27 Sep 2020 1:55 amFeatured
வே.சதானந்தன் எழுதும்
குறுந்தொடர் கதை
அத்தியாயம் - 1
வேலை தேடல்…..
மும்பை ’மரோல் நாக்கா’ ரயில் நிலையத்தில் மெட்ரோ இரயில் நுழைந்துவிட்டது என்பதை அழகான பெண்குரல் ஒலிபெருக்கியில் அறிவிக்க ரேவதி எழுந்தாள். கதவுகள் திறந்து அனைவரையும் உதிர்த்துவிட்டு சென்றது அந்த குட்டி மலைப்பாம்பு.
அனைவரும் செல்லும் பாதையில் இறங்கியவள் ரிக்ஷா நிறுத்தத்தில் வந்தாள். ஒரு ஆட்டோவில் ’முருகன் துணை’ யை பார்த்தவள் மனதிற்குள் சிரித்தவாரே ஓட்டுனரிடம் அண்ணா மித்தல் எஸ்டேட் போகவேண்டும் என்றாள். தமிழ் குரலை கேட்ட மகிழ்வில் ஓட்டுனர் திரும்பி பார்த்து போகலாம்மா.. ஆனால்…. மித்தல் எஸ்ட்டேட் நடந்து போகும் தூரம்தாம்மா பின்னால் திரும்பி பார் அதோ தெரிகிறதே அதுதான் மித்தல் எஸ்டேட் என்றவருக்கு நன்றி கூறிவிட்டு பின்னோக்கி நகர.
மும்பைக்கு புதுசா தெரியிறயே! எந்த கம்பெனிக்கு போகணும்மா ? என்ற ஆட்டோ ஓட்டுனரிடம் லக்ஷ் ஐ.டி சொல்யூஷன்ஸ் என்றாள். சரிம்மா அந்த கேட்டை தாண்டி போனால் இரண்டாவதா ஒரு மூணு மாடி கட்டிடம் தெரியும் அது அந்த கம்பெனியோடதுதாம்மா. போய்ட்டுவா! என்றவருக்கு நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அவர் சொன்ன அந்த கட்டிடத்தின் வரவேற்பறை யில் இருந்தவரிடம் நேர்முக தேர்வுக்கான அழைப்பை காட்ட அவர் மூன்றாவது மாடியில் சென்று அமருங்கள் உங்களை அழைப்பார்கள் என்று சொன்னபடியே, தொலைபேசி எண்ணை அழுத்தி பேசலானார்.
ஒரு இருபது நிமிட நேரத்தில் ”கார்த்திக் எம்டி” என்ற அறையிலிருந்து ஒலி பெருக்கியில் ”மிஸ்.ரேவதி ப்ளீஸ் கம் இன்” என்ற குரல் ஒலிக்க எழுந்து அறை கதவை தள்ளியபடி
’மே ஐ கம் இன்’ என்றபடி நிமிர்ந்தவள். சற்றே ஆடித்தான் போனாள்! அப்படி ஒரு அதிர்ச்சியை அவள் எதிர் பார்க்கவில்லை. அதே போன்ற அதிர்ச்சி கார்த்திக்கிற்கும்!. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வாயடைத்து போய் நின்றனர்.
சற்றே சுதாரித்த கார்த்திக்கின் ’ப்ளீஸ் கம் இன்’ என்ற குரல் கேட்டு சற்று தடுமாற்றத்துடன் நடந்து உள்ளே சென்ற ரேவதியை பார்த்து அமரும் படி சொல்ல. அமர்ந்தவள் மீண்டும் மவுனம்.
“நீங்கள்… ?” என்றவளிடம். கையை நீட்டி ஃபைல் ஃபஸ்ட் என்றான். வாங்கி பார்த்தவன். மிஸ் ரேவதி என்றான் சற்று அழுத்தமாக.
அவள். சற்று நெளிந்தவாரே ’எஸ் சார் என்றாள். ”தாய்மொழி தமிழ் அப்படியென்றால் தமிழிலேயே பேசலாமா?” என்றவன். அவளின் அனுமதிக்காக காத்திராமல் கேள்வியை தொடர்ந்தான்.
சென்னையில் சிஸ்டம் அனைலைசிஸ்ட் ஆக நல்ல சம்பளத்தில் வேலை பாத்து இருக்கிறீர்கள். பின் ஏன் இங்கே வேலை தேடி வந்திருக்கிறீர்கள் ? என்றவனிடம்
”எனது தனிபட்ட விருப்பத்தால் விட்டுவிட்டு வேலைத் தேடினேன். அழைப்பு வந்தது வந்திருக்கிறேன்”. என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“உங்கள் ப்ரோஃபைல் எல்லாம் ஓகே தான், இன்னமும் இரண்டு பேர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்கள் அவர்கள் வந்த பின்னால் முடிவாகும்.ஒரு இரண்டு மணி நேரம் காத்திருக்க முடிந்தால். தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். உங்கள் வசதியை பார்த்துக் கொள்ளுங்கள்.” என்றான்
”நான் உங்களிடம்…” என்றவளை பார்த்து ”ப்ளீஸ் வெய்ட் இன் அவர் வெய்டிங் ஹால், இஃப் யு டோண்ட் மைன்ட்.” என்றவனை பாத்தபடியே எழுந்து வெளியே சென்றாள்.
இரண்டு மணிநேர காத்திருப்பு இன்றியமையாத ஒன்று என்பதால் ரேவதிக்கு காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
ஆனால் அவன் மீதான கோபம் காத்திருக்க வேண்டுமா? என்று வாதிட்டது. இறுதியில் காத்திருப்பது என்று முடிவெடுத்தாள்.
ரிசப்ஷன் சோஃபாவில் போய் அமர்ந்தாள். ஒரு கணனி சம்பந்தபட்ட புத்தகத்தை எடுத்து விரித்தாள். எழுத்துகள் என்னமோ கருப்பில் அச்சிட்டிருந்தாலும். அதில் வண்ண வண்ண கல்லூரி நாட்கள் படமாக ஓடியது.
கனவு வளரும்…………