18 Apr 2019 9:41 amEditorial
தலையங்கம்
வாக்களியுங்கள் உங்களுக்கு தேவையான அரசை தேர்ந்தெடுங்கள்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே! ஆனால் எல்லோரும் நாட்டை ஆளமுடியாது! ஆனால் ஆள ஒருவரை கட்டாயம் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு அனைவரும் தங்களது ஜனநாயக கடமையான வாக்கை தவறாமல் செலுத்த வேண்டியது அவசியம்.
தமிழர்களுக்கு தேர்தல் என்பது புதிதல்ல, உலகுக்கே முன்னோடியாக 9 வது நூற்றாண்டிலேயே (கி.பி.907-955) முதலாம் பராந்தகன் மன்னன் ஆண்ட காலத்திலேயே தேர்தல் (குடவோலை) முறையினை பயன்படுத்தி.கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுத்துள்ளனர் என்ற உண்மை உத்தரமேரூரிலும், தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்த கல்வெட்டு சான்று கூறுகி|றது. இந்த குடவோலை முறையில் பகுதி வாரியாக கிராம மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் மட்டுமே தேர்தலில் நிற்கச் செய்தார்கள். அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்கி. பின்னர், சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து யார் பெயருடைய ஓலை வருகிறதோ அந்த நபரையே நிர்வாக சபைக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். என்கின்றது வரலாறு.
இப்படிப்பட்ட தொன்மை வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாம் வாக்களிக்க தவறலாமா?
வாக்களிக்கும் உங்கள் கடமையிலிருந்து தவறினால் உங்கள் வாக்கால் ஆட்சிக்கு வரவேண்டிய ஒரு நல்லவருக்கு வாய்ப்பு போய் , வரக்கூடாத ஒருவர் வந்துவிடலாம். காக்கப்படவேண்டிய ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றுவிடலாம் எனவே மறக்கவேண்டாம், தயக்கம் வேண்டாம், உடனே புறப்படுங்கள் வாக்கினை செலுத்துங்கள்
-வே.சதானந்தன், முதன்மை ஆசிரியர், தென்னரசு