Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பசி – எஸ். லக்ஷ்மிகாந்தன்

15 Feb 2022 8:36 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures pasi 1

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-57
படைப்பாளர் - எஸ். லக்ஷ்மிகாந்தன், சேலம்

ரேஷன் கடை மூலம் கொடுத்த  ஆயிரம் ரூபாய்கள். இரண்டு நாள்கூட தாண்டவில்லை. மூலை மளிகைக் கடையில் அந்த ஆயிரத்தில் பழைய பாக்கி அறுநூறை வாங்கிக் கொண்டதாக அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அதுபோக இலவச அரிசி, பருப்பு வகைகள் எல்லாம் ஒரு வாரம், பத்துநாள்தான் வரும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பழனிக்கு தன் பள்ளிக்கூடம் விடுமுறையாகிப் போனதில் ரொம்பவும் கஷ்டப்பட்டான். நண்பர்களுடன் விளையாட முடியாமல் போய்விட்டது. மிகவும் கஷ்டமாகிப் போனது. வகுப்புத் தேர்வுகளில் மற்ற மாணவர்களைவிட அதிக மார்க் வாங்கி பெருமைப்பட்டுக்  கொள்ளும் தருணங்கள் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதைவிட முக்கியமாக பள்ளியில் சத்துணவு சாப்பிட முடியாமல் போய்விட்டதுதான் வருத்தமாக இருந்தது. அது இருந்திருந்தால் வீட்டு சமையல் இன்னும் ரெண்டு மூணு நாட்கள்கூட வரும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்ததும் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது.

எப்போதுதான் இந்த பிரச்சனைகள் தீரும் எனத் தெரியவில்லை. அப்பா இப்போதெல்லாம் வேலை செய்யவே போகாமல் வீட்டினுள்ளே இருக்கிறார். ஏற்கனவே சம்பாதித்து வந்த சொற்ப வருமானம்கூட இல்லாமல் போயிற்று. பணம் இல்லாததால் கோபம் வருகிறது. வீட்டில் சண்டையும் ஆகிறது.

“டேய் பழனி… இங்க வாடா” அப்பாதான் கூப்பிட்டார்.

“என்னப்பா?”

“கையில இருந்த காசெல்லாம் காலி. நாளைக்கு சோற்றுக்கு வழியில்லை. நீ வெள்ளிப் பட்டறைக்கு போயிந்தாகூட வருமானம் வந்திருக்கும். உன்னை படிக்க வெக்கிற வாத்யார் வீடு எங்கடா இருக்கு?”

“இங்கதான்ப்பா! . . .  பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலே தான்…”

“அவர்கிட்டே போனா ஏதாவது காசு கிடைக்குமா?… கடன் மாதிரி ஏதாவது தருவாரா?…”

“தெரியலையேப்பா…”

“நீ போய் கேட்டுப் பாரேன். ஏதாவது கிடைச்சா பரவாயில்லை. நிலைமை எப்ப சரியாவும்னு தெரியாது…”

“சரிப்பா…”

துணி மாஸ்க் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

----

பாலு வாத்தியார் விடு, பள்ளிக்கூடத்திற்கு அப்பால் இருந்தது. நடந்து போகும் தூரம்தான். பழனி கிளம்பிவிட்டான். பள்ளியின் காம்பவுண்ட் சுவர் சுற்றிப் போனால் அவர் வீடு இன்னும் பக்கம். பள்ளிக்கூடம் வழியாக போனான் பழனி.

யாருமற்ற பள்ளியின் உள்ளே பார்த்தான். கேட் அருகில் எப்போதும் இருக்கும் நான்கைந்து நாய்கள் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தன.

சத்துணவுக்கூடத்தைப் பார்த்தான். எத்தனை தள்ளுமுள்ளுகள் இருந்தாலும் எப்படியும் மதிய சோறு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது இல்லாமல் போனதால் வீட்டிலும் செலவு அதிகமாகிவிட்டது.

மைதானத்தில் போய் எப்போது விளையாடுவோம் என்று இருந்தது. வகுப்பறைகள் எப்போது துவங்கும், எப்போது உணவு போடத் தொடங்குவார்கள் என தெரியவில்லை.

பழனி ஏக்கத்துடன் காம்பவுண்ட் சுவர் வழியாக பாலு வாத்தியார் வீட்டிற்கு சென்றான். சிறிய வீடுதான் வாசலில் சின்ன அறை. அதில் மாலையில் இலவசமாக தமிழ் அல்லது ஆங்கில இலக்கணம் யாருக்காவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். கண்டிப்பாக சாப்பிட ஏதேனும் கொடுப்பார். பொரி கடலை, மிட்டாய்கள், பிஸ்கட் இந்த மாதிரி இருக்கும்.

            பழனிக்கு இப்போது பசிக்கிற மாதிரி இருந்தது.

            நடையைக் கொஞ்சம் வேகமாக்கினான்.

            “ஐயா”

            கதவு திறந்தது.

            தனது மாஸ்க்கை கழற்றினான் பழனி.

            “வாடா பழனி. . .  எப்படி இருக்கே?”

            “நல்லா இருக்கேன் ஐயா…”

            “பாடம் எல்லாம் பார்க்கறயா? கணக்கு போட்டு பார்க்கறயா? சந்தேகம் இருந்தா வீட்டிற்கு எப்ப வேணா வரலாம்.”

            பழனி அமைதியாக தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான்.

            “சொல்லு… என்ன விஷயமா வந்திருக்கே?”

            “அப்பா உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னாரு!”

            “எதுக்கு?”

            “கொஞ்சம் பணம் வேணும்னு சொன்னாரு”

            “அப்படியா. என்னால முடிஞ்சதைத் தரேன்.” என்றபடி உள்ளே போனார்.

            பழனி அந்த பெஞ்சில் உட்காரலாமா  வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். வயிற்றுப் பசியும்
அதிகமான மாதிரி தெரிந்தது. கண்டிப்பாக சாப்பிட ஏதாவது தருவார்.

            பாலு வாத்தியார் வெளியே வந்தார்.

            “இந்தாடா பழனி… இப்போதைக்கு இதை வெச்சுக்க சொல்லு. அடுத்த மாசமே ஏதாவது கொஞ்சம் முடிஞ்சதை தரேன்.”

            பணத்தை வாங்கி ட்ராயர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

            “அது சரி… நீ சாப்பிட்டாயா?”

            “இல்லங்க ஐயா! வீட்டில இப்பதான் செஞ்சிகிட்டு இருப்பாங்க. போய் சாப்பிட்டுக்குவேன்”

            “சரி கொஞ்சம் இரு”

            மீண்டும் உள்ளே போனவர் கையில் ஒரு பெரிய ப்ரெட் பாக்கெட்டுடன் வந்தார்.

            “இந்தா சாப்பிடு”

            “பரவாயில்லை. வேண்டாம்யா…”

            “சாப்பிடுடா…” என்றார் குரலை சற்று உயர்த்தினார்.

            “வீட்டில போய் சாப்பிட்டுக்கறேன்” என்றபடி பிரெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

            “நன்றிங்க ஐயா!…”

-----

கிளம்பும்போது நன்றாக பசிக்கிற மாதிரி இருந்தது பழனிக்கு. பேசமால் அந்த பிரெட்டை அங்கேயே சாப்பிட்டு இருக்கலாமோ என தோன்றியது. கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு போய்விட்டால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தந்துவிட்டு சாப்பிடலாமே என்று தோன்றியது. அம்மாவுக்கு இந்த ப்ரெட் ரொம்ப பிடிக்கும்.

வெயில் அதிகமாகிவிட்டிருந்தது. மீண்டும் பள்ளிக்கூட காம்பவுண்ட் வழியாகவே திரும்பி மெயின் கேட் அருகே நின்றான் பழனி. பாலு வாத்தியார் வீட்டில் தண்ணீராவது குடித்திருக்கலாம். பசி இன்னும் அதிகமாகியது. மெயின்கேட் அருகில் இருந்த புங்க மரத்தின் நிழல் வெளியிலும் நீண்டிருந்தது. நிழலில் நின்றான் பழனி.      

கொஞ்சம் பிரெட்டை சாப்பிட்டுவிட்டு போகலாமா என்று நினைத்தான். ரெண்டை மட்டும் சாப்பிட்டு மீதியை வீட்டிற்கு கொண்டு செல்லலாம்.

கேட் அருகில் காம்பவுண்ட் சுவர் மீது சாய்ந்து ஒரு காலில் நின்று கொண்டு பிரெட் பாக்கெட்டை பிரிக்க ஆரம்பித்தான்.

அப்போது கேட்டில் அடியில் இருந்து இரண்டு மூன்று நாய்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பழனியை சுற்றி வந்தன.

அவைகளைப் பார்த்தாலே பாவமாய் இருந்தது. சாப்பிட்டு எத்தனை நாளாகியிருக்குமோ. விடுமுறைகளில் யார் சாப்பாடு போட்டிருப்பார்கள்? அதற்கும் பசி அதிகமாக இருக்குமோ?

கையில் இருந்த ப்ரெட் பாக்கெட்டினை முழுதும் பிரித்து  மூன்று நாய்களுக்கும் தனித்தனியாக விசிறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பசியும், வெயிலும் கொஞ்சம் இறங்கின மாதிரி இருந்தது பழனிக்கு.

You already voted!
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
T PRABAKARAN
T PRABAKARAN
2 years ago

உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த படைப்பு
வாழ்த்துக்கள்

தேவிகா
தேவிகா
2 years ago

இதுதான் ஏழை! அவனுக்குத் தான் இரக்க உணர்வு அதிகம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096854
Users Today : 9
Total Users : 96854
Views Today : 14
Total views : 417270
Who's Online : 0
Your IP Address : 3.147.28.111

Archives (முந்தைய செய்திகள்)