05 Apr 2022 10:22 amFeatured
கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பொறுப்பேற்று சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதனை அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல், ஐந்து மாதங்கள் கழித்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கே திருப்பி அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம், தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மீண்டும் ஒரு மனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் ஆர். என்.ரவி இதுவரை முடிவு எடுக்கவில்லை.
மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கிய பணி. தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்
ஆளுநரின் இந்த நடவடிக்கையை அடுத்து அவருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பனிப்போர் தற்போது நாடாளுமன்றத்தில் வெடித்துள்ளது.
'ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனி நபர் தீர்மானத்தை திமுக எம்பி வில்சன்அண்மையில் தாக்கல் செய்தார். அதில் 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கும் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
வில்சனை தொடர்ந்து, திமுக எம்பியும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரிடம் இன்று நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ' அரசியலமை்புச் சட்டப்பிரிவு 200 இன்படி, தமிழக ஆளுநர் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார். இதனால் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
மேலும் 3 மசோதாக்களை அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தாமதம் செய்து வருகிறார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மக்களவை இன்று கூடியதும், 'ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு' என தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க எம்.பி.க்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி விஷயத்தில் தனிநபர் தீர்மானம், நோட்டீஸ் என நாடாளுமன்றத்தில் திமுக அடுத்தடுத்து அதிரடியில் இறங்கி உள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை திமுக கேள்வி கேட்டுள்ளதால், தமிழக ஆளுநர் விஷயத்தில் மத்திய பாஜக அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.