15 May 2022 8:21 pmFeatured
தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலம் இந்தியா பெருமையடைகிறது. இந்தியாவின் திருமணமான பொதுநிலையினரில் முதல் புனிதர் என்ற பெருமையும் மறைசாட்சி தேவசகாயம் பெற்றுள்ளார். இந்திய மண்ணில் ரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த முதல் இந்திய புனிதர் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் தென்கோடியை அலங்கரித்துக்கொண்டிருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள நட்டாலத்தில் வாசுதேவன் நம்பூதிரி-தேவகியம்மாள் தம்பதியருக்கு 23-4-1712-ல் மகனாக பிறந்தவர் நீலம் என்ற நீலகண்டன். அந்த காலத்தில் இந்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருந்தது.
தமிழ், மலையாளம், வடமொழி ஆகியவற்றையும், வர்மசாஸ்திரம், சிலம்படி, மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடிமுறைகள், சண்டைப்பயிற்சி போன்ற பல கலைகளையும் முறையாக கற்றவர் நீலகண்டன். இதனால் அவர் சில ஆண்டு காலம் மன்னரின் படையில் போர் வீரராக பணியாற்றினார்.
இவரது திறமைகளைக் கண்டு வியந்த மன்னர், அவரை தமது அரசவை அதிகாரியாக நியமித்தார். இதனால் நீலகண்டன் பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிலும் கோட்டை கட்டுமானப் பணிகளை கண்காணித்தார். மேலும் அவர் அங்குள்ள நீலகண்டசாமி கோவில் அதிகாரியாகவும் இருந்தார். இந்தநிலையில் அவரது குலத்தைச் சேர்ந்த பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.
இதற்கிடையே 1741-ம் ஆண்டு திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சுப்படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் திருவிதாங்கூர் மன்னரிடம் டச்சுப்படைத் தளபதி பெனடிக்ட் டிலனாய் சரண் அடைந்து போர்க்கைதியானார். பிற்காலத்தில் மன்னர் அவரை தமது படைத்தளபதியாக நியமித்தார். தக்கலை அடுத்த புலியூர்குறிச்சியில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு டிலனாய் போர் பயிற்சி அளித்துக்கொண்டே ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கத்தோலிக்க கிறிஸ்தவரான டிலனாயுடன், நீலகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். நீலகண்டன் தனது சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளானபோது டிலனாய்தான் அவருக்கு ஆறுதலாக இருந்தார்.
அப்போது டிலனாய், இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் வரலாறையும் மேற்கோள் காட்டி ஆறுதல் கூறினார். இந்த விளக்கம் நீலகண்டனுக்கு பிடித்துப்போனதோடு, அவருடைய மனதில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது. அதோடு நில்லாமல் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுமையாக அறியவும், திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவவும் அவர் ஆவல் கொண்டார். இதை டிலனாயிடமும் வெளிப்படுத்தினார்.
திருமுழுக்கு பெற்றார்
இதையடுத்து 14-5-1745-ல் அன்றைய பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய நெல்லை மாவட்டத்தின் வடக்கன்குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் தேவசகாயம் என்னும் பெயரில் திருமுழுக்கு பெற்றார். தனது மனைவி பார்கவியையும் அங்கு அழைத்துச் சென்று திருமுழுக்கு பெற செய்தார். அவருக்கு ஞானப்பூ என்ற பெயர் சூட்டப்பட்டது. தேவசகாயம் திருமுழுக்கு பெற்றபிறகு நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். சில படைவீரர்களும் மனம் மாறி கிறிஸ்தவரானார்கள்.
புகழ் பரவல்
தேவசகாயம் மனிதர் அனைவரும் சமம். சாதி, மதம், சமுதாயம் ஆகியவற்றின் பெயரால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேசுவதும், செயல்படுவதும் தவறு என்று மக்களுக்கு போதித்தார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களோடு நெருங்கிப் பழகி உண்டு உறவாடினார். அவர்களுடைய முன்னேற்றத்துக்காக உழைத்தார்.
தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு ஆதிக்க சக்திகளின் தூண்டுதலால் ராஜதுரோகியாகவும், குலதுரோகியாகவும் குற்றம்சாட்டப்பட்ட அவரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்
ஆனாலும் அவர் நற்செய்தி அறிவிப்பை கைவிடவில்லை. தன்னை நாடி வந்தவர்களுக்கு இறைவனிடம் வேண்டுதல் செய்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி அற்புதராக திகழ்ந்தார். இதனால் அவருடைய புகழ் மென்மேலும் பரவியது.
பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், அதை பொருட்படுத்தாமல் இறைப் பணியை முன்னிலை படுத்தியதால் ஆதிக்க சக்திகளின் கடும் கோபத்துக்கு ஆளான அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைதட்டு பகுதியில் சிறைவைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியாக 14-1-1752-ல் ஆரல்வாய்மொழி அருகில் உள்ள காற்றாடி மலையில் படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மறைசாட்சியாக மரித்த அவருடைய உடலை, படை வீரர்கள் வன விலங்குகளுக்கு இரையாக போட்டனர். அவருடைய வீரச்சாவு பற்றிய செய்தி 3 நாட்களுக்கு பின் பரவத்தொடங்கியது. மக்கள் அவரது உடலின் சில எஞ்சிய பகுதிகளை கண்டு பிடித்தார்கள். அவற்றை மிகுந்த பக்தியுடன் சேகரித்து மூன்று நாட்களுக்குப்பின் புகழ்பெற்ற தேவாலயமான கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் பலி பீடத்துக்கு முன்பு நல்லடக்கம் செய்தனர். அவர் மறைந்த பிறகும் அவர் மூலம் இறைவனிடம் வேண்டுதல் செய்தவர்களுக்கு பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் அன்று முதல் இன்றுவரை எல்லா மக்களாலும் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக கருதப்பட்டு வந்தார்.
புனிதர் பட்டம்
இவருக்கு புனிதர் பட்டம் (St./Saint) வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறைமாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அதன் முதல் படியாக மறைசாட்சி தேவசகாயம் முக்திப்பேறு பெற்றவர் (அருளாளர்) என கடந்த 2-12-2012 அன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 9-11-2021 அன்று மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. இந்நலையில் கத்தோலிக்க திருச்சபை அவருக்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் வைத்து புனிதர் பட்டம் கொடுக்க ஒப்புக்கொண்டது. அதன்படி இன்று மதியம் 1.30 மணிக்கு மறைச்சாட்சி தேவசகாயத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது
ரோமில் தமிழ்த்தாய் வாழ்த்து
ரோமில் தேவசகாயம் பிள்ளைக்கு, புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறை என்பதால், இது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவரை கவுரவப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ரோம் சென்றுள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாடிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே காற்றாடி மலையில் தமிழக, கேரள மக்கள் சிறப்பு பிராத்தனை நடத்தினர். இந்த விழாவுக்காக காற்றாடி மலை அருகே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட உள்ளது எனவும், இந்த விழாவில் சுமார் 1 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறினார்.
கிறிஸ்தவ வரலாற்றில் முதல் முதலாக தமிழராகிய தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவது கன்னியாகுமரிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது எனவும் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறினார்.
தேவசகாயம் பிள்ளை, 18 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து. சாதி வேறுபாடுகள் களையப்பட்டு, அனைத்து மக்களும் சமத்துவத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். 1749 இல் கைது செய்யப்பட்ட அவர், பெரும் துன்பங்களையும் சித்திரவதைகளையும் தாங்கி, 1752, ஜனவரி 14ம் தேதி சுடப்பட்டு இறந்த நிலையில், தியாகி என்ற பட்டத்தை பெற்றார் என்று வாடிகன் சென்ற ஆண்டு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.