27 Aug 2020 10:03 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
நான்காம் அத்தியாயம்- பாம்பிற்கு பயப்படவில்லையா?
படம் எடுத்த நல்ல பாம்பைக் கண்ட வசந்த், “இது என்னடா..? புதிய சோதனை … ? “ முணுமுணுத்துக் கொண்டு பின் வாங்கினான்.
“என்ன செய்யப்போகிறோம் என்றவாறு சுற்று முற்றும் பார்த்தான் நரேன்.
அவர்கள் இருவரும் ஒதுங்கி நிற்பதைக் கண்ட டிரைவர் கண்ணன், காரிலிருந்து இறங்கி வந்து, அருகில் கிடந்த கம்பை எடுத்து பாம்பை அடிக்க முயல, அது சீறி விட்டு, திரும்ப காட்டுக்குள் ஊர்ந்து மறைந்தது.
“இந்த காட்டுக்குள்ளே பாம்புகள் ரொம்ப சாதாரணம். ஒழுங்கா ஒங்க வேலய பாருங்க சார்” என்று சொல்லி விட்டு, கையிலிருந்த கம்பை தூக்கிப் போட்டு விட்டுத் திரும்பவும் காரை நோக்கி நடந்தான்.
“பாம்பு உன்னக் கண்டு பயந்து ஓடிப்போச்சி” என்று சிரித்தான் நரேன்.
“சும்மா விளயாடாதே. நரேன். ஒரு நிமிசம்.. அப்படியே ஆடிப்போயிட்டேன்” என்றவாறு கைக்குட்டையை எடுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டான் வசந்த்.
“சும்மா தேவையில்லாமல் நேரத்தை வீணடித்தது யார்? நீயா? நானா?
எப்போதும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தாய்..இப்ப என்னடாண்ணா.. நீ தான் இப்போ… நேரத்தை வீணடுத்துக் கொண்டிருக்கிறாய்…?” எரிச்சல் பட்டான் நரேன்.
”இவ்வளவு பக்கத்திலே கிடைக்கின்ற செடிக்காக ஏன் வீணா அலையணும்ணு நெனச்சேன்”? என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அருகில் இருந்த குளத்திற்கு நீர் பருக..புறாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தது.
திரும்பிப்பார்த்த நரேனிடம், “இப்பவும் புறாவை இரசிக்க ஆரம்பித்து விடாதே ராஜா..” என்று கிண்டலடித்தான் வசந்த்.
”நீ சொன்னாலும் சரி… சொல்லவில்லை என்றாலும் சரி.. நான் புறாவை இரசிக்கிறது என் சொந்த விசயம். என்னா அழகா இருக்கு பாரு…” இரசனையில் மூழ்கினான் நரேன்.
“சரி… சரி… வந்த வேலைய பார்ப்போம்” என்றான் வசந்த்.
”அதுவும் சரி தான். சரி நீ அந்த செடியை எங்கே பார்த்தாய்?”
”நாம் கேட்டிலே எண்டர் பண்ண இடத்திலே தான் தெரிந்தது..
ஆமா … அந்தச் செடி எப்படி இருக்குமுண்ணே?”
”எத்தனை தடவை சொல்லியாச்சு”! என்று ஆயாசப்பட்ட நரேன்
“செடியிலே மூன்று வகையா இலைகள் இருக்கும். ஒன்று தாமரை இலைகளின் வட்ட வடிவத்திலே இருக்கும். ரெண்டாவது இலை வாழை இலை வடிவத்திலே நீளமா இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி இலை வடிவத்திலே இருக்கும்….. மற்றபடி… பூக்கள் ஐந்து வகையாக இருக்கும்… ஒன்று தாமரை பூக்கள் வடிவத்திலே இளம் சிவப்பு நிறத்திலே இருக்கும். ரெண்டாவது பூ வாழைப்பூ வடிவத்திலே நீளமா மஞ்சள் நிறத்திலே இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி பூ வடிவத்திலே சிவப்பாக இருக்கும்….. நாலாவது பூ முல்லைப்பூ வடிவத்திலே சின்னதா வெள்ளை நிறத்திலே இருக்கும். ஐந்தாவது பூ ரோஜா பூ வடிவத்திலே நீல நிறத்திலே இருக்கும்…..” என்று தன் கையிலே இருந்த அலைபேசியைத் திறந்து அதிலே இருந்த படத்தைக்காட்டினான்.
“ம்…ம்… நான் பார்த்த செடியிலேயும் நிறைய வித்தியாசமான பூக்கள் இருந்தமாதிரி தான் இருந்தது.”
“சரி…சரி…எங்கே பார்த்தாய்?”
”இங்கே தான்… ஆஆங்… இந்த வேலியைத்தாண்டி அந்தப் பக்கத்திலே பார்த்த மாதிரி தான் ஞாபகம்..”
“ஆமா.. நரேன்… நான் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வந்தேன். நாம நேரடியா அந்தச் செடி இருக்கின்ற இடத்திற்கு தான் போகிறோமா.. இல்லை..” என்று இழுத்தான் வசந்த்.
“வசந்த்… சும்மா… நீ தான் நேரத்தை வீணடிச்சிக்கிட்டேயிருக்க.. மொதல்ல நீ பார்த்த செடியைக்காட்டு.. மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” எரிச்சல் பட்டான் நரேன்
“அதுவும் சரி தான்… வா வா…” என்று வேகமாக நடந்தான் வசந்த்.
பின்னால் வந்து கொண்டிருந்த நரேன் “ பாரு இன்னும் அந்தக் குளத்திலே புறாக்கள் என்ன அழகாக இங்குமங்கும்….” என்று சொல்லி முடிப்பதற்குள், “ எப்பா சாமி… ஆளை விடுப்பா.. நீயும் ஒம்புறாவும்… வந்த வேலையைப் பார்க்கலாம்” என்று குறும்பாக கையெடுத்துக்கும்பிட்டான் வசந்த்.
“சரி… எங்கே பார்த்தாய் …. அதச்சொல்லு மொதல்ல…”
“ ஆங்… அந்தா.. அந்தச் செடிதான்… பாரு… எத்தனை விதமானப்பூக்கள்… “ என்று பின்னால் பல செடிகள் அடர்ந்து இருந்த அந்த இடத்திற்கு வந்தவன், “ நரேன். பார். இதிலே நீ சொன்ன மாதிரி… முல்லைப்பூ… செம்பருத்திப்பூ எல்லாம் இருக்கிறதே” என்று அந்தச் செடியைக்காட்டினான் வசந்த்.
அருகில் வந்து பின்னால் இருந்த செடிகளை எல்லாம் பிரித்துப் பார்த்த.. நரேன், நெற்றியிலடித்துக்கொண்டே, “இவ்வளவு அழகா கிளிப்பிள்ளைக்குச் சொன்னா மாதிரி எவ்வளவு விரிவாகச் சொன்ன பிறகும்… வசந்த்… உன்னைக் கூட்டிக்கிட்டு வந்தேனே…. “ என்றுக் கத்தினான்
“என்னடா.. என்னாச்சு…. “
“ம்..ம்… மண்ணாச்சு… யேய்.. வசந்த்… இங்கே பார். முல்லைச் செடியும் செம்பருத்தியும் பக்கத்திலே பக்கத்திலே வளர்ந்து பின்னிக் கிடக்கிறதால் பல வகைப்பூக்கள் ஒரே செடியிலே வளர்ந்த மாதிரியிருக்கு…”கோபத்தில் காரை நோக்கி நடந்தான் நரேன்.
“ஏய் சாரிடா… வீணாக அலைய வேண்டாமே… நாம் தேடி வந்த செடி தான் இங்கேயிருக்குதேண்ணு நெனச்சிட்டேன்” அவனோடு ஓடினான். வசந்த்
திரும்பிப்பார்த்த நரேன் “ திரும்பவும் சொல்றேன்
கேட்டுக்கோ…”எத்தனை தடவை சொல்லியாச்சு”! என்று ஆயாசப்பட்ட நரேன் “ஒரே செடியிலே மூன்று வகையான இலைகள் இருக்கும். ஒன்று தாமரை இலைகளின் வட்ட வடிவத்திலே இருக்கும். ரெண்டாவது இலை வாழை இலை வடிவத்திலே நீளமா இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி இலை வடிவத்திலே இருக்கும்….. மற்றபடி…பூக்கள் ஐந்து வகையாக இருக்கும்… ஒன்று தாமரை பூக்கள் வடிவத்திலே இளம் சிவப்பு நிறத்திலே இருக்கும். ரெண்டாவது பூ வாழைப்பூ வடிவத்திலே நீளமா மஞ்சள் நிறத்திலே இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி பூ வடிவத்திலே சிவப்பாக இருக்கும்….. நாலாவது பூ முல்லைப்பூ வடிவத்திலே சின்னதா வெள்ளை நிறத்திலே இருக்கும். ஐந்தாவது பூ ரோஜா பூ வடிவத்திலே நீல நிறத்திலே இருக்கும்…..” என்று தன் கையிலே இருந்த அலைபேசியைத் திறந்து திரும்பவும் அதிலே இருந்த படத்தைக் காட்டினான்.
“இனியாவது குழப்பாமல்… அந்தக் கற்பக மின்னல் செடியைக் கண்டு பிடிக்க வா” என்றுக்கத்தினான் நரேன்…
”ஏய் சாரிடா….”
“போ… போ… நீயும் உன் சாரியும் … ஒழுங்காக.. நான் சொல்ற எடத்துக்குப் போகலாம்.” என்றான் நரேன்.
“சரி” என்று நரேனுடன் காரில் ஏறினான் வசந்த்.