29 Jun 2021 7:19 pmFeatured
வே.சதானந்தன் எழுதும்
குறுந்தொடர் கதை
அத்தியாயம்-5
சுகந்தி ரேவதியின் கல்லூரி தோழி அதுவும் நெருக்கமான தோழி எவ்வளவு நெருக்கமோ அவ்வளவு விலகிச்சென்றவள்.
”ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷியா ?” கடைசியாக ரேவதியைப்பார்த்து சுகந்தி சொன்ன வார்த்தை அதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. செத்துவிடவேண்டும் என்று தோணியது இன்றும்
இரயில்வே நிலையத்துக்கு வெளியே கார்த்திக் அடித்துத் துவைத்து கிழிந்த துணியாய் இரத்தம் சொட்டச்சொட்டக் கிடக்க ரேவதியின் அப்பா ரேவதியைப் பிடித்து வைத்திருக்க….
வந்துவிடமாட்டாயா என்ற கார்த்திக்கின் பார்வை… என்னை விட்டகன்றால் அப்புறம்….…? என்ற தந்தையின் பார்வை வேடிக்கை பார்த்து நிற்கும் ஜனங்களின் கூட்டம்..,,,
அப்பொழுது ஓடிவந்த சுகந்தி சுற்றி நின்ற கூட்டத்தையும் கார்த்திக்கின் நிலைக்கு காரணமானவர்களையும் பொருட்படுத்தாது தரையில் வீழ்ந்து கிடக்கும் கார்த்திக்கை தோளில் சாய்த்தபடி தூக்கினாள். காப்பாற்றச் சுகந்தி வந்த நிலையில். .இனி கார்த்திக் பிழைத்துவிடுவான் என்ற எண்ணம் ரேவதிக்கு ஆறுதலைத்தந்தது.
ஆனால் சுகந்தி சொன்ன அந்த வார்த்தை…. ”ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷியா ?”
ரேவதியின் நிலை புரியாமல் அன்று சுகந்தி சொன்ன வார்த்தை இன்று வரை அது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.
”மேடம்” என்று சுவாதி அழைக்க நிகழ்காலத்திற்கு வந்தாள் ரேவதி. வாகனம் நின்றுகொண்டிருந்தது. சுவாதி கதவைத் திறந்து இறங்குவதற்குத் தயாராக இருந்தாள்.
”மேடம் எனது இடம் வந்துவிட்டது இறங்கிக்கொள்கிறேன். நாளை சந்திப்போம்” என்றவளிடம் புன்னகைத்து விடைகொடுக்க வாகனம் புறப்பட்டது.
நாளை கார்த்திக் என்ன பேசுவான்? அலுவலக விசயமாகவா? அல்லது அவர்களின் தனிப்பட்ட விசயமா ? என்பதை எண்ணியவாறு ரேவதியின் பயணம் தொடர்ந்தது....
மறுநாள் காலை வாகனத்தில் சுவாதி இறங்கிய இடத்தில் பிக்கப் செய்துகொண்டு மீண்டும் அலுவலகம் வந்தடைந்தனர்.
காலை முதலே ரேவதி வேலைகளைப் புரிந்துகொள்வதிலும் அதனைச் செயல்படுத்திப் பார்ப்பதுமாக நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் தொலைப்பேசி ஒலிக்கும்போதெல்லாம் கடிகாரத்தைப் பார்த்து மணி 5 ஆகவில்லையா என்று சலித்துக் கொண்டாள்.
அன்றும் இதே சலிப்பு...... கார்த்திக் வர நேரமானால்,… அன்று பார்க்கவில்லையென்றால் எதையோ இழந்ததை போன்று உணர்ந்தாள். அவனிடம் பேசியதில்லை ஆனாலும் ஏதோ ஈர்ப்பு. சுகந்தி அவன் பைக்கில் போனதைப் பார்த்து ஏனோ ஒரு எரிச்சல்.
மறுநாள் சுகந்தியிடம் கேட்டேவிட்டாள் ”யார் அவன்? அவன் பைக்கில் அப்படி சகஜமாக உட்கார்ந்து போகிறாயே?” என்று.
சுகந்தி ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்த படியே. ”அவனைப் பற்றித் தெரிய வேண்டுமா? அல்லது அவன் பைக்கில் நான் போனதை பற்றித் தெரிய வேண்டுமா?” என்றாள்.
”இல்லை… அவன் யாராக இருந்தால் எனக்கென்ன? நீ சகஜமாக ஒருவனுடன் பைக்கில் போனாயே அதனால்தான் கேட்டேன்….” என்றாள் ஈர்ப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.
ஆனால் சுகந்தியோ அவள் உள்மனத்தை அறிந்துகொண்டாள். இருந்தாலும் அவளைச் சீண்டவேண்டும் என்பதற்காக ”அவன் பெயர் கார்த்திக். சிறுவயதிலிருந்தே எங்களுக்குள் பழக்கம்.. ஒரே ஊர் அத்துடன் உறவு கூட….” என்றாள்.
சுகந்திக்கு தெரியும் அடுத்து ரேவதி என்ன கேட்பாள் என்று அதை மெய்ப்பிக்கும் விதமாக ரேவதி கேட்டாள் “பழக்கம்….? உறவு…? அப்படியென்றால்?”
சுகந்தி சிரித்தபடியே “இப்போதைக்கு இது போதும் மற்றதை நீ தானாக தெரிந்துகொள்வாய்…” என்றாள்.
ரேவதி எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்றவுடன் அவள் முகம் சற்று வாடித்தான் போனது அதை சுகந்தி ரசித்தபடியே. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
”சரி சரி வா லெக்ச்சருக்கு நேரமாச்சி… சிடுமூஞ்சி பேராசிரியர் வந்துருவார்…” என்றபடியே ரேவதி கையை பிடித்தபடி நடக்கலானாள் சுகந்தி.
நாட்கள் கடந்தன சுகந்தியின் தோழி என்பதால் ரேவதி ஹலோ சொன்னால் பதிலுக்கு ஹலோ சொல்லும் அளவுக்கு கார்த்திக் முன்னேறியிருந்தான். ஆனால் ரேவதிக்கோ அவன் ஹலோ சொல்வதையாவது கேட்கவேண்டும் அதை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்ற ஆவல் நாளாக நாளாக கூடிக்கொண்டே போனது. அவனைப் பார்க்கும் பொழுதும்… குரலைக் கேட்கும் பொழுதும் அவளுள் பல இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது.
அதை கார்த்திக்கும் கவனிக்கத் தவறவில்லை. அவளை அவனும் உள்ளுக்குள் விரும்ப ஆரம்பித்தான்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் தெரியும் விருப்பம் ஈடேறுவது அவ்வளவு சுலபமல்ல.. சுலபமல்ல என்பதைவிட வாய்ப்பில்லை என்பதே சரி… இவர்கள் ஹலோ சொல்லுவதை பல கண்கள் மேய்ந்தன அதில் முக்கியமான ஒருவரது கண்ணும் உண்டு!?
தொடரும்....