14 Feb 2022 12:26 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-34
படைப்பாளர் - கே. ஆர். ஸ்ரீநிவாசன், கோரேகாவ், மும்பை
நான் குனிந்து எழுதிக்கொண்டிருந்தேன். காலை 11 அல்லது 11.30 மணி இருக்கலாம். அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் வருவதும் போவதும் ஆக இருந்தார்கள்.
நான் என்னுடைய வேலையில் தீவிரமாக இருந்தபோது என் முன் ஏதோ நிழலாடியது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். யாரோ ஒருவர் எனது மேசைக்கு முன்னால் நான் எப்போது தலை நிமிர்வேன் என்று எதிர்பார்த்து நின்றிருந்தது போல் தெரிந்தது.
நிமிர்ந்து பார்த்ததும் முகம் தெரிகின்ற வகையில் இருந்திருக்கவில்லை. அவரை பார்த்ததும் சிங்காரவேலன் படத்தில் கமலஹாசன் உடம்பு எல்லாம் மாவுக்கட்டு போடப்பட்டு வாய்க்கு ஒரு ஓட்டையும் கண்களுக்காக இரண்டு ஓட்டையுடன் பார்த்த காட்சி தான் உடனே நினைவுக்கு வந்தது. கண்கள் மற்றும் வாய் தவிர தலை முழுவதும் வெள்ளை துணியால் கட்டு போடப்பட்டிருந்தது. தலைப் பாகத்தில் இரத்தம் கசிந்து உறைந்து போயிருக்க வேண்டும். துணிக்கட்டில் திட்டு திட்டாக செம்மை படிந்திருந்தது.
நான் நிமிர்ந்து பார்த்த பார்வையில் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? வாய்விட்டு கேட்கவில்லை. மனதிற்குள் எழுந்த என்னுடைய கேள்விகளை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன். என்னைத் தெரியவில்லையா? நீங்கள் நேற்று கூட வேல் பூசைக்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தீர்களே. நீங்கள் கூட என்பாட்டு மிகவும் உருக்கமாக இருந்ததாக சொன்னீர்களே! இது அவன்.
சிந்தனை பின்னோக்கிப் போகிறது. நேற்று நடந்தது கண்முன் திரையில் படர்கிறது.
அப்போதுதான் தொலைக்காட்சி அறிமுகமாகி இருந்த காலம். ஊராக இருந்தா தெருவுக்கு ஒன்றிரண்டு வீட்டில் இருக்கும். நகரமாக இருந்தால் அடுக்கு மாடி கட்டிடத்தில் அங்கொரு ஃபிளாட் இங்கொரு ஃபிளாட்டில் என்று இருக்கும். இப்போதுபோல் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்காது. 108 சேனல்கள் எல்லாம் கிடையாது. அரசு ஒளிபரப்பு மட்டும் மாலை 6 மணிக்கு தான் ஒளிபரப்பே ஆரம்பிக்கும் பத்து பதினொன்றுக்கு எல்லாம் முடிந்துவிடும். வாரத்திற்கு ஒரு நாள் ஒளியும் ஒலியும் அரைமணி நேரம். அதில் 5 அல்லது 6 மொழிகளில் ஒரு பாடல் இடம் பெறும். அடுத்து தமிழ் பாட்டு வரும் என்று ஒவ்வொரு மொழி பாட்டும் முடிந்ததும் காத்திருப்போம். நேரம் முடிந்துவிடும், ஆனால் தமிழ் பாட்டு வந்த பாடாக இருக்காது
மனம் விரக்தியில் இருந்தாலும் அடுத்த வாரம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை விரக்தியை விரட்டியடிக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் சரி. இல்லையேல் விரக்தியுடன் மற்றுமொரு வாரம் கழிந்து போகும். ஞாயிறுதோறும் ஒரு திரைப்படம். அதனுடைய கதையும் இப்படித்தான்.
வார விடுமுறையில் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வருவது என்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது. மாலையில் சென்றால் பேசிக்கொண்டிருக்கையில் நேரம் கரைவதே தெரியாது. சில நேரங்களில் இரவுச் சாப்பாடு முடித்துவிட்டுதான் புறப்படும்படி ஆகிவிடும். அப்படி ஒட்டுதல். அடுத்த வாரம் நீங்கள் நிச்சயமாக எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி சம்மதம் பெற்று திரும்புவதில் ஒரு திருப்தி.
அப்படிப்பட்ட ஒரு அழைப்பு பேரில் நேற்று ஒரு வீட்டிற்கு பூசைக்கு சென்றது நினைவுக்கு வந்தது. நேரடியாக பழக்கம் கிடையாது என்றாலும் நெருங்கிய நண்பர் அழைப்பை மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டேன்.
வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும்வேல் பூசை . நன்றாக இருக்கும், நான் வருடாவருடம் செல்வதுண்டு. முருகன் அடிகள் வந்து நடத்திக் கொடுப்பார். அவரும் உங்களைப் போலவே சிறந்த நண்பர். இந்த தடவை நீங்களும் வாருங்கள். அவர்களும் மகிழ்வார்கள் என்று வற்புறுத்தும்போது எப்படி போகாமல் இருக்க முடியும்.
நாங்கள் நான்கு மணிக்கு சென்றுவிட்டோம். ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களுக்கு எல்லாம் முதலில் காப்பி கொடுத்தார்கள். ஐந்து மணிக்கு பூசை ஆரம்பிக்கும் என்றார்கள். இதற்கிடையில் முருகன் அடிகள் பூசைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். நடுவில் வெள்ளி வேல் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. சுற்றி வண்ண மலர்கள். பழங்கள், வடை, அதிரசம், முறுக்கு எல்லாம் அங்கே இடம் பெற்றிருந்தது. நைவேத்தியப் பொருள்கள். அலங்காரம் அற்புதமாக இருந்தது. அடிகள் ஆரம்பிக்கலாமா என்று வீட்டுக்காரர் விஸ்வநாதன் அவர்களைப் பார்த்து கேட்டார்.
நீங்கள் ஒரு தடவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் தாராளமாக ஆரம்பியுங்கள் என்றார்.
கந்த சஷ்டி கவசத்துடன் பூசை ஆரம்பம் ஆனது. ஷண்முக கவசம், ஸ்ரீ ஸ்கந்தகுர கவசம், அருணகிரிநாதர் பாடல்கள் என அடிகளார் பாடிக் கொண்டும் அவ்வப்போது விளக்கமும் அளித்துக் கொண்டிருந்ததால் யாருக்கும் அலுப்பு தட்டாமல் இருந்தது.
ஐந்து மணிக்கு ஆரம்பித்த பூசை சரியாக எட்டு மணிக்கு முடிந்தது. மூன்று மணி நேரம் பக்தி பிரவாகத்தில் ஒவ்வொருவரும் திளைத்துக் கொண்டிருந்தனர். பின்னர் வந்திருந்தவர்களில் யாருக்கேனும் பாட விருப்பம் இருந்தால் பாடலாம் என்றார் முருகன் அடிகள். சிறிது நேர மௌனத்திற்கும், தயக்கத்துக்கும் பிறகு என் நண்பரின் மனைவி முருகன் பாமாலை மனமுருக பாடினார்.
முதலில் ஆரம்பிப்பதற்குத்தான் தயக்கம், ஒருவர் துணிந்து தொடங்கிவிட்டால் பின்னால் எல்லோருக்கும் ஒரு தைரியம் வந்துவிடும். அந்த விதத்தில் ஐந்து ஆறு பேர் பாடினார்கள். குறிப்பாக அந்த வீட்டுக்காரரின் பையன் டி. எம். எஸ் அவர்கள் பாடிய முருகன் பால்களை கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும். . . உள்ளம் உருகுதைய்யா உன் எழில் காண்கையிலே. . . மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். . .சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா . . உண்மையிலேயே மிக நன்றாக பாடினான். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் டி. எம். எஸ். பக்கத்திலேயே உட்கார்ந்து பாடுகிறாரோ என்று எண்ணும்படிக்கு தத்ரூபமாக இருந்தது.
அவன் வீட்டுக்காரரின் பையன் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போது வீட்டுக்காரர் உண்மையிலேயே முருகன் அருள் ஆசி பெற்றவர்தான் என்பதற்கு சான்று என்று சிலர் அங்கே வாய்விட்டு பாராட்டினார்கள். நானும் பிரசாதம் எல்லாம் பெற்றுக்கொண்டு வரும்போது அவனை தனியாக பார்த்து பாராட்டு தெரிவித்ததைத்தான் அவன் நினைவு படுத்துகிறான்.
என்னாச்சு? என்ன முகமெல்லாம் கட்டு!
ஒன்றும் இல்லை. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட், தலைல அடிபட்டுடுத்து. இவர்தான் என்று பக்கத்தில் நின்றிருந்த ஒருவரைக் காட்டி என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் உதவி பண்ணினார். அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். ஒரு நூறு ரூபாய் கொடுத்து உதவினால் நல்லது. இரண்டு நாட்களில் வந்து திரும்பி கொடுத்துவிடுகிறேன், என்றான்.
அவனைப் பார்க்கவே எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. ஆனால் என்னிடத்தில் அவன் கேட்ட அளவிற்கு பணம் இல்லை. யாரிடமும் கேட்டு வாங்கிக் கொடுப்பதற்கு மனம் இல்லை. ஐம்பது ரூபாய் இருந்தது. இருப்பதை கொடுத்துவிட்டால் செலவுக்கு என்ன செய்வது என தயக்கமாகவும் இருந்தது. என்னால் முடியாது என்று சொல்லவும் முடியாது. இன்னும் ஈரம் முற்றிலுமாக வற்றிடவில்லை.
இப்போது என்னால் இருபத்தி ஐந்து ரூபாய் தான் தர முடியும் என்று சொல்லி கொடுத்தேன். அவனும் பத்தும் பத்தாது என்றோ, வேறு யாரிடமாவது வாங்கிக் கொடுங்கங்கள் என்றோ என்னை இக்கட்டில் ஆழ்த்தவில்லை. அந்த அளவிற்கு நல்லவன். கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு பேசாமல் சென்றுவிட்டான்.
கடவுள் மீது சற்று வெறுப்பு கூட ஏற்பட்டது. நேற்று எவ்வளவு அழகாக உன் புகழ் பாடினான். அவனுக்கு இன்று ஏன் இந்த கதி. உண்மையில் உனக்கு ஏன் கருணைக் கடல் என்று சொல்லுகிறார்கள் என்பது புரியவில்லை. கடல் அளவு வேண்டாம் குளம் அளவுக்கேனும் உன்னிடம் கருணை இருந்திருந்தால் அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
மறுபடி நான் என் வேலையில் நான் மூழ்கிவிட்டேன். அவன் வந்தது, விவரம் சொன்னது, பணம் கொடுத்தது, எல்லாமே மறந்து போனது. மாலையில் ரயிலில் வீட்டிற்கு திரும்பும்போதுதான் அவன் வந்து சென்ற காட்சி மனத்திரையில் ஓட ஆரம்பித்தது.
இன்னமும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது என் அலுவலக முகவரி அவனுக்கு எப்படி கிடைத்தது. ஒரு தடவை சந்தித்து இரண்டு வார்த்தை பேசி இருக்கிறோம் அவ்வளவே பழக்கம். நான் இங்கே வேலை செய்வது அவனுக்கு எப்படி தெரியும், ஏதோ மிகவும் பழகிய இடம்போல் எவ்வளவு சாதாரணமாக என் முன்னே வந்து நின்றான்.
யாரிடம் கேட்டிருப்பான். யார் சொல்லி இருப்பார்கள். என்ன வென்று கேட்டிருப்பான். அவன் வீட்டிற்கு சென்று என்னிடம் பணம் வாங்கிக்கொண்டதை சொல்லுவானா? எந்த கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. பதிலைப் பற்றி கவலைப் படாமல் கேள்விகள் மட்டுமே தொடர்ந்து கொண்டே இருந்தன. வாங்கிய ரூபாயை அவன் திருப்பி கொடுப்பானா? அவனே கொண்டு வந்து கொடுப்பானா? கொடுக்கவில்லை என்றால். . . நாம்தான் அவனைப் போய் பார்த்து கேட்க வேண்டி இருக்குமோ. கேட்டதும் உடனே கொடுத்துவிடுவானா. . . ஏதாவது சாக்கு போக்கு சொல்லுவானோ. எதுவும் சரியாக பிடிபட வில்லை.
இதற்குள் சிற்றோடையை வண்டி கடக்கும்போது தடக் தடக் தடக் சத்தம் கேட்டது. இன்னும் ஐந்து நிமிடத்தில் இறங்க வேண்டிய ஸ்டேஷன் கோரேகான் வந்துவிடும். சர்ச்கேட் தொடங்கி கோரேகான் வரைக்குமா, ஒரு முக்கால் மணி நேரமாகவா ஒரே சிந்தனையில் இருந்திருக்கிறோம்.
இப்போதைக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதையே மறந்து இருப்பதுதான் நல்லது.
நிம்மதியாக உறங்கி எழுந்து மறு நாள் வழக்கம்போல் அலுவலகம் செல்ல கோரேகான் ஸ்டேஷனில் லோக்கல் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். இங்கொருவரும் அங்கொருவருமாக ஆங்காங்கே தனிப்பட்டும், சிலர் கூடிப் பேசிக்கொண்டிப்பதுமாக இருந்தார்கள். வண்டி வர வேண்டிய நேரம்.கூட்டத்தில் பரபரப்பு சலசலப்பு. வண்டிவந்து நிற்கும் முன் ஏறி இடம்பிடிக்க வேண்டுமே!
லோக்கல் வருவதையும், அதில் ஆண்களும் பெண்களும் முண்டி அடித்துக்கொண்டு ஏறுவதும், ஒருவரே இரண்டு மூன்று பேர்களுக்காக இடத்தை பிடித்து வைப்பதும் தினசரி நடக்கும் சம்பவம். என்றாலும் அதற்கு ஒரு தனியாக சாதுர்யம் வேண்டும். வண்டி நிற்கும் முன்பாக வண்டிக்குள் ஏறும் திறமை உள்ளவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். இல்லை என்றால் தாராளமாக வசதியாக நின்று கொள்ளலாம். சில சமயங்களில் அதற்கும்கூட போராட வேண்டி இருக்கும்.
பொதுவாக இறங்குபவர்களுக்கு வழிவிட்டு ஏற வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் எல்லோரும் ஏறிய பின்புதான் இறங்க வேண்டியவர்கள் இறங்குவார்கள். இது எழுதப்படாத சட்டம். விதிப்படி யாராவது நடக்கிறார்கள் என்றால் அவர்கள் பம்பாய்க்கு புதியவர் என்பதை புரிந்து கொண்டுவிடலாம்.
அந்த கணத்தில்தான் அந்த காட்சி, இரண்டு பேர் சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. நான் அவர்களை நன்றாகவே பார்த்து அடையாளம் கண்டு கொண்டேன்.
அவன்தான். அதே அவனேதான். நேற்று என்னிடம் வந்து பணம் வாங்கிக்கொண்டு போனவன்தான். அந்த கட்டு எல்லாம் எங்கே? நேற்று அவன் முகம் கட்டுபோட்டு மறைத்திருந்ததே எப்படி அவ்வளவு சரியாக அவன் என்று எப்படி சொல்லமுடியும்.
நேற்று முகம் தெரியவில்லை. உண்மைதான். அனால் நேற்றைய முன் தினம் பார்த்த முகத்தை மறக்க வில்லை. அதுவும் இதுவும் ஒன்று, அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அந்த இருவரும் கூட்டு களவானிகளா? நேற்று என்னை ஏமாற்றிவிட்டான், இல்லை நான் ஏமார்ந்துவிட்டேன், ஏமாற்றப்பட்டுவிட்டேன். அவன் புத்திசாலியா? சாமர்த்தியசாலியா? நான் இளிச்சவாயனா? ஏமாளியா? எப்படி இருந்தாலும் நஷ்டம் எனக்குத்தான். கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவரால் இப்படி எல்லாம் செய்யமுடியுமா?
ஊன் உருக என்புருக பாடிய தெல்லாம் வெளி வேஷம். அது ஒரு மீன்பிடி வலை.
இன்று என்ன திட்டத்தோடு கிளம்பி இருக்கிறானோ தெரியவில்லை. என்ன நாடகம் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை. யார் பலிகடா ஆகப்போகிறார்களோ தெரியவில்லை.
இன்று பார்த்த முகம், நேற்று பார்த்த முகம், அதற்கு முன் தினம் பார்த்த முகம் எல்லாம் ஒன்றுதான். ஒரே உடல் தாங்கி நிற்கும் முகம். நமக்கு நிழல் தெரிகிறது, நிஜம் தெரிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் பிரதிபலிப்பு முகம். அதனால் முகத்தில் படியும் நிழல் மாறிக்கொண்டே இருக்கிறது.
நிழலிலிருந்து நிஜத்தை துல்லியமாக கணிப்பது கடினம். நாம் நிழலையே உண்மை என்று நம்பிக்கை கொள்ளும்படியாக வார்க்கப்பட்டுவிட்டோம். முகம் என்பதே ஓர் அடையாளம் தானே. இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் ஒரு நிழல் படிந்த முகத்தை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது?
நல்லவன், பக்திமான், கெட்டவன், நயவஞ்சகன், ஏமாற்றுபேர்வழி, பச்சோந்தி, என்ன என்று அடையாளமிடுவது. அப்படி அடையாளப்படுத்துவதுகூட சரியானதா தெரியவில்லை.
ஆனால் ஓன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. நேற்றைய பணம் இனி ஒருபோதும் என் கைக்கு திரும்ப வராது.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு. பாத்திரமறிந்து பிச்சை இடு – போன்ற பழமொழிகளை மனதிற் கொண்டு உதவ வலியுறுத்துகிறது ஆசிரியரின் சிறுகதை.
மிகவும் சிறப்பு.
யதார்த்தமான வர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு கதை.
தெளிவான நடை. கடவுள் பேர் சொல்லி எவ்வளவு நாசுக்காக ஏமாற்றுகிறார்கள்.
தற்காலத்திற்கும் பொருத்தமான கதை. இன்றோ பலர் பலவித முகமுடிகளை அணிந்து கொண்டு உலவுகின்றனர்.