24 Dec 2020 10:53 pmFeatured
மும்பையின் பிரபல நாளிதழான தினகரன் ஆசிரியர் இராபர்ட் மறைவிற்கு மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் அதன் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் டைம்ஸ் நாளிதழ் அதைத் தொடர்ந்து தினகரன் நாளிதழிலும் தமது பத்திரிக்கை பணியை தொய்வின்றி செய்ததன் மூலம் மும்பை வாழ்த் தமிழர்களின் நடுவே தமிழுணர்வைப் பரப்பிய பெரும் பங்கை சிறப்பாக செய்தார்.
இலக்கிய உணர்வு மும்பை மண்ணில் பெருகி வளர்வதற்கு தம்மால் ஆன ஒத்துழைப்பை நல்கினார் என்பது என்றும் நினைவு கூறத்தக்கது.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் காலஞ்சென்ற தமிழறிஞர்கள் அமைப்பாளர் சீர்வரிசை சண்முகராசன் மற்றும் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் ஆகியோரிடம் நல்ல நட்புணர்வு கொண்டு தினகரனும் எழுத்தாளர் மன்றமும் இணைந்து இலக்கியப் போட்டிகள் நடத்தி மும்பை வாழ்த் தமிழர்களிடையே நல்ல மொழியுணர்வை மேம்படுத்தும் விதமாக சமூக அக்கறையோடு பல நிகழ்வுகளை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.
புதிய எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் படைப்புகளை அவர் ஆசிரியராகப் பணியாற்றும் நாளிதளில் பிரசுரித்து மேலும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதில் முன்னத்தி ஏராக இருந்தார் என்பது கற்றறிந்த அறிஞர் பெருமக்களால் பாராட்டத்தக்கது.
நாளிதழில் பிரசுரிக்கப்படும் செய்திகளை நன்றாகத் தொகுத்து வெளியிட்ட துணிச்சல்மிக்க பத்திரிகையாளர் ஒருவரை மும்பை இலக்கிய உலகம் இழந்திருக்கிறது.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும் தினகரன் பத்திரிகை அலுவலகத்தினர் மற்றும் அவர்பால் அன்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.