01 Apr 2022 8:26 pmFeatured
இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முதலிடம் வகிப்பது சுற்றுலாத்துறையாகும், இயற்கை வளங்கள் கொண்ட இலங்கைக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அடியோடு நின்றதால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தேயிலை ஏற்றுமதி மூலமும் இலங்கைக்கு அதிக வருமானம் கிடைத்தது. ஆனால் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு தேயிலை உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேயிலை உற்பத்தியும் 20 சதவீதம் பாதிக்கப்பட்டதால் ஏற்றுமதியிலும் சிக்கல் உருவானது.
இப்படி பல முனைகளிலும் வருவாய் இழப்புகள் ஏற்பட்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்த நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உள்பட பல நாடுகளில் கடன் உதவி கேட்டு கை ஏந்தும் நிலைக்கு இலங்கையின் சூழ்நிலை மாறி விட்டது.
அரிசி, பால், காய்கறி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. பெட்ரோல்-டீசல், மண்எண்ணை, சிலிண்டருக்காக பொதுமக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றனர். வரிசையில் நின்றவர்கள் இறந்த சம்பவமும் நடந்துள்ளது
ஆனாலும் பலர் பெட்ரோல், டீசல், சிலிண்டர் கிடைக்காமல் திரும்பி செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. டீசல் கிடைக்காததால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் பயிர்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன.
எரிபொருள் தட்டுப்பாட்டால் கடுமையான மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவில் தெரு விளக்குகள் எரியாது என அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் பலமணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, சமைக்க சிலிண்டர் கிடைக்காததாலும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு விலையேற்றம் காரணமாகவும் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பாலுக்கும், ரொட்டி துண்டுக்கும் அவர்கள் அலைந்து திரிந்து வருகின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாகி கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய அந்நிய செலாவணியைக் கரைத்ததால், இலங்கையின் பண மதிப்பு செல்லா காசாக மாறிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் டீசல் கையிருப்பு இன்னமும் ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குபிடிக்கும்
தேயிலை மற்றும் ஆடைகள் ஏற்றுமதி சரிவால், அந்நிய செலாவணி வறண்டு போய்விட்டது. கிட்டத்தட்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு திவாலான நிலையில் இருக்கிறது இலங்கை. இதனால் நாளுக்கு நாள் இலங்கை மக்களுக்கு பிரச்சனைக் கூடிக் கொண்டே போகிறது.
விளைவு அவர்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும், அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மீது திரும்பியுள்ளது. பொருளாதார சீர்குலைவை விரைவில் சீர்தூக்க முடியாவிட்டால், பதவி விலகி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற கொந்தளிப்புடன் கொழும்பில் உள்ள அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள்.
அப்போது, பொதுமக்களை கலைப்பதற்காக ராணுவமும், காவல்துறையும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி திருப்பி அனுப்ப எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. மாறாக, மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியுள்ளது. கற்கள், காலணிகள் என்று கையில் கிடைத்தப் பொருட்களையெல்லாம் வீசி காவல்துறையினருக்கு பதிலடிக் கொடுத்துள்ளனர்.
அதிபர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு தீ வைத்து தங்களது ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவோ மக்களைச் சந்திக்க மனமில்லாமல், தனது இல்லத்தை விடுத்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சிப் பரவுவதைத் தடுக்க, பல இடங்களில் இணையதளமும், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் நடந்து வரும் சூழலில் இலங்கையின் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி மந்திரி பசில் ராஜபக்சே தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
தற்போது இலங்கை மக்களின் கோபப்பார்வை ராஜபக்சே குடும்பத்தினர் மீது திரும்பி உள்ளது. நுகே கொட பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கலந்து கொண்டனர். அவர்கள் தெல்கட சந்தியில் இருந்து நுகே கொட சந்தி வரை பேரணியாக சென்றனர்.
அப்போது அவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். பொதுமக்களை துன்புறுத்தும் அரசை விரட்டி அடிக்கும் வரை போராடுவோம் என கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தின் போது பேசிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார், ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின் காரணமாக நுகே கொடாவில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதேபோல இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் பொதுமக்கள் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையோ கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் அவர்களும் எரி பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் அவர்கள் பயணம் செய்யும் அவல நிலையும் நீடிக்கிறது.
இதன் காரணமாக சிறந்த சுற்றுலா இடம் என உலக மக்களால் கருதப்பட்ட இலங்கை தற்போது அதன் தனித்துவத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. இதனால் பொங்கியெழுந்த பொதுமக்கள் இரவோடு, இரவாக அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே இல்லத்தை முற்றுகையிட்டு பல மணி நேரம் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்
இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு இலங்கை அதிபரிடம் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
விலைவாசி உயர்வால் இலங்கையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சவரன் தங்க நகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய் என ஆடம்பர பொருள் முதல் அத்தியாவசிய பொருள்வரை பெரும் விலையேற்றத்தை சந்தித்த இலங்கை மக்கள் ஒரு கட்டத்தில் டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு போன்ற தொடர் பாதிப்புகளால் பொங்கியெழுந்து நேற்று இரவோடு, இரவாக அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே இல்லத்தை முற்றுகையிட்டுப் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலை வாங்குவதற்கு கூட, நீண்ட வரிசையில் காத்திருந்தும் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இப்படி, விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் தட்டுப்பாடு, நாள் முழுவதும் நீடிக்கும் மின்வெட்டு ஆகியவற்றால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள் இலங்கை மக்கள்.
இதன்விளைவாக அவர்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும், அதிபர் கோத்தபய ராஜபக்சே மீது திரும்பியுள்ளது. இந்நிலையில் இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி, லங்கா சமசமாக்கட்சி உள்ளிட்ட இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணிக் கட்சிகள் இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளை வைத்து காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இலங்கை அரசின் அன்னிய செலவாணி இருப்பு குறைந்ததால் ஏற்றுமதி, இறக்குமதியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதே அரிதாகியுள்ளது. கிடைத்தாலும் விலை பல மடங்கு இருப்பதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடுகளில் பேப்பர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதனால் நாளிதழ்கள் பல அச்சடிக்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ரத்மலானே பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமசதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.