22 Dec 2020 11:18 pmFeatured
திருவையாறு ஔவைக் கோட்டமும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடத்தியது
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநயம் - இலக்கியப் பெருவிழா
முத்தமிழரசி சரஸ்வதி இராமநாதன் சிறப்புரை
திருவையாறு ஔவைக்கோட்டமும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றமும் இணைந்து 20-12-2020 ஞாயிறு மாலை 6 மணியளவில் சூம் செயலி வழியாக "கம்பனின் கவிநயம்" இலக்கியப் பெருவிழாவினை நடத்தியது.
ஔவைக்கோட்ட இயக்குநர் ஔவை அடிப்பொடி முனைவர் கலைவேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் அறிமுகவுரை ஆற்ற மன்றத்தின் ஆலோசகர் நல்லாசிரியர் ஆறுமுகப் பெருமாள் தொடக்கவுரையும் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆட்சிக்குழுவைச் சார்ந்த வே.சதானந்தன் வரவேற்புரையும் ஆற்றினர்.
ஔவைக்கோட்டத்தின் மதிப்புயர் தலைவரும், கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் தலைவரும், பழம்பெரும் இலக்கியச் சொற்பொழிவாளருமான முத்தமிழரசி பேராசிரியர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள் "கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநயம்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக தொடக்க நிகழ்வாக மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப் பிரிவு சார்பாக பாடகர் ராணி சித்ரா மற்றும் குமாரி லேகா வெங்கட் வழங்கும் பாவேந்தர் பாரதிதாசனின் மொழியுணர்வுப் பாடல்களைத் தொடர்ந்து விழா தொடங்கப்பட்டது.
இறுதியாக ஔவைக்கோட்ட அறிஞர் பேரவையின் அமைச்சரும் நாகப்பட்டினம் அ.து.மா. மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் வாசுகி இளவரசு நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
இலக்கிய நிகழ்வினை முகில் வேந்தன் நன்றாக ஒருங்கிணைத்திருந்தார்
தமிழ்நாடு, மகாராட்டிரம் மாநிலத்தவர்கள் மட்டுமல்ல லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல்நாடுகளில் இருந்தும் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற்றனர்.
நியூயார்க் தமிழ்சங்கத் தலைவர் ராம் ராம்மோகன், கவிமாமணி கோவை கோகுலன், வழக்கறிஞர் அருண்மொழி, லோகநாதன், அண்ணாமலை தமிழரசி, நல்லாசிரியர் மாசிலாமணி மற்றும் பல தமிழறிஞர்களும் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆலோசகர்கள் பாவலர் முகவை திருநாதன், கருவூர் பழனிச்சாமி,
கே.ஆர்.சீனிவாசன், மும்பை தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் எஸ்.இராமதாஸ் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கம்பனின் கவித்திறத்தை பல ஆண்டுகளாக பேசி வருகின்ற அம்மையார் சரஸ்வதி இராமநாதன் உலகத் தமிழர்களின் அன்பைப்பெற்ற சொற்பொழிவாளர் என்பதும் தமிழ்நாடு அரசின் கம்பர் விருதாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது உரையில் நிகழ்வில் கலந்து கொண்டோர் அனைவரும் பெரிதும் இன்புற்றனர்.