30 Jan 2021 2:45 pmFeatured
மும்பையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேரக் கட்டுப்பாடுகளுடன் மும்பை பயணிகள் ரயிலில், பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலையில் முதல் ரயில் சேவை தொடங்கியது முதல் காலை 7 மணி வரையிலும், பிறகு மதியம் 12 மணி முதல் 4 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் கடைசி இரயில் சேவை வரையிலும் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரங்கள் தவிர, பிற நேரங்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோரும். களப் பணியாளர்களும், தனியாகப் பயணிக்கும் பெண்களும் அரசால் வழங்கப்பட்ட சிறப்புப் பயணச் சலுகைச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ரயில்களில் பெண்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.