13 Feb 2022 11:54 pmFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-33
படைப்பாளர் - ஆசு என்கிற ஆ. சுப்பிரமணியன், அம்பத்தூர், சென்னை
சிறுவன் ராஜு எதிர்த்த வீட்டு வாசல்படல்முன் உட்கார்ந்திருந்தான். அந்த வீடு ஒரு குறுகிய தெருவின் திருப்பத்தில் உள்ளது. கையில் ரொட்டித் துண்டுகள் வைத்திருந்தான். சிறுவனுக்கு எட்டிலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும். அரைடவுசரும், மேல்சட்டையும் அணிந்திருந்தான். அவன் உடம்பைப் பார்க்கையில் குளிக்காமல் அழுக்கு படர்ந்திருந்தது. கையிலுள்ள ரொட்டித் துண்டுகளைப் பிய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டின் படல்முன் உட்கார்ந்திருப்பதில் அவனுக்கு யாதொரு கூச்சமும் இல்லை. வருவோர் போவோர் இந்தப் பையன் ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறான் என்று எண்ணினார்கள். வீட்டுக்காரம்மாள் வந்து படலைத் திறந்து பார்த்தாள். அதுவும் அதிகாலையிலேயே அந்தப் பையன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பது என்னமோ சகுனம் சரியில்லாதது மாதிரி நினைத்தாள்.
“ஏன்டா, காலையிலேயே இங்கு உட்கார்ந்திட்டியே?“ என்றாள்.
ரொட்டித் துண்டுகளைத் தின்று கொண்டிருந்தவனுக்கு ஏதோ குறுக்கிட்ட மாதிரி திடுக்கிட்டவன், அந்த வீட்டுக்கார அம்மாவைப் பார்த்தவுடன் இவங்க வேற என்று ஒருமுறை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். அந்த வீட்டின் நாய் உள்ளிருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
அந்தத் தெருவின் திருப்பத்தில் திபுதிபுவென இரண்டு மூன்று பேர், “பையன்… பையன்…“ என்று சத்தமிட்டுக் கொண்டே அவனைப் பார்க்காது ஓடினார்கள். அந்தச் சிறுவன் அவர்களைப் பார்த்தான். உட்கார்ந்திருந்தவன் கொஞ்சம் தூரம் தள்ளி, வேறு மறைவிடம் போய் உட்கார்ந்தான்.
வீட்டுக்காரம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தச் சிறுவனிடம் என்னிடம் என்ன ஏது என்று விசாரிக்கலாமா என்று தோன்றியது. அவன் அப்போதும் ரொட்டித் துண்டுகளை தின்று கொண்டிருந்தான். அந்த வீட்டுநாய் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டுக் குரைத்தது.
வீட்டுக்காரம்மாள் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்து வாசலில் தெளித்தாள். பொழுது விடிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து வாசலில் நீர் தெளித்துக் கூட்டுவதும், கோலமிடுவதும் அவளின் காதுகளுக்குச் சன்னமாய்க் கேட்டது.
அந்தத் தெருவை ஒட்டினாற் போலுள்ள இன்னொரு தெருவில், “பையன்… பையன்…“ என்று சத்தமிட்டு முன்பு ஓடியவர்கள் இப்போதும் போகிறார்கள். சிறுவனுக்கு அவர்களின் குரல் கேட்கவும் தூக்கிவாரிப் போட்டது. அங்கிருந்து போய்விடலாமா என்று நினைத்தான். அந்த இடம் அவனுக்குச் சரியாக இருப்பதாகத் தோன்றவே இன்னும் அழுந்தி உட்கார்ந்தான்.
இன்னொரு பையன் சிறுவன் ராஜுவைத் தேடி வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் பார்வைக்கு அவன் தென்படவில்லை. “ராஜு… ராஜு…“ என அழைத்தான். அந்தப் பையன் அழைப்பது அவனுக்குக் கேட்டது. அவன் குரலை வைத்து யார் என ஊகித்து விட்டான்.
‘ராஜி…‘ அந்தப் பையனின் குரல் கேட்டவுடன் அந்த வீட்டின் மதிற் சுவரோரமுள்ள மரத்தடியில் ஒளிந்துகொண்டான். வீட்டுக்காரம்மாவுக்கு ஏதோ பொறி தட்டவே அந்தம்மாள் சிறுவன் இப்போது எங்கிருக்கிறான் என்று நோட்டமிட்டாள். அவள் கண்ணுக்கு அவன் தட்டுப்படவில்லை.
அப்போதும் அந்தச் சிறுவன் ரொட்டித் துண்டுகளைப் பிய்த்து தின்று கொண்டிருந்தான். அங்கிருந்து போய்விட வேண்டுமென்று யோசனையாக இருந்தது அவனுக்கு.
ராஜி அவனைப் பற்றி நினைத்தான்.
அச்சிறுவன் அந்த வயதிலேயே அப்பா அம்மாவை இழந்திருந்தான். கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. ஒண்டியாளாக மனம் போனபோக்கில் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பள்ளிப் படிப்பு பற்றியோ, ஒரு வேலை செய்வது பற்றியோ ஏதொன்றிலும் நாட்டமில்லாமல் அவன் போன போக்கில் வாழ்கிறான். எப்படியோ அவனுக்கு உயிர் வாழ, பசிக்கான உணவும் கிடைத்துவிடுகிறது.
அந்தச் சிறுவனைத் தெரிந்தவர்கள், “ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்துவிடுகிறோம், நீ உன் வாழ்வை ஒழுங்குப்படுத்திக் கொள்…“ என்று சொல்லியும் பார்த்துவிட்டார்கள். அவன் யார் சொல்லுக்கும் கட்டுப்படுகிற மாதிரி தெரியவில்லை. அவன் பிழைப்பு அலைந்து திரிந்துதான் ஓட்ட வேண்டியதாயிற்று.
ராஜிவைத் தேடி வந்த பையன் அவனைக் கண்டவுடன், “ஏண்டா… என்னடா ஆச்சு ஒனக்கு?“ என்று கேட்டான்.
ராஜி மலங்க மலங்க அழுதான்.
“அழாதே…“ என்று சொன்னான்.
அவன் கையிலுள்ள ரொட்டித் துண்டுகளைப் பிய்த்து, “சாப்பிடு…“ என்று கொடுத்தான்.
ராஜி தெருத் தெருவாகச் சுற்றித் திரிவதும், யாரோ கொடுக்கும் உணவுக்காகவும் அவன் வாழ்க்கை ஓட்டத்தில் அந்தப் பையன் அவனுக்கு நண்பனானான். “எங்க வீட்டுக்கு வா, நாங்க ஒன்ன பார்த்துக் கொள்கிறோம்“ என்றுகூடச் சொல்லிப் பார்த்தான். எதற்கும் அவன் கட்டுப்படவில்லை. அந்தப் பையனும் அவனுக்காக அழுதான்.
அதற்குள் அந்த வீட்டுக்காரம்மாள் ராஜிவைத் தேடி வந்து பார்த்தாள். “காலங் காத்தாலேயே பொறுக்க வந்துடுங்க…“ அவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டதும், கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
“நா ஒன்னும் உங்க வீட்டாண்டை ஒக்காந்துயில்ல…“ என்றான்.
ராஜிவின் நண்பன், “அவன ஒனக்கு இன்னா தொந்தரவு பண்ணான். போம்மா ஞாயம் பேசிக்கிட்டு…“ முறைத்துப் பேசினான்.
வீட்டுக்காரம்மாள், “மொளச்சி மூணு எல வரல, இதுக்குள்ள சவடாலு…“ கையை ஆட்டிக் கொண்டே அவனைப் பார்க்கையில், ஒரு மாதிரி தோன்றவே, அவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள். அவளுக்கு அந்தப் பையனை அதிகாரம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனசில்பட்டது.
அப்போதும் ராஜிவை அந்தப் பையன், “என்கூட வந்துடு…“
“எங்க அம்மா நல்லா பாத்துக்கும்…“ என்றான்.
அவனுக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை. “நீ போடா…“ என்று மட்டும் தலையசைத்தான் ராஜி. அந்தப் பையனின் மனசு தாங்காது அவனிடமிருந்து கிளம்பினான்.
ராஜி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். கையிலே ரொட்டித் துண்டுகள் இருந்தன. காக்கைகள் அவனைச் சுற்றி வட்டமிட்டன. அவன் கையிலுள்ள ரொட்டித் துண்டுக்காய் கரைந்தன. அவன் ரொட்டித் துண்டுகளை அவற்றிற்குப் பிய்த்துப் போட்டான். காக்கைகள் நீண்ட நாள் பசித்து இருப்பதுபோல, அவன் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொத்தி தின்றது.
இப்போது பொழுது விடிந்திருந்தது. சிறுவர்கள் நடந்து போகிறார்கள். அவரவர் வேலையை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்களுக்கு ராஜிவைப் பார்த்ததும், “இந்தப் பையன் ஏன் தெருத் தெருவா சுற்றிக் கொண்டிருக்கிறான்?“ என்று நினைத்தார்கள். அதிலொரு பையன் அவனுக்குத் தெரிந்தாற்போல, “ராஜி நல்லா இருக்கியா?“ என்றான்.
அவன், ‘ம்…‘ என்று தலையசைத்தான்.
“ஏண்டா ஒண்டியா கஷ்டப்படுற, எங்கப்பா இரும்புப் பட்டறயில ஏதாச்சும் வேல செய்டா… அப்பாக்கிட்ட சொல்றன்…“ என்று என்றான்.
ராஜிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதாச்சும் வேலை தேடித்தான் ஆக வேண்டும் என்று மட்டும் அவன் மனசில்பட்டது. “நானே வந்து ஒன்ன பாக்குறன்டா…“ என்றான். அந்தப் பையன் அடுத்த தெருவில் இருப்பது அவனுக்குத் தெரியும்.
ஒருநாள் அவன் வீட்டு வழியே போகும்போது அவன் அறிமுகம் ஆனான். அந்த வீட்டைக் காட்டி, “இதுதான் என் வீடு எப்போது வேணுமானாலும் வா…“ என்றான். சிறுவர்கள் அவனிடமிருந்து விடைபெற்றுப் போயினர்.
ராஜி கையிலே ஒரு பிளாஸ்டிக் பை வைத்திருந்தான். அதிலே சோப்பு சீப்பு போஸ்ட் பிரஷ் தேவையான பொருட்கள் வைத்திருந்தான். சின்ன டைரி ஒன்றும் வைத்திருந்தான். படிக்கத் தெரியாது. தெரிந்தவர்களிடம் எழுத்துக் கூட்டி அவன் அப்பா அம்மா ஊர் தெரிந்தவர்களின் தொலைபேசி எண்கள் எழுதி வைத்திருந்தான். அவனுக்குப் பழக்கமான ஒரு சிறுமியின் புகைப்படமும் ஒன்று இருந்தது. அந்தச் சிறுமியின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவன் அம்மாவின் ஞாபகம் வந்து கண்கலங்குவான். அவன் அனாதை என்றாலும் அம்மா அப்பா முகம் அவன் ஞாபகத்தில் இருக்கின்றது.
ராஜி மனசில் கடந்த காலத்தை நினைவில் கொண்டு ஓடவிட்டு, அந்தத் தெருவில் போய்க் கொண்டிருந்தான். தேன்சிட்டு ஒன்று அவனை முத்தமிடுவதுபோல உரசிப் போயிற்று. எதிர்படுகிறவர்கள் அவனைப் பார்த்ததும் புன்சிரிப்பை உதிர்த்துப் போயினர்.
இரண்டு தெரு தள்ளி, “அவனைப் பிடி… பிடி…“ என்று சத்தமிட்ட அவர்கள் மீண்டும் அவர்கள் திபுதிபுவென ஓடி வரும் சத்தம் கேட்டது. ராஜி விழித்தான். அவன் இருக்கும் இடத்தில் மறைந்துகொள்ள இடம் ஒன்றும் தென்படவில்லை. தெருமுனையில் அவர்கள் வந்து விட்டனர். அவன் திகைத்தான்.
அவன் அவர்கள் எதிர்ப்புறமாக ஓடுவதற்குள் அந்தக் கும்பல் அவனைப் பிடித்து விட்டது. அதில் ஒருவன் அவன் சட்டையைப் பிடித்தான். ராஜிவின் கண்கள் கண்ணீரால் நிரம்பி என்ன பேசுவது என்று திகைத்தான். அப்போது அவன், “விடுங்க…“ என்றான்.
ஒருவன் சொன்னான், “நீதானே ரொட்டித் துண்டுகளைத் திருடினாய்?“
சிறுவன், “ஆம்…“ என்றான்.
இன்னொருவன் சொன்னான், “அவனிடமிருந்து அதுக்கு என்ன பணமோ வாங்கு…“
சிறுவன் சட்டைப் பைக்குள் கைவிட்டுத் துழாவினான். காசு ஏதுமில்லை. “அடுத்த தபா பார்க்கும்போது கொடுத்துவிடுகிறேன் ஐயா…“ என்று சொன்னான்.
அவனுக்கு அவன்மீது நம்பிக்கை வரவில்லை.
ஒருவன் அவன் கையில் மீதமிருந்த ரொட்டித் துண்டைத் தட்டிப் பறித்தான்.
இன்னொருவன் அவன் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை வாங்கி, கீழே கொட்டிப் பார்த்தான். அதிலிருந்த பொருட்கள் அவர்களுக்குத் தேவையில்லாததாக இருந்தன. பிளாஸ்டிக் பையைத் தரையில் வீசினான்.
இன்னொருவன் அந்தச் சிறுவனை ஓங்கி அறைந்தான். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒரு வீட்டின் முன் சந்தித்த பெண்மணி அவனைச் சூழ்ந்து இருப்பவர்கள் அவனை அடிப்பதைப் பார்த்துக் கொண்டு போனாள். ஒரு வார்த்தைகூட என்ன ஏது என்று கேட்கவில்லை. அந்தச் சிறுவனை ஆளுக்கோர் அடியாக அடித்து ஒன்றும் பயனில்லை என்று அவரவர் அங்கிருந்து நகர்ந்தனர்.
ராஜி சாலையின் நடைபாதையின் ஓரம் சோர்ந்து உட்கார்ந்தான். சாலையில் அவன் வைத்திருந்த பையும் அதிலுள்ள பொருட்களும் சிதறிக் கிடந்தன.
அவனைச் சுற்றி வட்டமிட்ட காக்கைகள் கொஞ்சம் தொலைவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு வீட்டின் முன் சந்தித்த பெண்மணி அவனைப் பார்த்ததும், பார்க்காதது மாதிரி போய்க் கொண்டிருந்தாள்.