09 Aug 2021 2:07 amFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றமும் தேனி வையை் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய நினைவேந்தல் நிகழ்வு 08-08-2021 ஞாயிறு மாலை 6 மணியளவில் இணைய வழியில் நடைபெற்றது.
மன்றத்தின் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இரு அமைப்புகள் சார்ந்த தமிழன்பர்கள் கலந்து கொண்டு தமிழறிஞருக்கு நினைவுரை ஆற்றினார்கள்.
வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந.இளங்குமரன் சிறப்பு நினைவேந்தலுரை ஆற்றினார். (550) ஐநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும் தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்காகவே தம்மை ஒப்படைத்து தொன்னூற்றி நான்கு அகவையிலும் இடைவிடாது தமிழ்ப் பணியாற்றியவருமான முதுமுனைவர் அவர்களின் சிறப்புகளை நினைவுகூர்ந்து பேசினார்.
மொழிஞாயிறு பாவாணர் பாவேந்தர் பாரதிதாசனாருடன் அவர் வைத்திருந்த அன்பையும் மதிப்பையும் எடுத்துரைத்து உரையாற்றினார்
மன்றத்தின் புரவலர் அலிசேக் மீரான், ஆலோசகர் முகவை திருநாதன், வையைத் தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் பேராசிரியர் முனைவர் பத்மினி பாலா ஆகியோர் இரங்கலுரை ஆற்றினார்கள்.
தமிழ் எழுத்தாளர் மன்றப் பொதுச்செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி, நிர்வாகக்குழுச் செயலாளர் வே.சதானந்தன் வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுவைச் சார்ந்த சீ.ஜெயபாண்டி, அ.லட்சுமி, பா.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழுணர்வாளர்கள் பலர் இணையம் வாயிலாகவும் நேரலையிலும் கலந்து கொண்டு மொழியுணர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியினை மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொகுத்து வழங்கினார்.
வையைத் தமிழ்ச்சங்கத்தின் தொழில் நுட்பப் பிரிவைச் சார்ந்த மெய்கண்டார் மன்றத்தின் நிர்வாகக் குழுத் துணைச்செயலாளர் தேவராசன் புலமாடன் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.