13 Oct 2022 4:15 amFeatured
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்புத்தேரி என்ற பகுதிக்கு அருகே உள்ளது செம்பரமலை. இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் மண்ணை தோண்டி கொண்டிருந்தபொழுது வித்தியாசமான பாம்பு ஒன்று மண்ணுக்குள் இருந்து வெளியே வந்துள்ளது
வித்தியாசமான இந்த பாம்பு குறித்து அங்கு இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து ஆய்வு செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அது தங்ககவச வாலன் என்ற அபூர்வ ரக பாம்பு என்பது தெரியவந்தது.
உலகில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் ராஜநாகம், நல்ல பாம்பு, கருநாகம், கட்டுவிரியன், சாரைப் பாம்பு போன்றவை தான் நமக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் நமக்கு தெரியாத ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் இந்த உலகில் இருக்கின்றன.
பாம்புகளில் பெரும்பாலானவை வெளியே நடமாடக்கூடியவை தான். ஆனால், மிகச் சில பாம்புகளுக்கு இதில் இருந்து விலக்கு உள்ளது. அதாவது, இந்த பாம்புகள் பெரும்பாலும் எந்த உயிரினத்தின் கண்ணிலும், குறிப்பாக மனிதர்கள் கண்ணில் சிக்கவே சிக்காது. மிக மிக அரிதாகவே அந்த பாம்புகளை நாம் பார்க்க முடியும். இதுபோன்ற பாம்புகளையே மர்மமான பாம்புகள் என ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
அதுபோன்ற மர்மமான பாம்பு வகையில் ஒன்றுதான் 'தங்கக் கவசவாலன்'. மழைக்காடுகளில் மட்டுமே இந்த வகை பாம்புகள் இந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே இருக்கின்றன. இந்த பாம்பை பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. ஏனெனில், மண்ணுக்குள் பல அடி ஆழத்தில்தான் இந்த பாம்பு வசிக்கும். இரவு நேரங்களில் மட்டுமே இரை தேட இவை வெளியே வரும். அதிலும் நள்ளிரவு நேரத்தில் மிகவும் இருட்டாக இருக்கும் பகுதியில்தான் இவை இரை தேடும். மிகவும் கூர்மையான பார்வைத் திறன் கொண்டிருப்பதால் இருட்டிலும் இந்த பாம்பு எளிதாக இரையை பிடித்துவிடும்
1880-ம் ஆண்டு உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் என்பவர் வயநாடு பகுதியில் இந்த தங்கக் கவசவாலன் பாம்பை முதன்முதலில் பார்த்தாராம். அந்த பாம்பு குறித்த தகவல்களையும் அவர் சேகரித்து ஆவணப்படுத்தினார். 'கோல்டன் ஷீல்டுடெய்ல்' என்று இந்த பாம்பை ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
மிகவும் மர்மமாக இருக்கக்கூடிய 'ஷீல்டுடெய்ல்' பாம்பு குடும்பத்தை இது சேர்ந்தது. அந்த ஒரு பாம்புக்கு பிறகு, பல வருடங்களாக பாம்பு ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியில் சல்லடை போட்டு தேடியும் தங்கக் கவசவாலன் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் 142 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசய பாம்பான தங்க கவச வாலன் என்ற பாம்பு வெளிவந்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது