Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

சிங்கக்குட்டி லே – செல்லம்மாள் நரசிம்மன்

01 Feb 2022 12:52 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-17
படைப்பாளர் - செல்லா, வட அமெரிக்கா,மெக்சிகன் மாகாணம்.

எப்போதும் "என் சிங்கக்குட்டி லே" என்றுதான் எனைக் கூப்பிட்டுக் கொஞ்சுவார் அப்பா. பதினெட்டு வயது நிரம்பிய போதும் அவ்வாறு அவரென்னை அழைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அழகாகக் கோலமிட்டாலும் சரி, ஓட்டப் பந்தயத்தில் கடைசி இடத்தில் வந்து தோற்றாலும் சரி அப்பாவின் அந்தக் கொஞ்சலில் கலந்த சிங்கக்குட்டி எனும் வார்த்தையானது அவர் என் மேல் வைத்திருக்கும் அலாதியான அன்பு கலந்த நம்பிக்கையை எப்போதும் எனக்கு எடுத்துச் சொல்லும்.

"ஏம்லே ஆறுமோ... இன்னி எத்தினி நாளிக்கித்தான் ஒன் பொட்டப்புள்ளயக் இப்டி கொஞ்சித் திரியப் போவுதன்னு நானும் பாக்கேன்" என்று அப்பத்தா எரிச்சலடைந்து அப்பாவை வைய்யும். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகும். எனக்கும் அப்பத்தாவிற்கும் ஒத்திருந்த முன் கோபம், வைராக்கியம், எதற்கும் கண் கலங்காத திட மனம் இரத்தத்தில் கலந்தேயிருப்பதால் ஒத்தே போகாது.

அம்மாவும், அப்பா அவ்வாறு என்னை 'சிங்கக்குட்டி லே' என்று கூப்பிட்டுக் கொஞ்சுவதை மிகவும் இரசிப்பாள். ஆனாலும் கறைகள் படிந்த கோரப் பற்களுடன் இருக்கும் அப்பத்தாவின் "புளிச்புளிச்"செனத் துப்பும் புகையிலை வாய்க்கு பயந்து அவ்வப்போது அப்பாவிடம் சொல்லிப் பார்ப்பாள். அவர் அதைச் செவிமடுக்காமல் இருப்பதில் எனக்குப் பெருமையுண்டு.

அப்பத்தாள் முத்துப்பேச்சிக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். அவளின் கணவர் மாடசாமியான என் தாத்தா மிகவும் நல்லவர். பெயர் தெரியாத நோய்க்கு இரையாகி பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.

ஒண்டியாக நின்று காடு கண்ணியில் வேலை செய்து எல்லார்க்கும் கல்யாணம் செய்து தந்து இன்று சுரண்டையில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு கடைசி பிள்ளையான அப்பாவைத் தன்னுடனே பொத்தி வைத்து ராஜாங்கம் நடத்தி வருகிறாள். நாங்கள் அப்பத்தாளுடன்தான் இருக்கிறோம்.

முத்துப்பேச்சி - மாடசாமி தம்பதிகளின் கடை மகனான ஆறுமுகத்தின் மூத்த மகள்தான் நான். பேச்சியம்மை. அம்மா மருதாயி. ராமன் இலட்சுமணனென்று ஆறாம் வகுப்பு படிக்கும் இரட்டைத் தம்பிகள் எனக்கு.

என் பெரியப்பா கோமதி நாயகத்திற்கு இரண்டு மகள்கள். பெரியம்மை இறந்ததால் பிள்ளைகளை அவர்களின் அம்மா வீட்டோடிருந்து மதுரையில் வளர்த்து வருகிறார் பெரியப்பா. அக்காக்கள் கல்லூரியில் படிக்கிறார்கள்.

எப்போதேனும் வருவார் ரொட்டி மற்றும் பழங்களுடன் அப்பத்தாவைப் பார்க்க. தம்பிகளை மடியில் வைத்துக் கொள்வார். என் தலையில் வாஞ்சையாக தடவிக் கொடுத்து நன்றாகப் படிக்கச் சொல்வார். பின்னர் சில மணி நேரங்கள் தோட்டத்தில் உட்கார்ந்தபடியே அப்பத்தாவிடம் பேசுவார். அம்மாவிடம் அதிகம் பேசமாட்டார் "போய்ட்டு வாறேன்" என்பதைத் தவிர.

அவர் வருமன்று மட்டும் அப்பத்தா சோறாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அவர் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார். போகும் போது அப்பத்தாவிடம் பணம் தந்துவிட்டுச் செல்வார். அப்பா வண்டியில் கூட்டிக் கொண்டு போய் மதுரை செல்லும் பேருந்தில் பெரியப்பாவை வண்டியேற்றிவிட்டு வருவார். அவருக்கு அப்பா என்றால் உயிர். அப்பாவுக்கு பெரியப்பாதான் எல்லாம்.

பெரியப்பா வந்து சென்ற நாள் முழுதும் அப்பத்தா சாப்பிடாமல் பட்டினி கிடக்கும். அவர் போன வேளையிலிருந்து அடுத்த இரண்டு நாள்களுக்கு அப்பத்தாவின் சலம்பலும் சிடுசிடுப்பும் ஜாஸ்தியாகவே இருக்கும். எல்லாரிடமும் எரிந்து எரிந்து விழும். அதன் காரணம் முன்பெல்லாம் தெரியவில்லை. இப்போது புரிகிறது.

என்னிரு அத்தைகளான செம்பகமும் கனகமும் குறும்பலாபேரியில் ஒரே வீட்டில் தங்களின் முறை மாமன்களான அண்ணன் தம்பிக்கே வாக்கப்பட்டு இருவருக்கும் தலா ஒரு மகன் மற்றும் மகளோடு ஒரே காம்பவுண்டு வீட்டில் வசிக்கின்றனர்.

என் அப்பத்தாவிற்கு மகள் வயித்துப் பேத்திகள்தான் எப்பவும் ஒசத்தி.அவர்கள் ஊரிலிருந்து வந்துவிட்டால் போதும். அவர்கள் கேட்காமலேயே தனது சுருக்குப் பையிலிருந்து அவர்களுக்குக் காசெடுத்துக் கொடுத்துப் பிடித்தமானதை வாங்கிக் கொள்ளச் சொல்லும். அத்தைகளுக்கும் சீலை, ரவிக்கை எல்லாம் எடுத்துக் கொடுக்கும். கொலுசு, பாவாடை எல்லாம் பேத்திகளுக்கு எடுத்துத் தரும்.

என்னையும் என் தம்பிகளையும் வாய் ஓயாமல் வேலை ஏவிக் கொண்டே இருக்கும்.
கடைக்குப் போய் தனக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை, தைலம் எல்லாம் வாங்கி வரச் சொல்லும். மீதமான காசுகளைக் கூடத் பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ளும்.

எப்போதாவது மீறி அவர்கள் வில்லை வாங்கக் காசு கேட்டாலும் அப்பாவிடம் வாங்கிக் கொள்ளச் சொல்லுமே தவிர தன் கையிலிருந்து ஒருபோதும் தராது. எப்போதாவது அப்பா ஊரில் இல்லையென்றால் அதுதான் குடும்பத்தை நிர்வகிக்கும். தேவையெனில் திட்டிக் கொண்டே அம்மாவுக்குத் தரும்.

ஆனாலும் அம்மாவிற்கு அப்பத்தாளைப் பிடிக்கும். அப்பத்தாவிற்கு அம்மாவைப் பிடிக்குமா என்று தெரியவில்லை. தன் வீட்டைவிட்டு எங்கேயும் செல்லாது. சென்றாலும் இராத் தங்காது. அம்மாவிடம் போய் வந்த கதை அத்தனையையும் ஒப்பிக்கும். பெண்களையும் பெண் வயித்துப் பேத்திகளையும் மட்டும் விட்டே தராது.

ஒரு நாளைக்கேனும் தன் பெயரிட்ட பேத்தியான எனக்காக அப்படிச் செய்யாது. நாங்கள் எல்லோரும் எல்லாவிதமான பணிவிடைகள் அதற்குச் செய்தும் சட்டை செய்யாதவாறே அத்தனையையும் தான் அனுபவித்துக் கொள்ளும். எங்களை அனுபவித்துக் கொல்லும்.

எமது அன்பு இதற்குக் கிழிந்த சேலை முந்தானையில் சீந்தும் சளிதான் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்.

ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் இந்த கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் கோபம்தான் வருமெனக்கு. அம்மாவிடம் முறைக்கும் போது சமாதானம் சொல்வாள். அச்சமயத்திற்கு அடங்கியது போலிருந்தாலும் அந்த நினைப்பு மட்டும் ஆறாது உள்ளே எரிந்து கொண்டே இருக்கும்.

கனகத்தையின் மகள் செல்விக்கு தையல் கற்றுக் கொள்ள ஆசை. அவளும் நானும் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை எழுதி இருந்ததால் விடுமுறையில் அத்தை எங்கள் ஊரிலுள்ள தையல் வகுப்பில் சேர்த்துவிடச் சொல்லி அவளை இங்கு இருத்திவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எனக்கு டைப்ரைட்டிங்கில் சேருவதற்கு ஆசை. அம்மாவிடம் சொல்லிச் சலித்து, அப்பாவிடம் பிடிவாதம் பிடித்தேன். அப்பாவோ அப்பத்தாவிடம் எடுத்துக்கூற முற்பட்டுத் தோற்றார். பெரியப்பா வரும்போது பேசுவதாகச் சொல்லிக் கடத்திவிட்டார்.

செல்வி தையல் வகுப்பிற்குத் தனியாகப் போகக் கூடாது என்றென்னையும் விடாப்பிடியாக அவளுடன் அனுப்பி வைக்க எண்ணினாள் அப்பத்தா. நான் எதிர்த்துப் பேச முற்படும் போதெல்லாம் அம்மா அடக்கிவிடுவாள்.

அப்பத்தா கறாராகப் "பொட்டைப் பிள்ளைக்கு என்ன ஆண்மக்க வேல வேண்டிக் கெடக்கு. என்னைக்கும் ஒரு வீட்ல ஆக்கிப் போடப் போறவதான. அதெல்லாம் ஒண்யும் வேணாம். அதுக ரெண்டும் தொணைக்கித் தொண துணி தச்சுப் படிக்கட்டும். சீரு கொடுக்கப்போ தையல் மிசின ஒண்ணு கொடுத்துறு கழுதைக்கு. கட்னவனுக்கும் புள்ளகுட்டியளுக்கும் தச்சுகிடட்டும். வெளில தைச்சுக்கக் கொடுக்ற காசாவது மிஞ்சும்." என்று சொல்லிவிட மற்ற வாய்கள் ஊமையானது.

செல்விக்கு ஆர்வம் மிக அதிகம். நன்கு தைப்பாள். எனக்கு வரையவும் வராது, வெட்டவும் வராது. தையல் டீச்சரிடம் வசவு வாங்கிக் கொண்டே தினமும் ஏனோதானோ என்று தைப்பேன். சில மாதங்களில் செல்வி நன்கு தைக்கப் பழகி ஊருக்குப் போய்விட்டாள். மேற்கொண்டு சில மாதங்கள் பழகியதில் தேறினேன் நானும்.

நானும் செல்வியும் எல்லா பாடங்களிலும் ஓரளவிற்கு மார்க் எடுத்து பாஸாகிவிட்டோம். கல்லூரி என்று பேச்சு தொடங்கியதே அப்பத்தாவிற்கு பிடிக்கவில்லை. டவுனில் பஞ்சு மில்லில் வேலை செய்யும் செம்பத்தையின் மவன் மாரியப்ப அத்தானுக்கு என்னை மணம் முடிக்க ஒத்தைக் காலில் நின்றாள் அப்பத்தா.

தையல் தெரிந்ததால் மில்லில் சொல்லி எளிதாக எனக்கு வேலை வாங்கிவிடலாம் என்று அத்தை வீட்டிலும் எண்ணினார்கள். எங்களிருவருக்குள்ளும் வயது வித்தியாசம் பத்து என்பதால் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இதில் இஷ்டமில்லை. பெரியப்பா குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சொன்னதால் அப்பா சரியென்றார்.

அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் இஷ்டம். அத்தானுக்கும் வயதாவதால் நெருக்கடி தந்தனர். எனக்கும் அத்தானைப் பிடிக்கும். டவுனில் வேலை பார்ப்பதால் கூட கொஞ்சம் சேர்த்துப் பிடிக்கும். எப்படியாவது அத்தானிடம் சொல்லி டைப்ரேடிங் கிளாஸில் சேர்ந்து பாஸ் பண்ணி நல்ல வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும். தம்பிகளை டவுனில் தங்கி காலேஜில் சேர்க்க வேண்டும் என்ற கனவினாலேயை அத்தானைக் கல்யாணம் கட்டிக் கொள்ளச் சம்மதித்தேன்.

கல்யாணம் முடிந்தது. சாப்பாட்டுப் பந்தியில் கனகத்தையின் மாமா மாறன் தண்ணிப் போட்டு பெரியப்பாவை மாமியார் வீட்டிலிருந்து கொண்டு, தன்னிரு பெண்களுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காமல் படிக்க வைப்பதைச் சொல்லி மேற்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.

பெரியப்பா கூனிக்குறுகிப் போனதைப் பார்த்ததும் அதை என்னவென்று தட்டிக் கேட்கப் போன அப்பாவின் மூஞ்சியில் மாமா காரி உமிழ, அதைப் பார்த்துப் பொறுக்காது பதிலுக்கு பெரியப்பா அவரை செருப்பாலடித்திட இரண்டு நிமிடத்தில் மிகப்பெரிய சண்டைக் களமாகிவிட்டது கல்யாண வீடு. ஊர்க்காரர்கள் தலையிட்டுப் பிரித்தனர்.

அம்மா கதறியழ, செய்வதறியாது கண்ணீரும் கம்பலையுமாக விசேஷத்திற்கு வந்திருந்த பெண்கள் எல்லாம் திகைத்து நிற்க, அத்தைகள் அப்பத்தாவையும் அம்மாவையும் மாறி மாறி வசவு பாடிச் சபித்திட, அத்துணை சாதி சனமும் வேடிக்கைப் பார்த்தது.

அப்பத்தா ஒரு நொடி என்னைப் பார்த்தாள். உடனே திரும்பி அப்பாவையும், பெரியப்பாவையும் பார்த்து,
"லே மவனுவளா, பொட்டப் புள்ளய கட்டிக் கொடுத்த வீட்டாருங்க கடைசி மூச்சு விடுத வரைக்கும் எல்லா துவாரத்தோயும் பொத்திக்கிட்டுத்தாம்ல போவணும். எல்லாத்தையும் மூடிட்டு மரியாதையா மன்னிப்புக் கேக்க வாங்கடா எம் பின்னாடி" என்று ஊரே கேட்கும்படியாய் காட்டுக் கத்து கத்தியது.

வீட்டு மாப்பிள்ளைகளிடம் தன்னிரு கைகளைக் கூப்பியபடி மன்னிப்புக் கேட்கச் சென்றாள் அப்பத்தா. கல்யாண கோலத்தில் நின்றிருந்த எனைப் பார்த்து ஏதும் பேசாமல் பெரியப்பா அப்பத்தாவைத் தொடர, அப்பாவும் அம்மாவும் தலையைத் தொங்கப் போட்டுச் சத்தமின்றி அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தனர்.

இதைப் பார்த்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் என்னை முறைத்தபடியே நின்றிருந்தார்கள் அத்தைகளும், மாமாக்களும் அவர்களின் குடும்பத்தாரும். என் கையை இறுக்கிப் பிடித்திருந்த அத்தானும் அவர்களின் முறைப்பில் பிடியைத் தளர்த்தினான்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்தவற்றை ஜீரணிக்க முடியாமல் திகைத்தேன்.‌ ஆசை, கனவு, லட்சியம், என் வாழ்க்கை என்று எல்லாவற்றையும் மறந்த நிலையில் முதன் முதலாக மானஸ்தி, ரோஷக்காரி, பிடிவாதக்காரி, திமிர் பிடித்த அழுத்தக்காரி, கோரப் பற்கள் அரக்கி என பிம்பமாகி நின்றிருந்த உள்ளத்தில் என் அப்பத்தா எங்கள் காவல் தெய்வம் பேச்சியம்மனாக விஸ்வரூபம் எடுத்து என் மனம் முழுக்க வியாபித்திருந்தாள்.

எங்கிருந்தோ வந்தவொரு கோபத்தில் என்னை அடக்க முடியாதவளாக நான், "நில்லுங்க எல்லாரும்..‌யாரும் எதுக்காகவும் யார் கால்லையும் விழ வேணாம். என்னய ‌மீறி யாராச்சும் அந்தாளுங்ககிட்ட மன்னிப்பு கின்னிப்புன்னு கேட்டீங்க... இங்க ரெண்டு கொல விழும்" என்று தீப்பொறி தெறிக்கும்படியாகக் பந்தலில் இருந்த அரிவாளைக் கையில் வைத்துக் கொண்டபடி சீறிப் பாய்ந்தேன்.

கூட்டமே கண்கொட்டாது பார்த்தது. அத்தான் கடும் கோபத்துடன் அருகில் வரப் பார்க்க எனை மீறி அவனை நோக்கி அரிவாளைச் சற்றே ஓங்கிப் பிடித்தவுடன் தடுமாறி விழப் பார்த்துச் சுதாரித்துப் பின் வாங்கினான்.

அத்தைகள் பதறி எனைப் பார்த்து ஆக்ரோஷத்துடன் கத்தி ஓடி வந்தனர். நான் மேலும் ஆத்திரமாகி, "யாராவது ஒரு அடி எடுத்து வச்சீங்க அவ்ளோதான். இந்த எழவெல்லாம் எதுக்குடீ ஏற்பாடு பண்ணீங்க? நாளுங்கெழமையுமா இருக்குற வீட்டு விசேஷத்துல தண்ணி போட்டு வர்றப் புருஷனக் கேக்கத் துப்பில்ல. இந்த வயசுலயும் உங்களுக்கும் ஒம்ம மக்களுக்கும் அவ்ளோ செய்யுற ஆத்தாளத் தெரியல‌‌.. யார்கிட்டேயும் அதிர்ந்து பேசாத கூடப் பொறந்த பொறப்புகளத் தெரியல... வந்துட்டாளுங்க வக்யத்தவங்க்யளுக்காக வரிஞ்சுக் கட்டிகிட்டு..."

"ஏய் சிறுக்கிகளா, நல்லாக் கேட்டுக்கோங்க, எவனும் எனக்குத் தேவையில்லை.

எம் மக்கள் எவரும் உங்கள்ட்ட எனக்குன்னு கெஞ்ச வேண்டியதில்ல." என்று சொல்லிச் சட்டென்று புதுத் தாலியை அனைவரின் முன்னே கழட்டி வீசினேன்.

கூட்டத்தில் பெரிய சலசலப்பு. அம்மா ஓடி வந்து என் கன்னத்தில் மாறி மாறி அறைந்து" ஏண்டி இப்டி செஞ்ச?ஏண்டி இப்டி செஞ்ச?" என்று கேட்டுக் கேட்டு மொத்தினாள். நெஞ்சில் குத்தியும், தலையில் ஓங்கியடித்துக் கொண்டும் ஓலமெடுத்து அழுதாள். அப்பா, பெரியப்பா, மாமாக்கள், அத்தான் உறவுகளென அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். அசையாது நின்றேன் நான். இதைக் கண் கொட்டாமல் கண்டு கொண்டிருந்த எனது வைராக்கியத்தின் ஒரே கண்ணெதிர் சாட்சியான என் கிழ அப்பத்தா அங்கிருந்தவாறே நிலமே அதிரும்படியாக பெருங் குரலெடுத்து கர்ஜித்தாள்.

"ஏலே பேச்சி.. நீ என் சிங்கக்குட்டி லே"!!

You already voted!
4.8 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
8 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Ramya
Ramya
2 years ago

Excellent story 👍🤩

Janakiraman
Janakiraman
2 years ago

Amazing story

Pooja
Pooja
2 years ago

Wow… Nice story

Sahaana
Sahaana
2 years ago

Really enjoyed reading it!

Jananesan
Jananesan
2 years ago

அருமை.இயல்பான எத்துரைப்பு.கண்டம் தாண்டினாலும் மண்ணினியல்பு மாறாமல் கதையை சொல்லும் நேர்த்தி பாராட்டத்தக்கது.வாழ்த்துகள் திருமதி செல்லா.

Sahaana
Sahaana
2 years ago

Really Amazing story. Well done.

Anonymous
Anonymous
2 years ago

Amazingly written! Surely you will get 1st prize!!!!

Last edited 2 years ago by Anonymous
Dr. Gomathi
Dr. Gomathi
2 years ago

சிறந்த கதை. நீங்கள் கதையை விவரிக்கும் விதம் அருமை

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096855
Users Today : 10
Total Users : 96855
Views Today : 18
Total views : 417274
Who's Online : 0
Your IP Address : 18.119.119.149

Archives (முந்தைய செய்திகள்)