07 Jul 2023 12:07 amFeatured
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் (IATR) ஆசியவியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் 11 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7,8,9 ஆகிய மூன்று நாள்களிலும் சென்னை அருகிலுள்ள செம்மன்சேரி ஆசியவியல் நிறுவன அரங்கில் நடைபெறவிருக்கிறது.
அம்மாநாட்டில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் வரையறைச் செய்துள்ள தொல்காப்பியம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு,சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் அகப் பொருள் உள்ளிட்ட நாற்பத்தொரு சங்க இலக்கியங்கள் குறித்த ஓர் அறிமுக நூலை மும்பை இலெமுரியா அறக்கட்டளை நிறுவனரும், எழுத்தாளருமான தமிழ் அறிஞர் சு.குமணராசன் எழுதியுள்ளார். இந்த நூல் இளைய தலைமுறையினர், மாணவர்கள் நன்மை கருதி எழுதப்பட்டுள்ள ஒரு நூலாகும்.
“செவ்வியல் இலக்கியங்கள் ஓர் அறிமுகம்" என்று தலைப்பிடப் பட்டுள்ள இந்த நூல் சென்னையில் நடைபெறும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர் பலர் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழக ஆங்கிலத் துறைத் தலைவரும், செம்மொழித் தமிழாய்வு மையத்தின் மேனாள் இயக்குநருமான பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம் இந்நூல் குறித்து அணிந்துரை எழுதியுள்ளார். இந்த நூல் எதிர் கால மாணவர்களின் தமிழ் இலக்கிய அறிவைப் பெருக்குவதற்குப் பெரிதும் உதவுகின்ற ஒன்றாகும் என அறிஞர்கள் பலர் கணித்துள்ளனர்.
ஜூலை 7 ஆம் நாளன்று தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
சென்னையில் நடைபெறும் 11 வது உலகத் தமிழ் மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்களும் ஆய்வாளர்களும் கலந்து கொண்டு தத்தம் ஆய்வுகளை எடுத்துரைக்கின்றனர்̀. மகாராட்டிரா மாநிலத்தில் வசிக்கும் தமிழர் ஒருவர் எழுதிய நூலை உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட ஒப்புதல் அளித்த மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு எழுத்தாளர் குமணராசன் நன்றி தெரிவித்துள்ளார்.