21 Sep 2020 1:16 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
ஐந்தாம் அத்தியாயம் – பிரபுவின் சந்தேகக் கண்கள்….
அவர்கள் இருவரும் வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நரேன், “ வலது…. இடது…” என்று கண்ணனுக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தான்.
வசந்த், ’கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம்’ என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான்.
திடீரென்று பிரபுவிடமிருந்து அழைப்பு வர, “ அலை பேசியில் கொஞ்சம் தொடர்பு பிர்ச்சினையாக இருக்கிறது. சார். நானே உங்களை அழைக்கிறேன்” என்று தொடர்பைத் துண்டித்து விட்டு, வசந்தைப் பார்த்தான்.
“என்ன விசயம்”? என்று சைகையால் கேட்டான் வசந்த்.
“கண்ணன். தண்ணீர் கொண்டு வந்திருந்தீர்களே… கொஞ்சம் தண்ணீர்பாட்டிலைக் கொடுங்கள்” என்றான்.
கண்ணன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுக்க,
கண்ணனிடமிருந்து தண்ணீர் வாங்கிக் கொண்ட நரேன், “ கொஞ்சம் வண்டிய பக்கத்திலே நிறுத்துங்களேன்” என்றான்
“என்ன சார். இடம் வந்துடிச்சா” ? என்று கேட்டான்.
“இல்லப்பா… பிரபு சார் கிட்டே கொஞ்சம் பேசணும். சரியா தொடர்பு கிடைக்கமாட்டேங்கிறது..”
“சரி சார்” என்ற கண்ணன் வண்டியை அருகில், ஒரு மரத்தடியில் நிழலில் நிறுத்தினான்.
வசந்த் “வா … ஒரு புகை போடலாம். சிகரெட் வச்சிருக்கேயில்லையா?” என்றான் நரேன்.
”சார். நான் கொண்டு வந்திருக்கிறேன். தரட்டுமா?” என்று மேல் பையில் கைவிட்டான் கண்ணன்.
“இல்லேப்பா எங்க கிட்டே இருக்கு” என்று வசந்த் சொல்ல இருவரும் வண்டியிலேயிருந்து கீழே இறங்கினர்.
கொஞ்சம் தள்ளி வந்து நின்று “ வசந்த், வண்டியிலே, நாம் எங்கே போகிறோம் என்பதைக் கவனிக்க, தனிக் கருவி (ட்ராக்கிங் சிப்ஸ்) மாட்டியிருக்கிறது. நாம் எங்கே போகிறோம் என்பதைக் கவனிப்பதற்கு அவர் கண்ணன் கிட்டேயும் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.” என்றான் தாங்கள் பேசுவதைக் கண்ணன் கவனிக்கிறானா என்று…அவன் நின்ற இடத்தைப் பார்த்துக் கொண்டே… கண்ணன் தன்னுடைய அலைபேசியில் பேசிக்கொண்டே அவர்கள் நின்றதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதென்னடா… புதுசா ஒரு பிரச்சினை?’ வசந்த் நீளமாக மூச்சு விட்டான்
“ நான் இதெல்லாம் முந்தியே எதிர் பார்த்தது தான். ஆனா .. நம்ம மேல இவ்வளவு சீக்கிரமா சந்தேகப்ப்டுவார் என்று எதிர் பார்க்கவில்லை.. சரி… இனி என்ன செய்ய வேண்டுமென்பது தான் முக்கியம்”
“ஆங்… அப்புறம் இன்னொரு விசயம். எக்காரணம் கொண்டும் கண்ணன் இருக்கிற நேரத்திலே எதுவுமே பேசாதே… என்ன?” என்றான் நரேன்
“சரிப்பா… இனி என்ன செய்யலாம் என்று உத்தேசம்?” என்று கேட்டான் வசந்த்.
“ரொம்ப எளிமையான காரியங்கள் தான். ஏன் வீணாக இடியாப்பச்சிக்கலாக முடிகிற்து என்று புரியவில்லை… சே!. போனோமா? செடியைப் பறித்துக் கொடுத்தோமா… அந்த வெளி நாட்டுக்கார அமைப்பிற்கு நாலு கோடிக்கு விற்றோமா… ஆளுக்கொரு கோடியாக பிரித்துக் கொண்டு போனோமா… என்று இல்லாமல் இன்னமும் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம்…
வா… வசந்த்… இன்னும் ஒரு பிரச்சினையும் தொடங்கவில்லை என்றே வைத்துக் கொண்டே காரியங்களை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக செய்யலாம்.. ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்… இனி நாம் நல்ல தேர்ந்த நடிகர்களாக நடிக்க ஆர்ம்பிக்க வேண்டும்.. நாம் நேராக அந்த சித்தர் கல்லறைக்குப் போக வேண்டாம். நாம் கண்ணன் காரில் போய் ஒரு கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம் தங்குவோம். அங்கிருந்து மெதுவாக கண்ணனைக் கழற்றி விட்டு விட்டு.. மெதுவாக அங்கிருந்து அந்தச் சித்தரைப் புதைத்த இடத்தை தேடிப் போகலாம்.. “என்றான் நரேன்
“அது சரி தான். நரேன்.. ஆமாம் நாம் எப்படி கண்ணனைக் கழற்றி விடப்போகிறோம்?. ஏற்கனெவே பிரபு எப்படியும் நம்மை விட்டு விலகாதவாறு இருக்கும்படி முன்னேற்பாடுகள் எல்லாம் செய்திருப்பாரே.. ம்..ம்… சரி… நாம் முதலில் எந்த இடத்திற்கு போகிறோம். அதை முடிவு பண்ணு. மற்றதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.” என்று கேட்டான் வசந்த்.
கொஞ்சம் வளர்ந்திருந்த தாடியை தடவிக்கொண்டு, “ சரி நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்… கிளம்பு… அங்கே போய் விட்டு பின் மேலேன்யோசிக்கலாம்” என்றான் நரேன்.
“ஏம்பா… ஏங்கிட்டே கூட சொல்லக்கூடாதா?”
“ வசந்த்… உன்கிட்டே தான் சொல்லக்கூடாது!”
“ம்.க்கும்.. எப்பவுமே என்னை ஒதுக்கி வைக்கிறதிலே குறியாக இரு… ஆமா… இன்றைக்கு ஒரு புறாவும்… ஓ … சொல்லி முடிப்பதற்குள்ஒரு புறா வந்து விட்டது பார்” என்றான் வசந்த்.
“எங்கே..? எங்கே?” ஆர்வமாகத்தேட ஆர்ம்பித்தான் நரேன்.
”நீ முதலிலே திட்டத்தைச் சொல்லு… அப்புறமாக புறாவைக்காட்டுகிறேன்…”
வசந்த்.கிண்டல் பண்ணுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட நரேன்,
“சரி சரி வா.. போகலாம் என்றவாறு காரை நோக்கி நடந்தான்..
வசந்தும் பின்னால் வேகமாக நடந்து காரில் ஏறிக்கொண்டான்.
திரும்பவும் காருக்குள் ஒரு பேரமைதி நிலவ.. “ வெண்ணிலா வானில் வரும் வேளையிலே…” என கண்ணன் வானொலியைத் திருப்ப சிரித்துக்கொண்டே கண்ணன் “செம மூடிலே இருக்கிறார் போல்இருக்கு…. ஏதாவது முக்கியமான காரியங்கள் எதுவும் உண்டா?” கண்ணனின் வாயைக் கிளறினான் வசந்த்.
“ அது ஒண்ணுமில்லை சார்.. இன்றைக்கு சாயங்காலம் பெண் பார்க்கப் போறோம்” என்றான் வெட்கப்பட்டுக் கொண்டே.
“அடேயப்பா… புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா.. வெட்கத்தை பார்
ஆமா.. பொண்ணு யாரு?”? திரும்பவும் வச்ந்த் கேட்டான்.
அத்தைப் பொண்ணூ தான் சார்.ஏற்கனெவே தெரிஞ்சவ தான்.ஏதோ பூ வைக்கிற சடங்கு ஒண்ணு வைக்கிறாங்க.. அவ்வளவு தான்”
“அவ்வளவு தானா? “ என்று நரேனிடம் கண்ணடித்து விட்டு, “ அப்போ இனி தான் போய் சேலை எல்லாம் எடுக்க வேண்டியதிருக்கும்”
என்ற வசந்த், “உங்களுக்குச் சீக்கிரம் போக வேண்டியது அவசியமில்லையா… நரேன். நீ ஒண்ணு பண்ணு.. இங்கே இறங்கிக்கோ.. நான் போய் கண்ணனை வந்த நுழை வாயிலிலே கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுகிறேன்…” வசந்த் மனதிற்குள் சிரித்துக் கொண்டே..
நரேனும் புரிந்து கொண்டு, மேற்புருவங்களை உயர்த்திப்பார்த்துக் கொண்டே “ சரி காரை நிறுத்துங்க… நான் இறங்கிக் கொள்கிறேன்” என்றான்.
“ அட அதெல்லாம் ஒன்றும் அவசரமில்லே சார்” கண்ணன் கொஞ்சம் நெளிந்தான்.
“புது மாப்பிள்ளை பூ வைக்கிற நாளிலே., நாங்க, ஏன் சார் உங்களை பிந்தி அனுப்ப வேண்டும். நரேன். நீ இறங்கிக் கொள். நான் கண்ணனை நுழை வாயிலில் விட்டு விட்டு வருகிறேன்” என்றான் கண்ணனின் தோள்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டு.
கண்ணன் காரை நிறுத்த, நரேன் கீழே இறங்கிக்கொண்டான்.
“ நீ இங்கேயே நில்லு. நான் கண்ணனை விட்டு விட்டு வந்து விடுகிறேன்” என்றான்.
”சார். பிரபு சாருக்குத்தெரிஞ்சா திட்டுவார்…”
“ நீ ஒண்ணுப்பா.. அவருக்கு ஏன் நீ சீக்கிரம் போறது தெரியப்போவுது” என்றான் காரை லாவகமாக வளைத்து திருப்பிக் கொண்டே. அருகில் ஒரு பாலத்தில் வந்த நரேன், நெய்லிக்கு போன் பண்ண ஆரம்பித்தான்.
தொடரும்..........