25 Jan 2021 4:21 amFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-11
நெய்லியின் இந்திய பயணம்…
நெய்லியின் போனை எடுத்து ”சொல்லு நெய்லி. என்ன விசயம்?:” என்று கேட்டான் நரேன்.
“ நான் மும்பை கிளம்புகிறேன்” என்றாள் எதிர் முனையில்
”என்ன செய்தி…. ஏன் திடீர் பயணம்?” சுரத்தில்லாமல் கேட்டான் நரேன்.
”கோடிக்கணக்கில் பணம் தருபவர்களுக்கு பொறுமை கிடையாது நரேன்”
“ஏய்… உனக்குத்தான் எல்லா சம்பவங்களையும் அப்பப்ப என்ன நடக்குதுண்ணு எல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன். எதையும் புரிஞ்சுக்காம பேசறியே?. இதிலே வேற நான் ஆஸ்பத்திரியிலே இருக்கேன். புரிஞ்சுக்கிட்டுத்தான் இந்தியா வர்றியா..யானை என்னைத்தூக்கி எறிஞ்சதை பார்த்திருந்தா இப்படி எல்லாம் பேச மாட்டாய்”
“ஏதோ நாலு கோடி வாங்கிட்டு இப்படி யு.கே. குளிரில் அல்லாடாமல் இந்தியாவிலே ஏதோ ஒரு ஓரமா போய் தங்கி சந்தோசமா வாழ்ந்துட்டு போயிடலாமுண்ணு நெனச்சேன். ஏனோ எனக்கு எதுவுமே கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவு தான்.” பெருமூச்சு விட்டவள்,” இப்பவும் நேரே திருவனந்த புரம் வந்து களக்காட்டுக்கு வர ரொம்ப நேரமாகாது. ஆனா … அதுக்குள்ளேயாவது அந்த செடியை கண்டு பிடிச்சிடுவே என்கிற ஒரு அசட்டு நம்பிக்கை நெஞ்சுக்குள்ளே ஓடிகிட்டேயிருக்கு…"
சிரித்துக்கொண்டே கண்ணீரைத்துடைத்துக் கொண்டவள், “ எங்கே உன்னை பார்த்தேன்? ஏன் உன்னைக்காதலிச்சேன் என்பதெல்லாம் இனி பிரச்சினையேயில்லை.
உன்னோடு மகிழ்ச்சியா வாழ்ணும்ணு முடிவு பண்ணியாச்சு… பார் நரேன் கண்ணா… நீ எப்படியாவது வசந்தை பாலோ பண்ணி இன்னைக்குள்ளே அந்த செடியைக் கொண்டு வரப்பாரு.” என்றாள் நெய்லி.
“சே… வீணாக அழாதே… கண்ணைத்துடைத்துக் கொள். நீ இங்கே வந்து சேர்றதுக்குள்ளே ஏதாவது வழி பண்ணுகிறேன். ஆங்… எப்ப கிளம்புகிறீர்கள்?” என்றான் நரேன்.
”நாளைக்கு காலையில் மும்பை… அனேகமாக… நாளை மறு நாள் தூத்துக்குடி… அங்கேயிருந்து களக்காடு…”
“யாரெல்லாம் வருகிறீர்கள்?”
“அந்த மருந்துக் கம்பேனி சி.இ.ஓ., ஹைட்ரன், ரிச்சர்ட்.. அவனுடைய பி.ஏ. சிமி., நான்…”
“சரி… தொடர்பிலே இரு.. நான் பார்த்துக்கொள்கிறேன்.” காலில் வலியோடு யோசிக்க ஆர்ம்பித்தான் நரேன்.
“ அவர்களுக்கு நம்முடைய திட்டங்கள் ஏதேனும் தெரியுமா?”
“இல்லை… களக்காட்டு மலையில் ஏதோ ஒரு பகுதியில் அந்தச்செடியைக் கொண்டு வரப்போயிருக்கிறாய் என்பது தெரியும்”
” நெய்லி… அவங்க உன்னை விரட்ட ஆரம்பிச்சிட்டாங்களா?”
”ம்கூம். ஆனா… நாம் ஏன் இவ்வளவு சார்ட் பீரியட்குள்ளே தர்றோம்ணு கமிட் பண்ணினோம் என்றே புரியவில்லை..”
“ஸோ … நெய்லி நீயும் என்னைச் சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டியா?”
“இல்லை நரேன். ஏதோ எடுத்து கடையிலே வச்சிருக்கிற மாதிரி நீயும் ஒரு வாரத்திலே பிடுங்கி வருவதாகச் சொல்லி விட்டு… இப்படி ஆஸ்பத்திரியிலே போய் படுத்துக்கிட்டா… என்ன பண்ணுறது… கொஞ்சம் யோசித்துப்பார். நீ ரிச்சர்ட் இடத்திலே இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பாய்.. என்ன… நம்முடைய கமிட்மெண்ட் கொஞ்சம் பிந்தி இருந்திருக்கலாம். பரவாயில்லை… சில சம்பவங்கள் நாம் நினைப்பது மாதிரி எல்லாம் நடப்பதில்லை.”
“சாரி நெய்லி… எதிர்பாராத நிகழ்வுகள்… யானைத்தூக்கிப் போட்ட நிகழ்ச்சி தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது..”
”பார். நரேன்… இவர்களெல்லாம் நீ புரூடா விடுகிறாய் என்று நினக்கிறார்கள். யானையாவது… அது தூக்கிப் போட்டால் பிழைக்க முடியுமா? எனக் கிண்டல் பேசுகிறார்கள்.”
“அப்படி என்றால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“அப்படித்தான் தோன்றுகிறது.அவர்களிடம் சொல்லிவிட்டு இப்போது வேற யாரோ பெரிய தொகையை கொடுத்து உன்னிடமிருந்து வாங்க திட்டம் போட்டிருக்கிறார்களோ என்று பேசிக்கொள்கிறார்கள்”
”சே! எவ்வளவு மடத்தனம் பண்ணியிருக்கிறோம்…ஏதோ போனோம். செடியைப் பிடுங்கிக் கொடுத்தோம். பணத்தை வாங்கிட்டுப் போயிடலாம் என்று நினைத்தது தப்பாகி விட்டது”
“ஆமாம். நரேன்… உனக்கு எதிராக… ஏதோ ஒரு மந்திரிக்கும்பலும் இந்தச் செடிய விக்கதுக்கு ஏதோ ஒரு லோக்கல் மருந்துக் கம்பெனி கூட சேர்ந்து நீ புடுங்கிக் கொண்டு வர்ற செடிய மெதுவா லவட்டிக் கொண்டு போறதுக்கு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறதா இங்கே பேசிக்கிறாங்க… அதப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?”
“இங்கே ஏதோ நடக்கிறது? ஆனா யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.. எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பி வா… ஆங்.. நீ அநேகமாக நேரா ஆஸ்பத்திக்கு தான் வர வேண்டியிருக்கும். ஓ.கே..”
“சரி.. நான் புறப்படும்போது உனக்கு தெரிவிக்கிறேன்” என்றாள் நெய்லி.
தொடரும்.........