Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

13 Jan 2023 1:52 amFeatured Posted by: Sadanandan

You already voted!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்பெற செய்யும் வகையில், சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டம் குறித்த தனி தீர்மானம் கொண்டு வந்து, முன்மொழிந்து பேசியதாவது:

150 ஆண்டு கால கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்று கடமை என்று நான் கருதுகிறேன். அண்ணாவின் கனவுத் திட்டம் அது. தலைவர் கலைஞர் நிறைவேற்ற பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேது சமுத்திர திட்டம்.

இந்தியாவினுடைய முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் 1963ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. 1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த அண்ணா, ‘தம்பிக்கு’ எழுதிய மடலில் இத்திட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ‘சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்’ என்று அண்ணா எழுதினார். இத்திட்டத்தை நிறைவேற்றி தருவதற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்.

1972ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் வ.உ.சிதம்பரனாரின் சிலையை திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அன்றைய முதலமைச்சர் கலைஞர் இதனை வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது சமுத்திர கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தி பேசினார். 1998ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பாஜ ஆட்சியில்தான் சேதுசமுத்திர திட்டத்துக்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜ சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்கு போட்டார் என்பதையும் உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

கலைஞர் சுட்டிக் காட்டியதை போல, நாட்டினுடைய அந்நிய செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும், இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம்தான் அப்போது கலைஞர் சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். உச்ச நீதிமன்றத்தில், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பாஜ அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ‘ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்’ என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு பாஜ அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திர திட்டத்தை போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது, ‘‘தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்கி வருகின்றது. 1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு - ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திர திட்டமாகும்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார். அப்போதுதான் சேதுசமுத்திர திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. கலைஞரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இந்த திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்.

திட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கக்கூடிய இந்த திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்த காரணத்தை கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்” என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.

இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), சதன்திருமலைகுமார் (மதிமுக), ஷா நவாஸ் (விசிக), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூ.), ஜவஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வரவேற்று பேசினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் உறுப்பினர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்புடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்ய மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்கி வருகிறது.

இந்த திட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் “Feasibility Study”க்கு அனுமதி அளித்தார். அப்போதுதான் சேதுசமுத்திர திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது.

அதன்பின் திமுக பங்கேற்றிருந்த ஐ.மு.கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு ரூ.2,427 கோடி மதிப்பில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது

கலைஞரும், ஐ.மு.கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இந்த திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096545
Users Today : 6
Total Users : 96545
Views Today : 9
Total views : 416683
Who's Online : 0
Your IP Address : 3.144.106.207

Archives (முந்தைய செய்திகள்)