18 Jul 2020 12:50 amFeatured
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து திருக்குறள், சிலப்பதிகாரம், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு,பெரியார் சிந்தனைகள், தமிழக எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சியின பங்கு போன்ற பாடங்கள் நீக்கம்
இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட் பொது முடக்கத்தின் காரணமாக சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடங்களில் 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஜுலை 7ஆம் தியதி அறிவித்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை குறைக்கப்படும் பாடங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதில் “தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி” போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் பாடமும் இடம் பெற்றிருந்தது.
மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்ற போர்வையில் தமிழர்களின் பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பாடங்களையும், உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
தமிழ் தேசிய இனத்தின் வரலாறு, பண்பாட்டு அடையாளங்களையும், சிறப்புகளையும் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்வதுதான் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
உலகின் மூத்தமொழி என்ற சிறப்புக்குரிய தமிழ்மொழி, தமிழ்இனம் சார்ந்த பாடங்களை மீண்டும் இடம்பெறச்செய்து வரலாற்றுப் பிழை செய்வதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
என இந்தியப் பேனா நண்பர் பேரவை தலைவர் மா. கருண், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்