் பணியிடங்களில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* பணியிடங்களிலும், கம்பெனி ஏற்பாடு செய்யும் வாகனத்திலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* உணவு இடைவேளையின் போது ஒரே நேரத்தில் எல்லா பணியாளர்களையும் சாப்பிட அனுமதிக்க கூடாது. ஷிப்டுகளுக்கு இடையே போதுமான இடைவெளி விட வேண்டும்.
* தெர்மல் ஸ்கேனிங், கை கழுவும் வசதி, போதுமான சானிடைசர் வசதி.
* ஆரோக்கிய சேது ஆப்பை அரசு, தனியார் நிறுவனங்களை சேர்ந்த எல்லா ஊழியர்களும் பயன்படுத்துவது கட்டாயம்.
* 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் வீட்டியே தங்கி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்கோ, அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கோ மட்டும் அவர்கள் வெளியே வரலாம்.