Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நிவாரணம் – அச்சம்மாள் கபில்தேவ்

16 Feb 2022 3:34 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-67
படைப்பாளர் - அச்சம்மாள் கபில்தேவ்,பெரணமல்லூர் சோழவரம்

மொட்டு விரிவதும், பச்சிளங்குழந்தை பாலுக்கு அழுவதுமான வைகறை. 'அவளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளில்லை, வேண்டுமானால் வீணை ஒன்று தாருங்கள் வாசித்துக் காட்டுகிறேன்!'  என்கிறார் கலீல் ஜிப்ரான் அவர் சொல்வது போல வெறும் வார்த்தை போதாதுதான் பெரும் வர்ணனைக்குத் தகுதியானதுதான் கிராமத்து அதிகாலை என்பது.

சரி விஷயம் வரவேண்டாம் நாம அதுகிட்ட போவோம். சேவக்கோழி கூவவும், செங்கோடன் முழிச்சதும் ஒண்ணா இருந்தது. எழுந்தவரு தலைவச்சு படுக்கற மேற்கு பக்க சுவற்றுல மாட்டியிருக்கற சாமி படத்துல பார்வையை பதிச்சாரு பக்கத்தில பொஞ்சாதி பவுணுத்தாய் படமிருந்தது அவளையும் ஒரு பார்வை பார்த்து வச்சாரு பிறகு தன் குடிசைக்கு வெளிச்சமா இருக்கர காட வௌக்கை அணைச்சுப்புட்டு வந்து திண்ணையில  உட்கார்ந்தாரு, பொம்பளை புள்ளைங்க பார்த்துக்கிட்டிருக்கறப்பவே வளர்ந்து போயிடற மாதிரி சித்த நேரத்திலே பகல் தொடங்கிருச்சு அழகான இசையை வெளிப்படுத்தக்கூடிய இசைக் கருவிக்கு 'தப்பு'னு பேர் வச்சுருக்கது இந்த உலகம்  அப்போது தப்புங்கற மேளத்தை அடிச்சுக்கிட்டே வந்தான் கண்ணாயிரம் அந்த ஊரு நல்லது கெட்டது எதுன்னாலும் எல்லாருக்கும் புரியும்படி சொல்றவன் அவன், கைக்கும், மேளத்திற்கம் சிறசா ஒரு ஓய்வு கொடுத்து பின் தொண்டையை சரிசெய்தபடி பேசலானான் இதனால  சொல்லிக்கறது என்னான்னா நெலபுலம் உள்ள வெவசாயி மக்க உன்னிப்பா கேளுக.

இந்த தபா மழை தண்ணி அமோகமா பேஞ்சி தள்ளிடுச்சு காவா, கம்மாயி, ஏரின்னு மழையால நெறைஞ்சு தளும்புது சந்தோசந்தேன் ஆனா வெவசாயிமாருக கதை.............  பாவம் வச்ச பயிரு பச்சையெல்லாம் மானாவாரியான தண்ணியால நீந்த தெரியாத புள்ளை முழுவிட்ட மாதிரியில்ல முழுவிபோய் கெடக்குதுக. வெளைஞ்சு கைக்கு வர்ற நேரத்தில இப்படி ஆயிருச்சு அதனால சர்க்காரு ஒங்களுக்கெல்லாம் நட்ட ஈடு தர்றதா சொல்லியிருக்கு. மேலும் அவன் நஞ்கைச்கு இம்புட்டு,  புஞ்சைக்கு இம்புட்டுனு சொன்னவன் அதோடு நிறுத்திக்காமல், மேற்படி கொள்ள வெவரம் ஓணுமின்னா ஊரு தலையாரி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்றபடி கடந்து போனான் தகவல் சொல்லி கண்ணாயிரம். செங்கோடன் உட்பட ஊரே விஷயத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டது.

திண்ணையிலிருந்து மெல்ல இறங்கி வாசலுக்கு வந்த செங்கோடன் பொம்பளையாட்டம் சாணத்தை தெளிச்சு அது காயற வரைக்கம் கத்திருக்காம பெருக்கித் தள்ளிட்டு அடுப்படிக்கு போய் மொத வேலையாக இன்னும் சித்த நேரத்தில கடிக்கப்போற ராத்திரி சொச்சமான கஞ்சிக்கு தோதா தட்டப்பயிறு வறுத்து பச்சைமிளகா உப்பு சேர்த்து தண்ணி தெளிச்சு அம்மியில அரைச்சு வைச்சுட்டு கதவை அனைச்சு தாழிட்டுட்டு தலையாரி வீட்டுக்கு விறைந்தாரு அவுக நெலத்துப்பக்கம் இப்பதேன் போனாக என்று வீட்டில பதில் வர நிலத்துக்கப்பக்கம் ஒடினாரு மனுஷன். செங்கோடனுக்கு இருக்கறது நஞ்சையில ஒரு ஏக்கரும் கொஞ்சம் கொசுறுந்தான் நல்ல வலுவான கிணறு வடியிற தண்ணி சித்த நேரத்தில ஏறிடும். வெள்ளையா ஒண்ணும் செவளையா ஒண்ணுமா ரெண்டு மாடுக அதுகளை வச்சுதான் கவலை ஓட்டி பயிருக்கு தண்ணி பாய்ச்சுவாரு செங்கோடன் அப்போதெல்லாம் மனுஷப்பயலையே நம்பியிருக்கற மாடுகளை வச்சுத்தான் விவசாயம் நடந்து கொண்டிருந்தது. செங்கோடன் தன் நிலத்துக்கு அடுத்து அவருக்கு வாழ்வாதாரமாக இருக்கற ரெண்டு மாடுகளையும் மேய்ச்சலுக்கு தோதான இடத்தில் கட்டிப் போட்டுட்டு நிவாரணம் பத்தின தகவலை தலையாரி மூலமாக தெரிஞ்சுக்கிட்டு நிலத்துப்பத்திரத்தோட எப்பவோ எடுத்து வச்ச தன் மாரளவு போட்டோவுல ரெண்டையும் எடுத்துக்கிட்டு அரையும் குறையுமா கஞ்சிய குடிச்சுப்புட்டு வெளியே வந்தாரு.

ஆளுக காடுகறைன்னு வேலைக்குப் போற பொழுதாச்சு சூரியனும் கொஞ்சம் உயரத்திற்கு வந்திருந்தது. செங்கோடன் உட்பட ஊர் மக்களும் பச்சை நிறம் பூசுன அந்த அரசாங்க கட்டிடம் முன்பு  ஆஜரானது. கூடியிருந்த ஜனங்க சும்மா இல்லாம தொன, தொனன்னு சத்தம் போட்டுக்கொண்டிருக்க உள்ளே இருந்து ஒரு டிப்-டாப் ஆளு வெளிப்பட்டாரு என்ன என்பதுபோல சைகையில அவரு கேட்க விஷயத்தை கூட்டத்திலுள்ள ஒருவன் நெவாரணம் தர்றதா சொன்னாக அதுக்குத்தேன் மொறையா ஏதோ மனுவாமில்லே அதை கொடுக்க வந்துக்கீறோம்.

அதிகாரி புரிந்து கொண்டவராய் பக்கத்திலுள்ள ஒரு அறையைக்காட்டி உள்ள ஒரு அட்டையில செஞ்ச பொட்டி இருக்கும் அதுக்குள்ளார உங்க மனுவுல அவங்கவங்க போட்டோவை ஒட்டி கையெழுத்தையோ அல்லது கட்டை விரல்ல மை உருட்டியோ போட்டுட்டு போங்க என்றார்.

அதிகாரி சொன்னதற்கேற்ப மொத்த பேரும் போட்டோ ஒட்டி நிலத்தோட அளவையும் குறிச்சு மனுவுல கட்டை விரலை மை உருட்டி வைக்கறதுக்கு முன்னாடி வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக்கிட்டே சந்தேகததைக் கிளப்பினாரு ஆமா இப்பிடி சர்க்காரு நெவாரணம் தர்றதா சொல்றாங்களே நெகமா தருவாகளா? என்றதும் பக்கத்து நெலத்துக்கார சொடலை பக்குவம் சொன்னாரு என்ன ஓய் இப்பிடி கேக்கறீரு? சர்க்காரு சொல்றது நெசந்தாம்லா என்றவர் தொடர்ந்து ஒருத்தன் கிருத்தன்னா ஏமாத்திப்புடலாம் மொத்த ஊரை எப்பிடிலா முடியும் பொழுது போகலைன்னு பேசிக்கிட்டிருக்காம சும்மா இரும் என்று அவர் சொல்ல மேற்படி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டார் செங்கோடன்.

மறுபடியும் வந்து குறுக்கிட்ட அந்த அதிகாரி. என்ன் எல்லாரும் சொன்னபடி செஞ்சிட்டீங்களா? என்றதும் கூட்டமே ஒரே முகமா தலையாட்டி வைச்சது.

அதோட எல்லாம் கலைந்து போனார்கள் செங்கோடன் வெற்றிலை போட்ட வாயோடு சிரித்துக்கொண்டே வீட்டுக்கு நடையைக் கட்டினாரு பாவம் அவருக்குன்னு யாருமில்லை பொஞ்சாதி பவுனுத்தாய் செத்துப் போய் வருஷம் இருபது கடந்துருச்சு ரெண்டு முறை பிரசவத்துல பிள்ளை செத்துத்தான் பிறந்தது அதோட பவுனுத்தாய்க்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஊரே மலடி என்றவளை அம்மா என்றழைக்கிறான் பிச்சைக்காரன் என்ற கவிதை போல பிள்ளை இல்லாத காரணத்தால் பொஞ்சாதியை ஆத்தா என்றே வாய் நிறைய கூப்பிடுவாரு செங்கோடன்

அந்த ஒத்தை சொல்லால நெறைஞ்சு போவாள் பவுனுத்தாய். ரொம்ப அன்னோன்யமான தம்பதி அவங்க ஒரு சின்ன சண்டை கூட அவங்களுக்குள்ள வந்தது இல்லை. இப்படி சந்தோஷமா போய்க்கிட்டிருந்த அவங்க வாழ்க்கையில ஒரு புயல் வீசியது. அதுதான் பவுனுத்தாயோட மரணம் பாவம் என்ன ஏதுன்னே தெரியலை படுக்கையில மவராசி செத்துக்கெடந்தா.

பொஞ்சாதி செத்ததிலிருந்து செங்கோடனுக்கு மொத்த பலமும் போனது மட்டுமில்லாம உலகமே அவர் கண்ணுக்கு தலைகீழா தான தெரிஞ்சது நாட்கள் கொஞ்சம் கடந்தபின் தான் பழைய நிலைமைக்கு மனுஷன் மாறினாரு இன்னும் கொஞ்ச நாட்கள் உயிர் வாழவும், தன்னோட நிலத்தை வெறுமனே விடக்கூடாதுங்கற கௌரவத்திற்காகவும் தான் முடிந்த வரையில் பயிர் பச்சை பண்ணிக்கிட்டு முடிந்தவரையில் இயங்கிக்கிட்டு வர்றாரு செங்கோடன். சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது. அது மத்தியான உச்சிப்பொழுது வெரசா வீட்டுக்கு வந்த செங்கோடன், அடுப்பை பத்தவச்சு எளஞ்சூடா களிய கிண்டி அதுக்கு ஜோடியா கருவாட்டுக் குழம்பை காரமா மணக்க, மணக்க வச்சதோட இல்லாம அலுமினிய தட்டுல போட்டு   ஆவி பறக்க, சுடச்சுட திண்ணுப்புட்டு அவசர அவசரனே நிலத்துக்க ஒடி மாடுக ரெண்டுக்கம் தண்ணிய காமிச்சு தாகம் தணிச்சு போன அதே வேகத்துடன் மாடுகளோடு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாரு செங்கோடன்.

மாதம் ஒண்ணு.........மூணு.........ஆறுன்னு ஆகிப்போச்சு ஆனா சர்க்காரு தர்றதா சொன்ன வெள்ள நிவாரணம் வந்தபாடில்லை. இடையில பார்க்கறப்பல்லாம் தலையாரிகிட்ட விசாரிக்கறாரு செங்கோடன் அவரும் இல்லேங்கறதுக்கு பதிலா உதட்டை சுழிக்கிறாரு இவ்வளவு ஏன் ஒரு முறை தலையாரிகிட்ட இது சம்மந்தமா சண்டை கூட போட்டாரு செங்கோடன் அவரும் என்னை என்னய்யா பண்ணச் சொல்றீரு சர்க்காரு குடுத்தாதானே நான் தகவலை மேற்படி சொல்லமுடியும்  என்றபடி அவரும் கோபமாக கடந்து போனாரு. வருஷம் ஒண்ணுக்கு  மேல ஆகிப்போச்சு இதுக்கும் மேலயும் நம்பிக்கை இல்லாதால நிவாரணம் பத்தி யாரும் அங்க பேசவோ நெனைக்கவோ இல்லை. ஆனா செங்கோடன் மட்டும் புலம்பிக்கிட்டிருந்தாரு. என்ன சர்க்காரு இது வெவசாயம் பன்றவகளுக்கு நட்ட ஈடு தர்றதா சொல்லிவிட்டு இப்பிடி தராம வுட்டுருச்சே அல்லாம் ஓடு வாங்கறதுக்கு ஜனத்தை நைஸ் பன்ற வேலைதானே இது.

சுமார் ரெண்டு, மூணு வருஷமா மழை தண்ணி இல்லை பயங்கரமான வெக்கை மனுஷப்பயலோட சாதாரண சுவாசக் காற்றுகூட சூடாய் இருக்குது அந்தளவுக்கு அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது. இன்னும் ரத்தினச் சுருக்கமா சொன்னா 'ஒத்தை எறும்பு குளிக்கக்கூட தவறி ஒரு சொட்டு மழை பூமியில விழலை மனுஷப்பயலைச் சார்ந்து வாழற ஆடு, மாடுக எல்லாம் நாவறட்சியோடு நாளைக் கடந்து கொண்டிருந்த சமயம் அடி, இடி பட்ட மாதிரி ஒரு செய்தி.......... மறுபடியும் தகவல் சொல்லி கண்ணாயிரம் தப்படிச்சு, இதனால ஊர்க்காரவுகளுக்கு சொல்றது இன்னான்னா மழை, தண்ணி இல்லாததால ரெண்டு, மூணு தடவ பட்டம் தவறிருச்சு நெலபுலமெல்லாம் வறண்டு கெடக்குதில்லை அதுக்கு சர்க்காரு வத்திபோன பூமிக்கு பணம் தர்றதா சொல்லியிருக்கு மக்கா என்றபடி அவன் கடந்து போனான்.

ஆனால் ஊர்மக்கள் யாரும் இந்தத் தகவலுக்கு பெரிதாக ஆர்வம் காட்டாமல் மாறாக சலித்துக் கொண்டார்கள். ஆமா பெருசா நெவாரணமாமில்ல நெவாரணம் போன மொற வெள்ளத்துக்குன்னு ஏமாத்தினாங்க இந்த வாட்டி காஞ்சிபோனதுக்கா ஒருதரம் ஏமாந்தது போதும்யா என்றபடி அவரவர் இயல்பாக அடுத்த போதும்யா என்றபடி அவரவர் இயல்பாக அடுத்த பொழைப்பு எதுவோ அதை கவனிக்க ஆரம்பித்தனர்.

சர்க்காரு சொல்றதுக்கெல்லாம் இப்படியே நடந்து, நடந்து ரணமானதுதேன் மிச்சம் போலிருக்கு அதனாலதேன் பேருக்குள்ளாரவே நெவா 'ரணம்'னு வச்சிருக்காகளோ? என தன்னைத்தானே கேட்டுக் கொண்டு ஊர்ல முதல் ஆளாக போய் வறட்சி நிவாரணத்திற்கு சம்மந்தப்பட்ட ஆளுகிட்ட மணு குடுத்துட்டு தன் நிலத்தை நோக்கி வெரசா போய்க்கிட்டிருந்தாரு விவசாயி செங்கோடன்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096855
Users Today : 10
Total Users : 96855
Views Today : 18
Total views : 417274
Who's Online : 0
Your IP Address : 3.144.93.34

Archives (முந்தைய செய்திகள்)