17 Dec 2020 11:04 amFeatured
கட்டுரை
-ஞான.ஐயாபிள்ளை
சார்லஸ் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இங்கிலாந்தில், ஸ்ரூவ்ஸ்பெரி ( Shrewsbury) என்ற ஊரில், 1809-ம் ஆண்டு பிப்ரவரி, 12ம் நாள் பிறந்தார் (12 February 1809 – 19 April 1882). அவரது தந்தையார் பெயர் ராபர்ட் டார்வின் (Robert Darvin) ஒரு மருத்துவர், சமூகத்தில் மதிப்பை பெற்ற மனிதர்.. டார்வினின் குடும்பம் கொஞ்ச வசதியானதும் ஊரில் புகழ் பெற்றதும் கூட . சார்லஸ் டார்வின் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ம் ஆண்டு நவம்பர் 2 ம் நாள் ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the origin of Spicies) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இந்த நூல் அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்தது.
உயிர்ளை எல்லாம் ஒரே நாளில்தான் ஆண்டவன் உருவாக்கினார் என்று உலகின் அனைத்து மதங்களும் போதித்து வந்தன. அந்தக் கருத்தினை , டார்வினின் புத்தகம் அடித்து நொறுக்கி, தூள் தூளாக்கி தவிடுபொடியாக்கியது என்பதால் அனைத்து மதவாதிகளும் கொதித்து கொந்தளித்து டார்வினை உண்டு இல்லை என்று ஆக்கிவிடத் துடித்தனர். ஆனால் டார்வின் அமைதியாக தன் உயிரின சேகரிப்பால், அவைகளுக்கான விளக்கமும் தர முடிந்தது.
உயிரினங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, சின்ன உயிரிகளிலிருந்து பெரிய உயிரியாக மாற , ஒவ்வொரு விலங்கினமாக மாறி மாறி, இன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன என்பதையும் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவித்தார். எதுவும் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கினார். டார்வின்.
இதனால் மதவாதிகளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அனைவரும் கொதித்துக் கிடந்தனர். மேற்குடியினர் வட்டங்களும் இழிசுவைகொண்ட பத்திரிகைகளும் இதை காழ்ப்புணர்ச்சியுடன் திட்டித்தீர்த்தன. கிறிஸ்தவ திருச்சபைகள் சாபமிட்டன. அதேசமயம் அக்காலத்து முற்போக்கு மனிதர்கள் இதை வியந்து பாராட்டினர். காரணம் மனிதகுலம் இயற்கையாக தோன்றியதே தவிர கடவுளால் தோற்று விக்கப்படவில்லை என்று இவற்றின் கறாரான விஞ்ஞான அடிப்படையில் காட்டப்பட்டிருந்தது.
பாம்பின் கால் பாம்பறியும்
மனிதன் விலங்கிலிருந்து தோன்றினான் என்று டார்வின் கண்டு பிடித்ததானது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய விஞ்ஞான கண்ணோட்டங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னதோடு, கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள். அவரின் பிறந்தநாளை ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள்.
இங்கிலாந்தின் தேவாலயங்களில், கருப்பு உடை தரித்த விவிலிய பக்தர்கள் தங்களின் கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள். இதுதான் அன்றைய உலகில் நடந்த தகவல். ஆனால் இன்று மனித இனம் குரங்கின அமைப்பிலிருந்து தான் உருவானது என்றும், மனிதனுக்கும், டால்பினுக்குக்கும் கூட பொது முன்னோடிகள் உண்டு என்ற உண்மைகள் வெளிவந்து, அறிவியலின் தலை நிமிர்ந்த உண்மை கம்பீரமாக எழுந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் அறிவாளிகளுக்குத்தான் மேதைகளைப்பற்றி தெரியும்.
மாறுபடும் தன்மை, பரம்பரையாக வரும் பண்புகள், இயற்கைத் தேர்வு ஆகியவைதான் விலங்குலகில் முற்போக்கான பரிணாமவளர்ச்சியின் இயக்குசக்திகள் என டார்வின் காட்டினார். வலிமையான அந்தந்த இயற்கை சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்ற வகையினங்கள், உயிரினக்குழுக்கள், தனிப்பட்ட உயிரினங்கள், இயற்கைப் பரிணாம வளர்ச்சியின் பொருளில் மிகவும் நெளிவு சுளிவானவைகள் உயிர் பிழைத்தன. தம் சக்திகளை வீட்டுச் சென்றன. பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. இந்தப்படியான பரிணாம வளர்ச்சி மெதுவாகவும் அதேநேரத்தில் உறுதியானதாகவும் நிகழ்ந்தது. ஒருவகை உயிரினத்தில் காலங்காலமாக ஏற்பட்ட மாறுதல்களினால் அது புதிய உயிரினமாக மாறியது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதை பலத்த கூச்சல்களிடையே அறிவுலகம் ஏற்றுக்கொண்டது.
சார்லஸ் டார்வினின் பாட்டனார் பெயர் எராஸ்மஸ் டார்வின் (Erosmas Darvin) கேம்பிரிட்ஜ், எடின்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று மருத்துவரானவரே. முற்போக்கு சிந்தனைகள் உள்ளவர். அவர் இயற்கை அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அவர் எழுதிய ஜூனோமியா (Zoonomia) என்ற நூல் பின்னாட்களில் பரிணாம வளர்ச்சி என்ற கோட்ப்பாட்டினை முன்வைத்த நூலாகும். அவர் அக்காலத்தில் அடிமை முறை எதிர்ப்பில் தீவிரமாக இருந்தார். பிரான்சில் 1789 ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியை உற்சாகமாக வரவேற்றார்.
இத்தகைய பின்னணியில் பிறந்த சார்லஸ் டார்வின் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 16 ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அப்பள்ளியின் பாடத் திட்டங்கள் பழங்காலத்தியதாகவே இருந்தது. அது சார்லஸ் டார்வினை ஈர்க்கவில்லை. சிறுவன் டார்வின் இயற்கை சம்மந்தமான விபரங்களை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
1925 ம் ஆண்டு சார்லஸ் டார்வினை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். சார்லஸ் டார்வினுக்கு மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லை. எனவே வேறு கல்வியில் சேர விரும்பினார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அதே எடின்பர்க் பல்கலை கழகத்தில் இயற்கை விஞ்ஞானப் படிப்பில் சேர்ந்தார்.இயற்கை விஞ்ஞானத்தில் தமது பரிசோதனை ஆய்வைத் தொடங்கும் வகையில் நியூகோபன் என்ற கிராமத்திலிருந்து கடற்கரையோரப் பகுதிகளில் கடல் பிராணிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆய்வு செய்தார்.
டார்வினின் தந்தை அவரை கிறிஸ்தவ பாதிரி ஆக்க விரும்பினார். கிறிஸ்தவ பாதிரி ஆகவேண்டுமென்றால் ஏதாவது பல்கலை கழகத்தில் பயின்று பட்டப்படிப்பில் தேறியிருக்க வேண்டும். எனவே டார்வின் மீண்டும் 19 வது வயதில் (1928 ல் ) கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தை சேர்ந்த கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கே வில்லியம் பேலி (William Baly) என்பவர் எழுதிய 'இயற்கை சார்ந்த மறையியல்’ (Natural Theology) என்ற நூலைப் படித்தார். அதில் வில்லியம்பேலி முன்வைக்கும் கண்ணோட்டம் என்னவென்றால் “ஒரு கடிகாரத்தை வடிவமைப்பது போன்றே இந்த உலகத்தை ஒருவர் திட்டம் தீட்டிப் படைத்திருக்க வேண்டும்” என்கிறார்.
அவர் படைப்பாளர் என்ற கடவுள் என்பதால்தான். டார்வின் தம்முடைய தனித்தமையான ஆய்வு --காரணமாக பேராசிரியர்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார்.
பேராசிரியர் ஹென்ஸ்லோவின் பரிந்துரை
கிருத்தவக் கல்லூரி முன்னாள் பேராசிரியரும் நில அமைப்பியல் தலைவருமான ஆடம் ஜெட்ஸ்விக் (Adam Sedgwick) நார்த்வேல்ஸ் பிராந்தியத்தில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். அவருடன் ஆய்வுப் பயணம் மேற்கொள்ள டார்வினை பேராசிரியர் ஹென்ஸ்லோ பரிந்துரைத்தார். 1930 ம் ஆண்டு ஒருவார கால ஆய்வின்போது டார்வின் மேற்கொண்ட பணிகளும் அவருடைய கண்டுபிடிப்புகளும் அதன் முக்கியத்துவத்தையும் ஆடம் ஜெட்ஸ்விக் மிகவும் பாராட்டினார். பின்னர் தந்தையிடம் கொடுத்த வாக்கின்படி பாதிரியாராக பணியாற்ற ஊர் வந்து சேர்ந்தார்.
ஆனால் ஊர் வந்து சேர்ந்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது. ஊருக்கு அவருடைய அன்பு பேராசிரியர் ஹென்ஸ்லோ கடிதம் எழுதியிருந்தார். "தென் அமெரிக்காவை அள ஆய்வு (survey) செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கேப்டன் பீட்ஸ்ரோய் நியமிக்கப் பட்டுள்ளார். அவருடன் பணிபுரிய இயற்கை மற்றும் உயிரின் ஆராய்ச்சியாளர் தேவைப்படுகிறது. உன் தகுதி பற்றி சந்தேகமோ அச்சமோ கொள்ளவேண்டாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்" என எழுதியிருந்தார்.
ஹெச்.எம்.எஸ்.பீகிள் ஐந்தாண்டுகள் கடல் பயணம்
பேரார்வம் கொண்ட டார்வின் தனது தந்தையை சமாதானப்படுத்தி பல ஆண்டுகள் நடக்கும் - பல நாடுகள் செல்லும் அப்பயணத்தை ஒப்புக்கொண்டார். டார்வின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தை அடைந்தார். ஹேன்ஸ்லோவின் ஆலோசனைப்படி பீட்ஸ்ரோயைச் சந்தித்தார். ஆய்வின் நோக்கத்தை விளக்கினார். பீட்ஸ்ரோய் தென்அமெரிக்காவின் தென்பிராந்திய கடலோரப்பகுதிகளை முழுமையாக சர்வே செய்வதும், கடலோரம், அதனை ஒட்டியுள்ள தீவுகள் ஆகியவற்றின் வரைபடம் தயாரிப்பதும் ஆகும்.
டார்வின் கடல் பயணத்தை 22 ம் வயதில் மேற்கொண்டார். ஹெச்.எம்.எஸ்.பீகிள் (HMS Beagle) கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார். டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு பிற்பகல் 2 மணிக்கு டோவன் போர்ட் துறைமுகத்திலிருந்து தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்[ag1] டுகள் நீடித்து அக்டோபர் 26 1836 இல் முடிகிறது. அப்பொழுது அவரது வயது 27. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றுவிட்டார்.
அந்த இளைஞன் ஒரு முதிர்ந்த ஆய்வாளருக்குரிய சாதனைகளைப் புரிந்தார் . சார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில் செய்த பயணம் 40 ஆயிரம் மைல்கள். நிலவழிப்பயணம் 2 ஆயிரம் மைல்கள். நில அமைப்பியல் மற்றும் தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள். நாட்குறிப்பு 800 பக்கங்கள். எலும்புகள் உயர்ந்த உயிரின மாதிரிகள் 4000. அதே பொருட்கள் சாராயத்தில் பக்குவப்படுத்தப்பட்டது. 1,500 பயணத்தில் செலவு ஆயிரம் பவுண்டுகள். இது மாபெரும் சாதனையாக அக்காலத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே டார்வின் தனது 5 ஆண்டுகள் பயணத்தின்போது எழுதிய கடிதங்கள், ஆய்வுக்குறிப்புகளை பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவைகளை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றிருந்தார் டார்வின்.
அறிவியலாளர்களின் கவனம் டார்வின் மேல் பதிந்திருந்தது. தாம் சேகரித்திருந்த 450 உருப்படிகளை 1837 ம் ஆண்டு ஜனுவரி 4 அன்று நில அமைப்பியல் அறிவாளர்கள் அமைப்பிடம் ஒப்படைத்தார்.
இந்த அமைப்பின் கவுன்சில் உறுப்பினராக டார்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல் வடிவம் பெற்றன. பீகிள் கடல் பயணத்தைப் பற்றி சார்லஸ் டார்வின் எழுதிய நூலை அ. ரஹ்மான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் .
1877 நவம்பரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் டார்வினுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளவரப்படுத்தியது. தனது ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து அவற்றின் அடிப்படையில் நூல்களை எழுதி வெளியிட்டார். தென் அமெரிக்காவில் சேகரித்த பொருட்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை தற்போதைய உயிரினங்களோடு ஒப்பிட்டு அவர் செய்த ஆராய்ச்சி அவரை பரிணாம வளர்ச்சி என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன.
டார்வினிடம் ஏற்பட்ட இந்தக் கருத்துக்கள் பொருள் முதல் வாதத்திற்கு விசுவாசமாக இருப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியப்பட்டார். அன்று அவரது தலைமுறையைச் சார்ந்த காரல் மார்க்ஸ், பிரெடரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கருத்து-முதல் வாதத்தை எதிர்த்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். எனவே , டார்வினின் பொருள் முதல்வாத முடிவு காரல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் பாராட்டுக்குரியதாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் இருதரப்பினருக்கும் கடிதத் தொடர்புகள் ஏற்பட்டன. குரங்கிலிருந்து மாற்றமடைந்த தொடர்ச்சிதான் மனிதன் என்ற டார்வினின் விளக்கம். அறிவியல் உலகின் பாதையை வெளிச்சமாக்கியது.
ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் மன்னிப்பு கேட்ட சர்ச்
1882 ம் ஆண்டு ஏப்ரல் 19 ம் நாள் மாலை சார்லஸ் டார்வின் காலமானார். அவருடைய உடல் புகழ் பெற்ற பல விஞானிகளின் நினைவிடத்தில் அறிவியல் அறிஞர்களால் அடக்கம் செய்யப்பட்டது. சார்லஸ் டார்வின் இறந்து ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் அவரின் கோட்பாட்டை தவறென்று சொன்னதற்கு லண்டனின் தேவாலயம் (சர்ச்) மன்னிப்பு கேட்டது.