24 Dec 2020 4:17 pmEditorial
மும்பை பதிப்பு தினகரன் ஆசிரியர் ராபர்ட் அமல்ராஜ் காலமானார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாங்குளத்தை பூர்வீகமாக கொண்டவர், நாலாசோபாராவில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
அவரது தந்தை மும்பையில் பணியாற்றி வந்தார். எனவே ராபர்ட் அமல்ராஜ் மும்பை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவராவார். தமிழ், ஹிந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர்.
இவர் மும்பையில் படித்தவரானாலும் தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்ட காரணத்தால், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சமுதாய பிரச்னைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
மகாராஷ்டிராவில் வசித்துவரும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியல் மற்றும் கலை, பண்பாடுகளை முழுமையாக அறிந்தவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவரவார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மராத்திய முரசு பத்திரிகையில் பகுதி நேரமாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றி வந்த அவர் பின்னர் மும்பை தமிழ் டைம்ஸ் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அதே பத்திரிகையில் எடிட்டராக பதவி உயர்வு பெற்று நீண்டகாலமாக பணியாற்றி வந்தார்.
மும்பை எழுத்தாளர்கள் எழுதுவதற்கு ஊக்கமாக இருந்தவர், இவர் மும்பை டைம்ஸில் பல மும்பை எழுத்தாளர்களின் கவிதை,சிறுகதை,கட்டுரைகள் போன்ற படைப்புகளை வெளியிட்டு மும்பை இலக்கிய உலகிற்கு ஒரு புத்துணர்வை ஊட்டியவர்
இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு தினகரன் நாளிதழின் மும்பை பதிப்பு தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து தினகரன் நாளிதழில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
தொடர்ந்து 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் ராபர்ட் அமல்ராஜ் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
பல்வேறு தமிழ் அமைப்புகளையும் சிறப்பாக இயங்க ஊக்கப்படுத்தியவர் அத்துடன் மும்பை தமிழர்களின் மற்றும் தமிழ் அமைப்புகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தார்.
மும்பை வாழ் தமிழர்களின் அன்பை பெற்றவர் அன்னாரின் மறைவு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், மும்பை பத்திரிக்கை உலகுக்கும், இலக்கிய உலகுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் பெரும் இழப்பு ஆகும்
தென்னரசு மின்னிதழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வே.சதானந்தன்
முதன்மை ஆசிரியர்
தென்னரசு மின்னிதழ்