16 Feb 2021 10:42 pmFeatured
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அவ்வப்போது முதல்வராக இருப்பவர்கள், துணை நிலை ஆளுநருடன் மோதிக் கொள்வது வழக்கமானதுதான். ஆனால், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் பாஜ ஆட்சியும், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என மாற்று ஆட்சி அமைந்ததால் அரசு நிர்வாகத்தில் அதிகார போட்டி என்பது மாறி ஒரு கட்டத்தில் முதல்வர் நாராயணசாமி- கவர்னர் கிரண்பேடி என்ற தனிப்பட்டவர்களின் யுத்தமாக இருந்துவந்தது
இந்நிலையில் தற்போது, புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சி பெருன்பான்மையை இழந்துவிட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். முன்னதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நீக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி கடிதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பலமுறை நாராயணசாமி கிரண்பேடியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். நாராயணசாமியின் கோரிக்கை அவரது ஆட்சி முடியு போகும் நிலையில் தான் நிறைவேறி உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
நாராயணசாமி மகிழ்ச்சி!
எங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டார் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடையாக கிரண்பேடி இருந்ததாக பலமுறை மத்திய அரசிடம் கூறிதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.