10 May 2022 12:49 amFeatured
இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில் குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைத்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 4-வது முறையாக போராட்டக்காரர்கள் நுழைய முயற்சித்தனர், ராஜபக்சேவின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ்
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆளும் கட்சி எம்பி பலியானார். பல நகரங்களிலும் வன்முறை பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியிலும் மகிந்த ராஜபக்சேக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் பதவியிலிருந்து விலக மகிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் எனவும் கூறப்பட்டது. இதற்கேற்றார் போல், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால கூட்டணி அரசுக்கு தலைமை ஏற்க வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார்.
மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என இலங்கை மக்கள் நேற்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், மகிந்தாவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் பேருந்துகள் மூலமும் பேரணியாகவும் குவிந்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பாக குவிந்த சுமார் 3000 ஆதரவாளர்கள் முன்பாக பேசிய மகிந்த ராஜபக்சே, ‘‘எதிர்ப்புகள், போராட்டங்களை பார்த்து பழகிவிட்டேன். எதுவும் என்னை தடுக்க முடியாது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நான் அனுபவம் வாய்ந்தவன். இலங்கை மக்களுக்கு எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’’ என்று பேசினார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர்களுடன் வந்திருந்த குண்டர்கள் கம்பு, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை என ஆயுதங்களுடன் சென்று பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஒட்டியும், காலி முகத்திடலிலும் போராட்டம் நடத்தி வந்த மக்களை நடுரோட்டில் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் 78 பேர் படுகாயமடைந்தனர்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மகிந்தா ஆதரவாளர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, அப்பகுதியே போர்க்களமாக மாறியது. மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள், அவர்கள் வந்த பஸ்சையும் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைந்தெறிந்தனர். சம்பவ இடத்திற்கு ராணுவம் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வன்முறை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும், வன்முறையால் எந்த வெற்றியும் கிடைக்காது என்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே, கொழும்பு புறநகரான நிடம்புவா பகுதியில் ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி அதுகோரலா சென்ற கொண்டிருந்த காரை சிலர் வழிமறித்துள்ளனர். பயந்து போன அவர் தனது துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டுள்ளார். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்ததால் பயந்து போன எம்பி அந்த இடத்தில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த கட்டிடத்தில் தஞ்சமடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயந்து அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவத்தில் எம்பியின் பாதுகாப்பு அதிகாரியும் பலியாகி உள்ளார்.
இந்நிலையில், வன்முறையால் நிலைமை விபரீதமான நிலையில், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபயவிடம் வழங்கினார். இதன் மூலம் மக்களின் ஒருமாத கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதே போல அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சே பதவிவிலகியதைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள்,
அமைச்சர்கள், மேயர் உள்ளிட்ட பலரது வீடுகளை போராட்டகாரர்கள் சூறையாடி தீ வைத்ததால், இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
* ராஜபக்சே வீடு தீவைத்து எரிப்பு
மகிந்தா பதவி விலகியதை அடுத்து, குருணாகல் நகர பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் கொழும்புவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர். இதில், குருணாகலில் உள்ள மகிந்த வீட்டை தீவைத்து எரி்த்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய மக்கள், உள்ளே செல்ல பலமுறை முயன்றனர். பொதுஜன பெரமுனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த்தின் வீட்டை சிலர் தீ வைத்து எரித்தனர். புத்தளம் பகுதியில் உள்ள எம்பியின் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. குருணாகல் நகர மேயர் வீடும் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதே போல பல அமைச்சர்களின் வீடுகள், ஆளும்கட்சி எம்பிக்கள் வீடுகளின் மீதும் பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். இதனால் அரசியல் தலைவர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.
வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா, பிரதமர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றார். அப்போது மகிந்தா ஆதரவாளர்கள் அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை மீட்டு அங்கிருந்து பத்திரமாக அழைத்து வந்தனர்.
மகிந்தாவை கைது செய் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்த பேட்டியில், ‘‘மகிந்த ஆதரவாளர்கள் திட்டமிட்டே வன்முறையை உருவாக்கி உள்ளனர். பதவி போவதால் அதற்கு காரணமான பொதுமக்களை பலிகடாவாக்க துணிந்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும்’’ என்றனர்.
அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் 2 இடங்களில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மகிந்தா ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களை தாக்கியதால் அவர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். பதிலுக்கு மகிந்தா ஆதரவாளர்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். இதில், அதிர்ச்சி அடைந்த மகிந்தா ஆதரவாளர்கள் அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பி ஓடினர். அவர்கள் வந்த பஸ்களிலேயே திரும்பிச் சென்றனர். அப்போது அந்த பஸ்கள் மீதும் பொதுமக்கள் கற்களை வீசி விரட்டி அடித்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.
கலவரத்தை கட்டுப்படுத்த, வன்முறையில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கட்சி பாரபட்சமின்றி, வன்முறை செய்யும் எவரையும் போலீசார் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் நாட்டில் அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் வீரர்கள் அனைவரது விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் ராணுவத்திற்கு உதவ வேண்டுமென பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கால், வெளிநாடு செல்வவோர் டிக்கெட் காட்டி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.