18 Feb 2022 1:00 pmEditorial
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-79
படைப்பாளர் - அமுதா பாலகிருஷ்ணன், சென்னை.
“எவ்வளவு நேரமா இங்கேயே நிற்கிறது? ச்சே... இன்னும் காணோமே...” - காத்திருக்கப் பொறுமையில்லாமல் தவித்தாள் துளசி.
அறிவழகனும், துளசியும் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.
துளசி அந்தக் கம்பெனியிலேயே மிகவும் அழகி; எப்பவும் மிடுக்காகவும், எடுப்பாகவும்தான் வருவாள், செல்வாள் !
அறிவழகன் பெயருக்கேற்ற அறிவாளி, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் நல்லவன், நல்ல பண்பாளன்.
துளசி அவனை விரட்டி விரட்டி காதலித்தாள்.
“ஐயோ... வேண்டாம் துளசி... இந்தக் காதல் கீதல்லாம் வேண்டாம்...” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.
துளசி கேட்பதாக இல்லை !
“இந்தா பார்... எங்க வீட்லயும் சம்மதிக்க மாட்டாங்க, உங்க வீட்டுலயும் சம்மதிக்க மாட்டாங்க, அதனால வேண்டாம், அதுலயும் நீ கொஞ்சம் வசதியானவ, உனக்கும் எனக்கும் ஒத்து வராது – வேண்டாம் - நாம நல்ல நண்பர்களாக இருப்போம்.”
“என்ன நீ பேசுற... உன்ன எனக்குப் புடிச்சிருக்கு, என்ன உனக்குப் புடிச்சியிருக்கு; அப்புறம் யாரோட சம்மதமும் நமக்குத் தேவையில்லை. வர்ற புதன்கிழமை, நான் வீட்டை விட்டுட்டு வாரேன். நீயும் வர்ற... நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறோம்.”
“வேண்டாம் துளசி... நான் வர்ல... எனக்கு இதுல உடன்பாடு இல்ல...”
“உன்னோடு வாழப்போற நானே உடன்படுறேன், அப்புறம் உனக்கென்ன...?”
சொன்னதுபோல் புதன்கிழமையும் வந்தாச்சு ! அவளும் வீட்டுக்குத் தெரியாமல், நகைகள், பணம், புடவை என்று அத்தனையும் அள்ளி ஒரு பெரிய சூட்கேசுடன் இதோ காத்து நிற்கிறாள்.
அறிவழகன் இன்னும் வந்தபாடில்லை !
“டாமிட்... நான் அவ்வளவுதூரம் சொல்லியிருக்கேன்... இன்னும் வராமல் என்ன பண்றான்...” - எரிச்சலின் எல்லைக்கே போய்விட்டாள் துளசி!
கைகளைப் பிசைந்து கொண்டு கோபத்தின் எல்லையில் நின்றாள் !
அதோ... ஒரு ஆட்டோ... அவளை நோக்கி வருகிறது...!
அவன்தான்... அவனேதான் !
“என்ன துளசி... ரொம்ப லேட்டாயிடிச்சா ? ஒரு இடத்துல கொஞ்சம் வேலை இருந்திச்சி, அதை முடிச்சிட்டு வர கொஞ்சம் லேட்டாயிடிச்சி”
“ச்சீ போடா... வந்ததே லேட்டு. இதுல கதை வேறயா… ஏறுடா… சீக்கிரம் போலாம். எங்க அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சா வம்பாப் போயிடும். இந்நேரம் என்னை காணோம்னு தேட ஆரம்பிச்சிருப்பாங்க... வா… சீக்கிரம் வா…
“அந்த ஆட்டோவ அனுப்பிச்சிடு… நாம கொஞ்ச நேரம் அந்த மரத்தடில பேசிட்டு, வேற ஆட்டோவுல போகலாம்.”
“ஏன்… ஏன்… எதுக்குடா…?
"சொன்னதைச் செய்… ஆட்டோவ அனுப்பிட்டு எம்பின்னாடி வா…”
“என்ன மிரட்டுறியா… ஓடிவந்தவதானன்னு பார்க்குறியா…”
“நீ ஏன் அப்படியெல்லாம் நினைக்கிறே… வா… சீக்கிரம் வா…” - என்று அவன் மரத்தடிக்குப் போனான்.
இவள் ஆட்டோவை அனுப்பிவிட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவன் பக்கத்தில் சென்றாள்.
“ஏன்… இப்படி படுத்துறே… யாராவது பார்த்தா காரியம் கெட்டுப்போகும்” - படபடத்தாள்
“இது காரியம் இல்ல… கல்யாணம்”
“என்ன… ஜோக்கா இந்தக் கடி ஜோக்குக்கு இதுவா நேரம்… சீக்கிரம், சொல்ல வந்ததைச் சொல்லுடா…”
“முதல்ல நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு…”
“என்ன… என்ன கேள்வி… என்ன பதில்…”
“அம்மா அப்பாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணினால்… அப்புறம் அவங்க மூஞ்சியில நாம முழிக்க முடியுமா…?”
“அவங்க மூஞ்சியில முழிக்க வேண்டிய அவசியம் எதுக்கு…?”
“ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவின்னோ உறவுன்னோ போய் நிக்க முடியுமா…?”
“ஏன் நிக்கணும்? நாமதான் ரெண்டு பேருமே கைநிறையச் சம்பாதிக்கிறோம்ல…”
“சரி, நீ வீட்டை விட்டு ஓடிப்போயிட்டேன்னு தெரிஞ்சதும் உங்க அம்மா அப்பா மனசு என்னபாடுபடும்…? அவங்க வெளியில தலைகாட்ட முடியுமா? அவங்க மானம் மரியாதையெல்லாம் போயிடாதா…?”
“அதையெல்லாம் பார்த்தா நாம கல்யாணம் பண்ணிக்க முடியாது, நம்ம வாழ்க்கையை நாம அமைச்சிக்க முடியாது!”
“அப்போ… உங்க அம்மா அப்பாவோட மானம் மரியாதையை விட உனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம் - அதாவது உன்னோட சுயநலம்தான் உனக்கு முக்கியம் - அப்படியா?”
“ஏய்… நீ என்ன பெரிய தத்துவ ஞானியாட்டம் பேசிகிட்டேயிருக்க… அதான் நான் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வந்திருக்கேன்ல - அப்புறம் ஏன் வளவளன்னு பேசிக்கிட்டிருக்க…”
“உன்னை… இவ்வளவு தூரம் பெத்து வளர்த்து அழகு பார்த்து ஆசை ஆசையா வளர்த்தப் பெத்தவங்க கண் கலங்கவும் தலை குனியவும் நீ காரணமாயிருக்கலாமா…? அவங்களைத் தலை குனியவச்சுட்டு அவங்க அவமானப்பட்டு… அப்படி ஒரு காதல் கல்யாணம் உனக்குத் தேவையா யோசிச்சிப்பாரு…”
“என்னடா, ஒம்பாட்டுக்கு அளந்துகிட்டே போறே நான் எதைப்பற்றியும் கவலைப்படாமத்தான வந்திருக்கேன்… அப்புறம் என்ன…?”
“என்னை நீ உண்மையிலேயே விரும்புறியா?”
“என்ன அறிவு… உனக்கு திடீர்னு இந்தச் சந்தேகம்?”
“ஆமா… சந்தேகம்தான்…! கேட்குறதுக்குப் பதிலைச் சொல்லு? நீ என்னை - அதாவது என் மனசை விரும்புறியா… அல்லது இந்த என் உடம்பை விரும்புறியா…?”
“ஏன்… ஏன் இப்படிக் கேட்குற?”
“கேட்டத்துக்குப் பதில் சொல்!”
“உம் மனசைத் தான் விரும்புறேன் உன் உடம்பைப் பார்த்துக் காம வெறிப்பிடிச்சி ஒண்ணும் உங்கூட வரலை”
“இல்லை நீ என்னை… என் மனசை விரும்பலை… நீ எங்கிட்ட பொய் சொல்ற…”
“சத்தியமா நான் உன்னை… உன் மனசைத்தான் விரும்புறேன்… என்னை நம்பு”
“என்னடி சத்தியம்…? எதுக்குடி உன்னை நம்பணும்? 22 வருஷமா ஆசையாசையா பெத்து வளர்த்து, உம்மேல உயிரையே வச்சிருக்கிற பெத்தவங்க மனசியே சாகடிச்சிட்டு ஓடி வந்தவ, 2 வருஷம் அரைகுறையா, ஆபீஸ்ல பழகின எம்மனசைப் புரிஞ்சிகிட்டியாக்கும்; பெத்தவங்க மனசைப் புரிஞ்சிக்காத நீ, நேத்து வந்த எம்மனசை புரிஞ்சிகிட்டியாக்கும்! பொய் சொல்லாதடி, நீ விரும்பி வந்தது என் உடம்பை அணைச்சுக்க;
பெத்தவங்க, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சொந்தம், பந்தம் அத்தனைப்பேர் மனசையும் உடைச்சிட்டு, அவங்களைத் தலைகுனிய வச்சிட்டு, நேத்து வந்த என் மனசை மட்டும் நீ நேசிப்பியாக்கும், என் மனசு கோணாம நீ நடந்துக்குவியாக்கும்!
பெத்தவங்களையே துச்சமாத் தூக்கிப் போட்டுட்டு ஓடி வந்த நீ, உன் இச்சை தீர்ந்தவுடன் என்னையும் துச்சமெனத் தூக்கிப் போட எவ்வளவு நேரமாகும்?
உன்னை நம்பி, நான் எங்க அம்மா அப்பாவைத் தலைகுனிய வைக்கணுமா…?
அதுக்கா, அவங்க என்னை ஆசை ஆசையா பெத்து வளர்த்து, படிக்க வைச்சு ஆளாக்கினாங்க?
இரண்டு வீட்டு கௌரவத்தையும், சந்தோஷத்தையும் ஒரு நிமிஷத்துல குழி தோண்டிப் புதைக்கணுமாக்கும்…
பெத்தவங்க வயிறு எரிஞ்சா பிள்ளைங்க வாழ்வு கருகிப் போயிடும்டி…
போ… போ… உன் வீட்டுக்குப் போய் உங்க அம்மா அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அவங்களைச் சந்தோஷமா வச்சிக்க; அவங்க பார்க்குற மாப்பிளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமையைத்தேடு. பெண் இனத்தின் பெருமையைக் காப்பாத்து…”
அவன் பேசப்பேச இவள் விக்கித்துப் போனாள்.
அவன் ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் அவளை போகச் சொன்னான்.
பித்துப் பிடித்தவள்போல் பதில் ஏதும் சொல்லாமல் அவள் அதில் ஏறிப்போனாள்!
வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது!
வாசலிலே… அவளது பெற்றோர்! பெட்டியை அவர்கள் அருகே வைத்துவிட்டு “அம்மா என்னை மன்னிச்சுடுங்கம்மா, அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா…! உங்க அன்பையும், பாசத்தையும் நினைச்சிப் பாக்காம உங்களைத் தலை குனியவைக்கப் பார்த்தேம்பா… என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் இனிமே இந்தப் தப்பைப் பண்ணமாட்டேம்பா… உங்கள கஷ்டப்படுத்தப் பார்த்தேம்பா… அந்த அறிவழகன் என் கண்ணை தொறந்துட்டாம்பா.
என்னை மன்னிச்சுடுங்கப்பா, அம்மா என்னை மன்னிச்சுடுங்கம்மா…” -ன்னு கதறிக் கதறி அழுத்த மகளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர் அந்த அன்பு பெற்றோர்
“அழாதம்மா… நீ ஆசைப்பட்ட அந்தத் தம்பிக்கே உன்னை கட்டி வைக்கிறோம்மா…” மகளின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னாள் அந்தத் தாய்
“என்னம்மா… சொல்றீங்க…” அழுகையினுடே கேட்டாள் அவள் “ஆமாம்மா நீ காலையில… வீட்டைவிட்டு ஓடிப்போனது எங்களுக்கு தெரியாது. நீ வேலைக்குப் போயிருக்க… ஏதோ அவசரம் போல… அதான் சொல்லாம போயிருக்கான்னுதான் நினைச்சோம்.
நீ சொன்னியே அறிவழகன்னு - அந்தத் தம்பி ஒரு ஆட்டோவுல வந்து இறங்கி, உங்க ரெண்டுப்பேரைப் பற்றியும், அதான் நீ அவனை விரட்டி விரட்டி காதலிச்சத்தையும், அதுல அவனுக்கு உடன்பாடு இல்லங்கிறதையும், இன்னைக்கு நீ, நகை நட்டோடு ஓடி போய் அவனுக்காகக் காத்திருக்கிறதையும் சொல்லி, “நீங்க பதட்டப் படாதீங்க நான் அவளுக்குப் புத்திமதி சொல்லி நல்லபடியா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்” - னு சொல்லிட்டு, எங்க காலை தொட்டு வணங்கி, “நீங்க எங்க அம்மா அப்பா மாதிரி, உங்க மகளால் நீங்க கண் கலங்கக் கூடாது, தைரியமா இருங்க” - ன்னு சொல்லிட்டுதாம்மா வந்திச்சி,
மத்த ஒருத்தனா இருந்தா பணத்துக்கும், நகைக்கும், உன் இளமைக்கும் ஆசைப்பட்டு உன்னை இழுத்துட்டுப் போயிருப்பான்.
இப்படி ஒரு தங்கமான பையனை மருமகனா அடைய நாங்க கொடுத்து வச்சிருக்கணும்” - னு அந்தத் தாய் சொல்லும்போது…
இன்னொரு ஆட்டோவில் வந்து இறங்கினான் அறிவழகன்.
“வாங்க மாப்ள”- ன்னு அவன் தோள் மேல கைபோட்டு அழைத்துச் சென்றார் அந்த அன்புத் தந்தை
“மாப்பிள்ளையா…! விழித்தான் அவன்
“ஆமா மாப்ள… நீங்கதான் எங்க மாப்ள! உங்கள மாதிரி ஒரு மாப்ள கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்…”
துளசியின் கண்களில் இப்பொழுது அழுகையல்ல… அது… ஆனந்தக் கண்ணீர்…!
Very meaningful story, excellent
Very touching story!
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
சிறுகதை என்ற பெயரில்
வாழ்வின் எதார்த்தங்களை
அழகிய காட்சிப்படம் போல் எழுத்து நடையில் தந்ததற்கு நன்றி ஐயா.
வாழ்த்துகள்… துளசி … சிறுகதைகளுக்குரிய இலக்கணத்துடன் திகழ்கிறது
துளசி மிகச் சிறந்த சிறுகதைக் கரு. மனதை வருடும் எழுத்து நடை
மிகவும் அருமையான கதை
மிக கன்னியமான காதல் கதை. சுவையான சிறு கதை