08 Mar 2021 12:23 pmFeatured
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் நடைபெற்றது.
முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.30 மணியளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில், அவருக்கு கே.என்.நேரு தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பின் மதியம் 1 மணியளவில் ஸ்டாலின், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். மாநாட்டுத் திடலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
திமுகவின் கனவுகளை அறிவிக்கும் கூட்டம்:
தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு என்று ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலில் போட்டியிட திமுக முதல்முறையாக முடிவு செய்த இடம்தான் திருச்சி மாநகரம். திருச்சியில் எடுத்த முடிவை அடுத்துதான் தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது. அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" எனக் கூறினார்.
பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்க உரை ஆற்றினார். ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்..
தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின்7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் வெளியிட்டார்.
அது குறித்துப் பேசிய ஸ்டாலின், இந்த உறுதிமொழிகளுக்கு ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்று பெயர் சூட்டி உள்ளேன்! இந்த இலக்குகள் – வளமான- ஏற்றத்தாழ்வற்ற தமிழகத்தை உருவாக்கிடத் தேவையான 7 முக்கிய துறைகள் சார்ந்தது! –
1. பொருளாதாரம்
2. வேளாண்மை
3. நீர்வளம்
4. கல்வி மற்றும் சுகாதாரம்
5. நகர்ப்புற வளர்ச்சி
6. ஊரக உட்கட்டமைப்பு
7. சமூகநீதி
* வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு!
* மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
* குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
* அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
* எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
* உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
* அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
- இந்த இலக்குகளை எட்டியாக வேண்டும்!
இந்த இலக்குகளை எப்படி அடையவிருக்கிறோம்..
1. பொருளாதாரம்
வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!
அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டுவது முதல் இலக்கு. இதனை நாம் சாதித்துவிட்டால், நமது பொருளாதாரம் ரூபாய் 35 இலட்சம் கோடியைத் தாண்டும். இதன் விளைவாக, தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 4 இலட்சத்துக்கும் மேலாக உயரும். அந்த நிலையை நம்மால் நிச்சயம் எட்ட முடியும்.
வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தற்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாகக் குறைப்போம்.
பொருளாதாரரீதியாக நலிவடைந்து, கடும் வறுமையில் வாடும் 1 கோடி மக்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் மீட்கப் போகிறோம். இதன் மூலம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கான பணியை எனது தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றப் போகிறது.
2. வேளாண்மை
மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, இதனை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை பத்தாண்டுகளுக்குள் எட்ட இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது 10 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு இருபோக நிலங்கள் உள்ளன. இதனை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது 20 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தவுள்ளோம்.
உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பிடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்த பத்தாண்டுகளில் செய்வோம்.
3. நீர்வளம்
குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 இலட்சம் லிட்டரில் இருந்து 10 இலட்சம் லிட்டராக உயர்த்தி வழங்க உறுதி பூண்டுள்ளோம்.
நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தவுள்ளோம்.
தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பளவை 20.27 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தும் வகையில் 7.5 இலட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கூடுதலாக இணைக்கவுள்ளோம்.
4. கல்வி மற்றும் சுகாதாரம்
அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்துக்காகச் செலவிடப்பட்டு வரும் நிதி அளவை, மூன்று மடங்கு உயர்த்தப் போகிறோம்.
கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் தமிழ்நாடு தற்போது 17-ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையை மாற்றி, முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெறச் செய்யும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
பள்ளிக் கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதம், 16 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைக்கப்படும்.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளையும், முன்மாதிரி மருத்துவமனைகளையும் அமைக்கப் போகிறோம். இதனால் அதிக தொலைவு பயணிக்காமல், கைக்கெட்டும் தொலைவில் தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும்.
தற்போது நம் மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் - செவிலியர்கள் - துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழிற்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவுள்ளோம்.
5. நகர்ப்புற வளர்ச்சி
எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 36 இலட்சம் வீடுகளுக்குப் புதிதாகக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப் போகிறோம். இதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவு 35 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக உயரும்.
அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும்.
குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்குப் புதிதாக 9.75 இலட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரவுள்ளோம். இதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவு 16.6 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைக்கப்படும்.
நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில் தற்போது 11 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன. 2031-க்குள் இப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்களை இடம்பெற வைப்போம்.
6. ஊரக உட்கட்டமைப்பு
உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இப்போது 57 விழுக்காடு கான்கிரீட் வீடுகள் உள்ளன. நாம், அடுத்த பத்தாண்டுகளில் 20 இலட்சம் கான்கிரீட் வீடுகளைப் புதிதாகக் கட்டித்தந்து இதனை 85 விழுக்காடாக உயர்த்த இருக்கிறோம்.
கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் பெரும்பணியைப் பத்தாண்டுகளில் நிறைவேற்றிக் காட்டுவோம்.
எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத, தரமான சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் ஊரகப் பகுதிகளில் கட்டமைப்போம்.
எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதியை - பிராட்பேண்ட் ஏற்படுத்தித் தரவுள்ளோம்.
பத்தாண்டுகளுக்குள் குறைந்தது, தமிழகத்தின் 50 விழுக்காடு கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்திக் காட்டுவோம்.
7. சமூகநீதி
அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
நாளை மார்ச் 8. மகளிர் தினம். தலைவர் கலைஞர் ஆட்சியில் மகளிர்க்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். மகளிர் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை; வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு – உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு; மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை மனதில் வைத்துச் சொல்கிறேன்,
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்.
பட்டியலினத்தவர் - பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகையானது தற்போதுள்ளதை விடவும் இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும்.
மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காகப் பயன்படுத்தப்படும்.
- இவை தான் எனது தொலைநோக்குத் திட்டங்கள்!
இவை அனைத்தும் பத்தாண்டுத் திட்டமாக படிப்படியாக செயல்படுத்தப்படும். 2031-க்குள் நிறைவேற்றப்படும்.
இவை தனிப்பட்ட மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் மட்டுமல்ல! இந்த திடலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் திட்டம் மட்டுமல்ல! இவை தான் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் திட்டங்களாக மாற வேண்டும்!
பேரறிஞர் அண்ணா முதன்முதலில் முதல்வரான போது சொன்ன வரிகள் என் நினைவுக்கு வருகிறது. “எல்லா எண்ணங்களும் ஓர் அடிப்படையான இலட்சியத்தையே சுற்றி வட்டமிடுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வு தரவேண்டும் என்ற இலட்சியம். இலட்சியம் மிகப்பெரியது; நான் மிகச் சாமானியன். ஆனால் உங்கள் தோழன். ஆகவே என்னுடைய திறமையை நம்பி அல்ல, உங்கள் எல்லோருடைய திறமையையும் நம்பி இந்தப் பணியில் ஈடுபடுகிறேன்” என்றார். அதேபோல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன்!
கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு நாம் அமைக்கும் ஆட்சியானது, இவற்றை நிறைவேற்றித் தரும் ஆட்சியாக அமையும்.
ஏழு கோடி மக்களின் இதயங்களை வெல்வதன் மூலமாக - இந்த ஏழு தொலைநோக்குத் திட்டங்களையும் நம்மால் செயல்படுத்திக் காட்ட முடியும். கழக ஆட்சி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் - ஓர் இனத்தின் ஆட்சியாக அமையும். தனிப்பட்ட ஓர் அரசியல் இயக்கத்தின் கொள்கையை மட்டும் இல்லாமல் - இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக் கூடிய ஆட்சியாக அமையும்.
நாம் கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் கடமை நமக்குத் தான் இருக்கிறது. அந்தக் கடமையை நாம் தான் செய்தாக வேண்டும். நம்மைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. நம்மை விட்டால் யாராலும் செய்ய முடியாது.
தந்தை பெரியாரின் கனவுகளை, பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை, முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளைச் செயல்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. நம்மால் முடியும்! நம்மால் மட்டும் தான் முடியும்! வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சி பெற வைப்போம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கின்றன. பரந்து விரிந்த இந்த தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு அமைய இருக்கிறது.
அப்படி அமையும் அரசு, தனிப்பட்ட ஸ்டாலினின் அரசாங்கம் அல்ல. நம் அனைவரின் அரசாங்கமாக இருக்கும். இதற்கான உறுதிமொழியை, இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் முன்னால் நாம் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொள்வோம்!
நீங்கள் அனைவரும் எழுந்து நின்று, இந்த உறுதிமொழியை என்னுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! நாங்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறோம்!
* அனைத்து உரிமைகளும் கொண்டதாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம்!
* மக்களைப் பிளவுபடுத்தும் எவரையும் கூட்டாக எதிர்நின்று தோற்கடிப்போம்!
* எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக் காட்டுவோம்!
*சட்டம் ஒழுங்கை உறுதியோடு காப்பாற்றுவோம்.
* சட்டமீறல்களையும் குற்றச்சம்பவங்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்.
* அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்போம்.
* நூறு சதவிகிதம் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுப்போம்!
இந்த உறுதிமொழிகளை எந்நாளும் காப்போம்!
தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, “மு.க.ஸ்டாலின் ஆகிய நான் - உங்களில் ஒருவனான இந்த மு.க.ஸ்டாலின் ஆகிய நான் - உங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முழுமையாக உறுதி அளிக்கிறேன். இந்த உறுதிமொழியை தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் ஏற்றி வைக்க வேண்டிய பெரும் பொறுப்பை உங்களது தோள்களில் நான் ஏற்றி வைக்கிறேன்!
ஒளிமயமான எதிர்காலத்தை அமைப்பதற்காக பல்வேறு தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்; தி.மு.க. தலைவர் அறிவித்துள்ளார் – தி.மு.க. அறிவித்துள்ளது - என்பதை தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நீங்கள் விதைக்க வேண்டும்.
இன்று மார்ச் 7; தேர்தல் தேதி ஏப்ரல் 6! - இடைப்பட்ட இந்த ஒருமாத காலத்துக்குள் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களுக்கு இதனை நாம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டோம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
வீடு வீடாகச் செல்லுங்கள்! வீதி வீதியாகச் செல்லுங்கள்! கூட்டம் கூட்டமாகச் செல்லுங்கள்! தனியாகச் சென்றும் சந்தியுங்கள்! தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து தீட்டப்பட்ட இந்த ஏழு திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்!
தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களிக்கச் சொல்லுங்கள்! இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, பேரழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்றி, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல்!
நான் எடுத்துள்ள உறுதிமொழி என்பது ஐந்தாண்டுகளுக்கு மட்டுமானது அல்ல. பத்து ஆண்டுகளுக்கும் சேர்த்துச் சொல்லி இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வரும் ஐந்தாண்டுகள் மட்டுமல்ல, தொடர்ந்து காலம் தோறும் தொடர்ந்தால் மட்டும் தான் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும்.
எனவே, அ.தி.மு.க. ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமே வாக்களிக்கப் போகும் தேர்தல் அல்ல இது! இனி தமிழகத்தில் எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டிய தேர்தல் இது!
அத்தகைய ஜனநாயகப் போர்களத்தில் நாம் மட்டுமல்ல, நம்மோடு பல்வேறு அரசியல் கட்சிகள் தோள் கொடுக்க முன்வந்துள்ளன. அவர்கள் தேர்தல் நேரத்து தோழமைகள் அல்ல, தொடர்ந்து நம்மோடு அனைத்துப் போராட்டங்களிலும் தோள் கொடுத்தவர்கள். ஜனநாயகம் காக்க, மக்கள் உரிமைகளுக்காக, ஊழலை எதிர்த்து நாம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்கள். அத்தகைய அரசியல் கட்சிகள், இந்த தேர்தல் களத்திலும் தோழமையோடு இணைந்துள்ளார்கள்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து பெரும்பாலும் பங்கீடு என்பது இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. அடுத்து கழக வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறோம்; தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கிறோம். அதன் பிறகு எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன்.
இதோ இன்று முதல் அதிமுக. ஆட்சியின் முடிவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! இன்னும் முப்பதே நாளில் அ.தி.மு.க. ஆட்சிக்கான முற்றுப்புள்ளியை வைக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.
கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதா? கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதா? கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதா?
அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! தி.மு.க. ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைப்போம்!
கழக அரசு மலரட்டும்! உங்கள் கவலைகள் யாவும் தீரட்டும்! தமிழர்களின் வாழ்வு செழிக்கட்டும்! நன்றி!
என பேசினார்.