10 May 2022 9:19 amFeatured
உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
மயிலாப்பூர் சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே வீடுகள் ஒதுக்கி தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மயிலாப்பூர் த.வேலு (திமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), ஷாநவாஸ் (விசிக), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூ.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), வேல்முருகன் (தவாக) ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசும்போது, “கடந்த சில நாட்களாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் அரசு அதிகாரிகள், மயிலாப்பூர் தொகுதியில் உள்ள கோவிந்தசாமி நகர் கரையோர மக்களை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, கண்ணையா என்பவர் தீக்குளித்து, நேற்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார். தமிழக முதல்வர், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள், இன்று அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கான மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இப்போது தேவை, அவர்களுடைய வாழ்வாதாரம் மயிலை பகுதியை சுற்றி உள்ளது. அதனால் மயிலை பகுதியை சுற்றியுள்ள, திட்டங்கள் நிறைவேறும் வகையில் அந்த பகுதியில் வீடுகளை ஒதுக்கி தர வேண்டும். இந்த பிரச்னை 2008ல் இருந்தே உள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்பு பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் அந்த வீடுகளுக்கான அனைத்துவிதமான வரிகளையும் அரசாங்கத்திற்கு இன்றுவரை செலுத்தி வருகிறார்கள். அந்த குடியிருப்புகள் சாலையையோ அல்லது பக்கிங்காம் கால்வாயையோ ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்பதனையும் அரசின் சார்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு உடனடியாக தெரிவித்து, ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்யப்பட வேண்டும்’’ என்றனர்.
இதற்கு பதில் அளித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது: ஏதோ அவசரப்பட்டு இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச்செயலாளர், துறை செயலாளர்களை நீதிமன்றம் வரச் சொல்லி கண்டிக்கும் நிலை உள்ளது. 2008ம் ஆண்டு முதலே இந்த பிரச்னை உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு ஏழைகள் வயிற்றில் அடிக்கும் எண்ணம் இல்லை. அவர்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்று தான் 100க்கு 110 சதவீதம் எங்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 615 வீடுகளில் 356 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது கூட தேர்வு எழுதும் பிள்ளைகளின் வசதிக்காக அந்த வீடுகளை இடிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே வாழ முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அரசாங்கம் மனிதாபிமான முறையில் இதை கவனிக்கும். இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நல்ல முடிவு எடுக்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மயிலாப்பூரில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை குறித்தும், அதில் கண்ணையா என்பவர் தீக்குளித்து இன்று காலையிலே உயிரிழந்திருக்கிறார் என்பது குறித்தும், சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அதற்குரிய விளக்கத்தை வருவாய்த்துறை அமைச்சர் இங்கே விளக்கமாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்த பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும். மேலும், அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஒரு இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம். அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களை கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும்.
இன்றைக்கு நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துகளோடு, அதைவிட கூடுதல் மனச் சுமையுடனுடம், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இந்த சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். இங்கே அமைச்சர் சொல்கிறபோது, அருகிலேயே, அந்த பகுதியிலேயே, அவர்களுக்கு மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார். ஏற்கனவே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கி தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.