26 Feb 2021 3:22 amFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-13
பிரபுவின் கோபம்?!
பிரபுவின் முகம் சிவந்து போயிருந்தது. யாரிடம் போய் முட்டிக்கொள்வது என்று புரியவில்லை.
கண்ணன் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக நடந்து கொள்வான் என்று எதிர் பார்க்கவில்லை. நரேனுக்கும் வசந்த்திற்கும் தன் மேல் சந்தேகம் வந்து விட்டது புரிந்தது.
அவர்கள் சித்தரின் கல்லறையிலிருந்து அந்த ஆல காலச் செடியைபிடுங்கிக் கொண்டு போய் விட்டால், பின்னர் மந்திரியின் முகத்தில் விழிக்க முடியாது. ஏற்கனெவே இரண்டு மூன்று முறை பணம் தந்ததைச் சொல்லிக்காட்டி கத்திவிட்டார். இதிலே, நாளைக்கே, களக்காட்டுக்கு வரப்போகிறாராம். வந்தால் அவ்வளவு தான்.. என்ன செய்யலாம்?
ஒன்றுமே புரியவில்லை.ஒழுங்காக, மந்திரியிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடலாமா? ச்சே! பெரிய பணம். அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விட முடியாது.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாமென்று சொல்வார்கள். ஆனால் அதன் பிறகு, நரேனுக்கும் வசந்த்திற்கும் நம்மேலிருந்த மதிப்பு அதலப்பாதாளத்திற்குப் போய் விடும்.
இவ்வளவும் செய்து விட்டு, முன்னறையில் நாற்காலியை இழுத்துப்போட்டு சாவகாசமாக மொபைலில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை.
“கண்ணன் இங்கே வாப்பா?” என்றார்.
அவனும் மொபைலை மூடிவிட்டு “எஸ் சார்” என்றான்
“நீ காட்டுக்குள்ளேயிருந்து வெளியே வரும்போது, உண்மையிலே வசந்த், அங்கேயிருந்து போய்விட்டானா?”
“ஆமா சார். நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தேன்.அவனைக் காணாததினாலே, அவன் போய்விட்டான் என்று நினைச்சிட்டு நானும் திரும்ப வந்து விட்டேன்.
ஆங்.. சார்.. ஆட்டோகாரனுக்கு அறு நூறு ரூபாய் என் பாக்கெட்டிலிருந்து கொடுத்தேன் சார்” என்றான்
கோபம் தலைக்கேற, “இந்தா.. எவ்வளவு? எடுத்துக்கோ” என்று கத்தினார்.
“ஏன் சார் கத்தறீங்க.. அவ்வளவு முக்கிய செடியா அது?...” மெதுவாகக் கேட்டான்
“முட்டாள், முட்டாள் ….. கோட்டை விட்டுட்டு வந்துட்டு எங்கிட்டே கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கே.. அந்த வசந்த் அந்தச் செடியை சித்தர் புதைத்த இடத்திலிருந்து பிடுங்கிட்டுப்போயிருந்தா… அப்புறம்… குடி முழுகிப்போய் விடுமடா…
இப்ப என்னச் செய்றது?” தலையைப் பிடித்துக்கொண்டார் பிரபு.
“சார்.பேசாமல் இன்னொரு முறை நாம் அவங்களை ஆஸ்பத்திரியிலே போய் பாத்தா… “ என்று சொல்லி முடிப்பதற்குள்,” பிரமாதம். கண்ணா என் வயிற்றிலே பாலை வார்த்தாய். அவன் திரும்பி வருவதற்குள் நாம் ஆஸ்பத்திரி வாசலிலேயே அவனைப் பிடித்து விடலாம். சரி உடனே காரை எடு” வேகமாக கீழே இறங்கினார் பிரபு.
கண்ணன் வேகமாக காரை ஓட்ட, பிரபுவின் அலை பேசி ஒலிக்க அவர் எடுத்துப் பேசினார்.
“என்ன பிரபு… நாளைக்குள்ளே அந்த ஆல காலச் செடி நம்ம கையிலே கெடச்சிருமில்ல..” என்றார் எதிர் முனையில் அமைச்சர்.
முதலில் மவுனமாக இருந்த பிரபு, திரும்பவும் அமைச்சர் கத்த ஆரம்பிக்க, “ சார். உங்களை விட நான் அதிக டென்சனிலே இருக்கேன். நீங்க வர்றதுக்குள்ளே எப்படியாவது வானத்தை வளைச்சாவது செடிய கொண்டு வந்துருவேன் சார்” என்றார்.
“என்ன செய்வியோ பிரபு.. நான் என் ப்ரோகிராம் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு நாளைக்கு களக்காட்டுக்கு வர்றேன். வந்ததும் என் கைக்கு அந்தச் செடி வந்தாகணும்.
அந்தக் கம்பெனிக்காரன் சும்மா கெடந்து கூவிக்கிட்டே கெடக்காம்பா… என்ன செய்யிறது… கைய நீட்டி பணத்தை வாங்கியாச்சி.. நீயும்… என்னவோ கடையிலே வாங்கி வச்சிருக்கிறத மாதிரி வந்த உடனே எடுத்து தர்றேன்னு பணத்தை வாங்கிட்டு வநதாய்… ம்… என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது… நான் நாளைக்கு களக்காட்டுக்கு வந்ததும் என் கைக்கு அந்தச் செடி வந்தாகணும். ஞாபகம் வச்சிக்க…” என்றார் கோபமாக “சரி சார்” என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்து விட்டு, கண்ணனை முறைத்துப் பார்த்தார் பிரபு.