08 Jul 2023 11:47 pmFeatured
-வெங்கட் சுப்ரமண்யன் , டோம்பிவிலி
மருத்துவனை சூழல், சொட்டு சொட்டாய் இறங்கிக் கொண்டிருக்கும் மருந்துகள் போன்ற எந்த உணர்வுமின்றி அம்மாவின் வாய் மட்டும் மெல்லிய குரலில் லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
மிக அருகில் அமர்ந்திருந்ததால்
வதநஸ்மர மாங்கல்ய
க்ருஹ தோரண சில்லிகா|
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ
சலந் மீநாப லோசநா||
வார்த்தைகள் தெளிவாக காதில் விழுந்தது.
“முகத்தின் அழகுவெள்ளத்தில் ஓடும் மீன்களை போன்ற கண்களை உடையவளாகிய அன்னையே……. “அம்பாளின் கண்கள் பற்றிய வர்ணனை மனதில் ஓடியது.
ஆனால் அம்மாவின் கண்கள் மூடியே இருந்தன.
வேதனை சிறிதளவும் தெரியா வண்ணம் முகத்தில் ஒரு அமைதி படர்ந்திருந்தது.
முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள்.
நினைவு தப்பினாலும்,
"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வராநநே"
என்று உச்சரிக்கும் உதடுகள் அவள் பெருமாளை நோக்கி அடி மேல் அடி வைத்து சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
நேற்றே டாக்டர் சொல்லி விட்டார்……
"ராமா (குடும்பத்துடன் பல வருடம் நெருங்கிப்பழகிய டாக்டர் என்பதால் கணபதி ராமனை சுருக்கி உரிமையுடன்) இன்னும் 48 மணிநேரம்தான். ஆனா ஒருத்தரும் அழக்கூடாது. புரிஞ்சுதா?அது எப்பேர்ப்பட்ட ஆத்மா, வந்ததிலிருந்து ஒரு வேதனையான முனகல் கிடையாது. திரும்பத் திரும்ப லலிதா ஸஹஸ்ரநாமமும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்தான் …"
உண்மைதான். உடம்பு பாதி தீயில் வெந்த ஒரு விபத்து… இல்லை அஜாக்கிரதை நிகழ்வு அது.
ஆனாலும் இங்கு வந்ததில் இருந்து சுய நினைவு இல்லாத போதும் வலி வேதனைகளை கடந்து அந்த ஸஹஸ்ரநாமம் தொடர்ந்தது.
அவள் பட்ட கஷ்டங்களுக்கும் , அதை தாங்கிய பொறுமைக்கும் பெருமாளே நேரில் வந்து பூப்போல அழைத்துச் சென்றிருக்க வேண்டாமோ? இத்தனை வலி வேதனை..எதற்கோ..?
அம்மாவின் கண்கள் மூடிய படியே மெதுவாக அசைந்தது.
"எங்களிடம் இருப்பது ஒரு கண்ணல்ல… இருபது கண்கள். நகக் கண்கள்." எப்போதோ பார்த்த சினிமா வசனம் நினைவில் வந்தது. புரிதலுடன் கண்களாய் இருந்த அந்த விரல்களை மெதுவாக தடவிக் கொடுத்தேன்.
ஆமாம், அம்மாவிற்கு கண் பார்வை கிடையாது.
அம்மா என்னை பிரசவித்த சமயத்தில் நடந்த ஒரு சிறு மருத்துவ கோளாறில் கண்பார்வை பறிபோயிருந்தது.
வெகு இயல்பாய் தெரியும் அந்தக் கண்கள் குரல் வரும் திசையில் முகம் திருப்பும் போதுதான் எதிரிலிருப்பவருக்கு தெரியும்.
ஆரம்பத்தில் எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பயனில்லை.
குல தெய்வ கோவிலில் நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு தனக்கு கண் இந்த பிறவியில் இல்லை என்பதை அவளே முடிவு செய்து கொண்டாள் என்றே நினைக்கிறேன்.
அந்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது.
நாங்கள் போன அன்று சந்தண காப்பு எங்கள் அம்மனுக்கு. எங்கள் சார்பாய் அம்மாவின் கண்கள் வேண்டி வெள்ளியில் மலர்க்கண் வைக்கப் பட்டிருந்தது. தீபாராதனை தட்டு தூக்கி காட்ட ஆரமித்த பூசாரி ஒரு பக்க கண் கீழே விழுந்து கோரமாய் காட்சி அளித்ததை சரி செய்ய முடியவில்லை.முழு தீபாராதனையும் அதே கோலத்தில் முடிந்தது.
நாங்கள் மேற்கொண்டு குறி எதுவும் கேட்காமல் வீடு திரும்பினோம்.
அதன் பிறகு அவள் தன் அளவில் யார் உதவியுமின்றி வாழப் பழகிக் கொண்டாள். காய்கறி நறுக்குவது, தன் துணிகளை தானே துவைத்து உணத்துவது,வீட்டின் திண்ணை தொடங்கி பின்கட்டு வரை ஒரு தடுமாற்றமின்றி நடந்து செல்வது, வந்தவர்களின் குரல் வைத்தே யாரென்று அறிந்து பேசுவது என்று எல்லாம் மிக திடமாக.
.
வாஞ்சையுடன் "மணியா,…வா "என்று வருபவர்களை அவள் வரவேற்பது இதயத்திலிருந்தே வரும் வார்த்தைகள் போல தோன்றும்.
இருந்தும் "என்ன…. .கடவுள் எனக்கு இப்படி ஒரு வேதனையை கொடுத்துவிட்டான்" என்று யாரிடமும் அவள் புலம்பி நான் கேட்டதில்லை.
ஒரே ஒரு முறை "கர்மா…அனுபவிக்க வேண்டாமா" என்று யாரிடமோ சொன்ன நியாபகம்.
மாலையில் திண்ணைதான் அவள் வெளியுலக தொடர்பு சாதனம்.
கண் உள்ளவர்களுக்கு திண்ணை மிக சவுகரியம். தெருவில் நடக்கும் அத்தனை விஷயங்களும் இருந்த இடத்தில் இருந்து கவனிக்க முடியும்.
ஆனால் எங்கள் வீட்டு திண்ணை கடந்து போகும் அனைவரும் அம்மாவிடம் பேசிவிட்டே செல்வர். "குரல்கள்" அவளுக்கு தெருவின் அனைத்து ரகசியங்களும் சொல்லும்.
தெருவின் அத்தனை குடும்பமும்,அது சார்ந்த நிகழ்வுகளும் உள்வாங்கும் இடம்தான் அவரது திண்ணை சாம்ராஜ்யம்.
ஒரு வேளை மனக்கண்ணில் குரலுக்கான முகம் பொருத்தி அத்தனை பேரையும் எப்படி கற்பனை செய்திருந்தாளோ…?
அந்த சமயங்களில் உள் திண்ணையில் ஒலிக்கும் சஹஸ்ரநாமம் திண்ணையில் மெல்லிய குரலில் அம்மாவின் காதுகளில் கேட்டபடி இருக்கும்.
மங்களம்,நீலா,ஹேமா இப்படி யாராவது அவர் திண்ணையில் இருக்கும் போது கூடவே இருப்பார்கள். அம்மாவை தனியாக பார்ப்பது அரிது.
ஆனால் விதி…….. .அன்று தனித்தே இருந்தார்.
கோவில் மணி அடித்தவுடன் திண்ணையிலிருந்து இறங்கி இரண்டு அடி நடந்து வலதுபுறம் திரும்பி "பெருமாளே …" என்று கைகூப்பி வணங்குவது வழக்கம். இறங்குவது. நடப்பது என்று எல்லாமே ஒரு அளவில்…மனக் கணக்கு.
ஆனால் அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வைத்திருந்தது.
அம்மாவின் வழக்கம் அறியாத யாரோ அதை வலப்புறம் இரண்டடி தவறாக நகர்த்தியிருந்தனர்.
சேலை பிடித்து எரிவது பார்த்த எதிர்வீட்டு பாலன்தான் முதலில் அணைக்க ஓடி வந்தார்.தீயை அணைக்க முடிந்த போது நினைவு தப்பியிருந்தது.
இப்போது……என் கண் முன்னே ….
அம்பு படுக்கையில் படுத்து தன் முடிவை எதிர் நோக்கிய தருணத்தில் சஹஸ்ர நாமம் சொன்ன பீஷ்மர் போல ……
டாக்டர் சொன்ன 48 மணி நேரத்திலேயே எல்லாம் முடிந்தது.அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து அழுகையை அடக்கிக் கொண்டு எல்லா காரியமும் செய்தேன்..
இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது.
எல்லாம் தொலைத்து விட்டு காலியான அந்தத் திண்ணையில் அமர்ந்த போது கண்கள் நாலா புறமும் பார்க்கின்றன…ஆனால் புத்தி வெறுமையாய் கோவில் மணி கேட்டு அழுகிறது.
அம்மா………ஆஆ….
சிறப்பான கதை.சிறு கதையாக இருந்தாலும் பெருங்கதை போல் இருந்ததது.ஆம்! மிளகாய் சிறியது காரம் அதிகம் என்பது போல், கண்கள் இல்லாத அம்மாவின் வாழ்வின் வேதனை, வலியுடன் , அம்பு படுக்கையில் பீஷ்மரைப் போல் சஹஸ்ர நாமம் கூறிக் கொண்டு கண்களை மூடிய தாய் , யாரும் அழுகாதீர்கள் என்ற வரிகள், எல்லாம் அடக்கிக் கொண்டு அனைத்து காரியங்களையும் செய்தேன் என்ற இன்றைய இயல்புகள் ஆசிரியரின்
நவ நவீன கால உணர்வுகள். முடிவாக, “ஆனால் புத்தி வெறுமையாக கோயில் மணி கேட்டு அழுகிறது ” . It is a story in new perspective. Thanks