05 Aug 2020 12:45 amFeatured
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பிற்பகலில் (இந்திய நேரப்படி இரவு 9.30) மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. அப்பொழுது அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. உயிரிழப்பு, வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. இடிபாடுக்குள் மக்கள் சிக்கியுள்ளது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மக்கள் ரத்தம் சிந்தியபடி ஓடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன. பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்தது. சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தில் வெடி விபத்து நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளன.
துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், வெடி விபத்தை அடுத்து நகரத்தில் ஒரு கரும் புகை வெளியேறியதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்களில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காக தவிப்பதை காட்சிப்படுத்தியுள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தின் விளைவாக இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் லெபனான் ஊடகங்களின் ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனை நேரில் கண்டவர்கள் பெரும் சப்தத்துடன் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், ஒரு மைல் தொலைவில் இருந்த கட்டிடங்கள் கூட நடுங்கின என்றும் கூறுகின்றனர்.