03 Jun 2019 7:34 amFeatured
-கவிமாமணி முனைவர் வதிலை பிரதாபன்
தரணியை தம்மிடம் திருப்பிய தமிழே
தம்பியர் மனங்களில் தவழ்ந்திடும் எழிலே !
தாய்மைத் தனத்தை தன்னுள் வைத்து
தமிழின் சுவைக்கு தமையே கொடுத்தாய் !!
கொடுத்தவை யாவும் கொணர்ந்து செல்ல
தொலைந்து போகாத் தொல் காப்பியத்தை !
குறைந்து போகா குறளோ வியத்துடன்
குறை வில்லாது குன்றெனக் குவித்தாய் !!
குவித்தவுன் படைப்புகள் கொடுத்திடும் மகிழ்வு
குலைதனை ஈனும் கனிமரம் போல !
இனிப்பினை சுரக்கும் இணையில்லா மலராய்
இப்புவி தனிலே இருப்பதைக் கண்டேன் !!
கண்டவர் வியக்கும் காட்சியை விஞ்சும்
கேட்டவர் மயங்கும் 'கரு'வுன் வசனம்!
படைப்புல கோரை பயப்பட வைக்கும்
பாருள்ள வரை படித்திடக் கிடைக்கும் !!
கிடைப்பவை அனைத்தும் காவியத் தென்றல்
காலங் கடந்தும் கட்டியம் கூறி !
கடமை தவறா காவலன் போலே
கட்டிக் காக்கும் 'கரு'ந்தமிழ் புதல்வன்!!
புதல்வன் உந்தன் புத்தியைக் கொண்டு
பைந்தமிழ் காக்கும் பணிதனைச் செய்து !
பெறாது பெற்ற பெரியார் கொள்கையை
படாது பட்டும் புகுத்திய மன்னன்!!
மன்னன் ஆண்ட மான்பினை உணர்ந்தே
மாநிலம் வியக்கும் மதிப்பினை ஈன்று !
மானுடம் சிறக்கும் மாட்சியைத் தந்து
மனிதம் தழைக்க மகுடம் தரித்தாய் !!
தரித்தவை தம்பியுன் தகுதியென் றெண்ணி
தலைவர் அமரர் தமக்குள் மகிழ !
தந்தை பெரியார் தாடியைத் தடவ
தரத்தோன் பெற்ற தகுதியென் றுரைத்தார்!!
உரைத்தவை எடுத்து உழுதிட்ட உழவ
வெற்றியும் தோல்வியும் வீரருக் கழகென !
வந்தவர் வழிதனில் வாழ்ந்திடும் முறையால்
வருபவர் வழியை வகுத்த தொன்னூற்றியாறே !!
தொன்னூற்றியாறு போதாது தொள்ளாயிரம் வேண்டும்
தொல்காப்பியப் பூங்காவில் துளிர்த்திடும் முகிலே!!
தொன்மை போற்றிடத் திருவள் ளுவர்க்கு
தூய முனையில் திருச்சிலை அமைத்தாய் !!
அமைத்தவை அனைத்தும் அகிலம் வியந்தது
அறிவோர் புகழும் அன்பு நிறைநதது !
சுய மரியாதைச சுடரோன் வழியில்
சீர்படும் செயலால் சிறப்பைப் பெற்றது !!
பெற்றவும் பெயரை பெரிதாய் மனத்துள்
பண்புளர் அற்றார் பாமரெ ரெனினும் !
பகைமைத் தனத்தின் பாதையைக் கடந்து
பண்டைத் தமிழின் பன் முகமென்றார் !
முன்னாள் நின்று மொழிந் திடுவோரை !
முகத்தில் தெரியும் மௌனம் களைய
முழு நிலெவென மதிக்கும் பண்பினன்
முத்தமிழ் தலைவன் மட்டும் தானோ ?
தான்தான் என்று தமைக் கருதாது
தம்மவர் அயலவர் தரம் பார்க்காது !
தரத்தினர் மதிப்பினை தரணி மதித்திட
தடத்தினைப் பதிக்கும் தலைவா வாழி !!