10 Jul 2023 7:47 pmFeatured
-வே.சதானந்தன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண்ணின் கணவரை ஒரு குழு படுகொலை செய்கிறது. அந்தப் பெண் என்ன செய்திருப்பாள்?
அடுப்பங்கரையில் அமர்ந்து அழுதுகொண்டே நாட்களை கடத்தியிருப்பாளா? மன்னனின் மனைவியாக இருந்திருந்தால் எதிரிநாட்டு அரசனின் அடிமையாகியிருப்பாளா ?
ஒரு பெண்ணின் கோபமும் வஞ்சமும் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? வரலாற்றில் பதிவான ஒரு கோரமான வஞ்சமும் வன்முறையும் தோய்ந்த பல்லாயிரம் உயிர்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மைச்சம்பவம்.
யார் அந்தப் பெண் ?
அந்தப் பெண் தான் ஓல்கா (Princess Olga Of Kyiv)
இன்று ரஷ்யா போரிட்டுக்கொண்டிருக்கும் நாடான உக்ரைனின் தலைநகர்தான் கீவ் (Kyiv / Keiv) (ரஷ்யா – உக்ரைன் போர் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற ஓர் ஊர்)
உக்ரைனின் தலைநகரான கீவ்” (Kiev), பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அரசை உருவாக்கிய வம்சம் ‘கீவியன் ரூஸ்’, இந்த வம்சத்தின் வழிவந்த இளவரசர் “ஈகோர்-I” அவரின் மனைவிதான் இந்த ஓல்கா.
இவர்களின் மகன் ஸ்வயடோஸ்லாவ் இகோரெவிச் (Svyatoslav Igorevich)
ஓல்கா பிறந்த வருடம் பற்றிய துல்லிய குறிப்பு கிடையாது, பலரும் பல்வேறு ஆண்டுகளை குறிப்பிட்டு குழப்பினாலும் கிபி 890 - 970-ம் காலகட்டத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம்.என கருதப்படுகிறது.
அந்தப் பகுதியின் அரசாட்சிக்கு உட்பட்ட பிராந்தியத்தைச் சேர்ந்த ஓர் இனக்குழு
“ட்ரெவ்லியன்கள்” (Drevlians).
பைசாண்டிய பேரரசு இப்பகுதியின் மீது போர்தொடுத்த போது இளவரசர் இகோருக்கு உறுதுணையாகப் போரில் பங்கெடுத்தவர்கள் இந்த ட்ரெவ்லியன்கள். அரசுடன் பெரிதாக முட்டல் மோதலும் இல்லாதவர்கள்.
கீவியன் ரூஸ் வம்சத்தின் முக்கிய நிதி ஆதாரம், அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்து வசூலிக்கப்படும் வரிதான். ட்ரெவ்லியன்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வரி செலுத்த மறுக்கிறார்கள். வரி வசூல் செய்ய ஒரு படையுடன் ட்ரெவ்லியன்களின் பகுதிக்குச் சென்ற ஈகோர், ட்ரெவ்லியன்களை மிரட்டி ஒரு வழிக்குக் கொண்டு வந்து வரி வசூல் செய்துகொண்டு திரும்பினார்.
ஆனால், திரும்பும் வழியில் ஈகோருக்கு ஒரு சிந்தனை, இன்னும் அதிகமாக வசூல் செய்தால் என்ன என பேராசையோடு சில வீரர்களுடன் அந்தப் பகுதிக்குச் செல்கிறார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ட்ரெவ்லியன்கள், ஈகோரின் இந்த மனமாற்றத்தால் வெகுண்டெழுந்தார்கள்.
குறைவான படைவீரர்களுடன் திரும்ப வந்த ஈகோரை சிறைபிடித்து
இரண்டு மரங்களை வளைத்து இழுத்துப்பிடித்து அதன் நுணியில் ஒரு கயிற்றையும், அதன் மறுமுனையை ஈகோரின் கால்களிலும் கட்டுகிறார்கள். இழுத்துப் பிடித்த மரத்தை விடும்போது இரண்டு மரங்களும் தன் இயல்பான நிலைக்குச் செல்லும் போது ஈகோரின் உடல் பலமாக பிய்த்தெறியப்பட்டு கொல்லப்படுகிறார்.
இந்த மொத்த பதிலடியையும் திட்டமிட்டு செய்தது ட்ரெவ்லியன்கள் இனக்குழுவின் இளம்தலைவரான ‘மால்’. அதற்குப் பிறகு தங்கள் பிரதிநிதிகள் 20 பேரை கீவுக்கு அனுப்பி, ஈகோர் கொல்லப்பட்ட செய்தியையும், ஓல்காவை மால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் செய்தியையும் சொல்லி அனுப்புகிறார்கள்.
தன் கணவர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த போதும், அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு அந்த தூதர்களை வரவேற்ற ஓல்கா, “ஈகோர் இறந்துவிட்டார், இனி அவர் திரும்ப வரப்போவதில்லைதான், என் ஸ்வியாட்ஸ்லோவுக்கோ இப்போது மூன்று வயதுதான். நான் என்ன செய்ய முடியும்? ஆனால், எனக்கு ஒரு நாள் அவகாசம் தாருங்கள், என் நாட்டு மக்களின் முன்பாக நாளை என் முடிவைச் சொல்கிறேன். அதுவரை நீங்கள் வந்த படகிலேயே தங்கி இருங்கள். நாளை என் நாட்டின் சேவகர்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உங்களைப் படகில் வைத்தே பல்லக்கு போல தூக்கிக்கொண்டு அவைக்கு வருவார்கள், அங்கு என் முடிவைச் சொல்கிறேன்” என்றார்.
வருகை புரிந்த தூதுவர்களும் இது இவர்கள் வழக்கம் போல என்று நினைத்து தங்கள் படகுகளில் போய் தங்கினர். மறுநாள் காலை கீவியன்கள் அந்தப் படகோடு தூதுவர்களைத் தூக்கிக்கொண்டு வந்து ஓல்காவின் கண் முன்னே ஒரு பெரும் குழியில் தூக்கிப்போட்டு மண்ணள்ளிக்கொட்டி உயிரோடு அவர்களைக் கொன்று புதைத்தார்கள்.
அதற்குப் பிறகு ஓல்கா, ‘மாலு’க்கு ஒரு செய்தியை அனுப்பினார். “உங்களைத் திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் தான். ஆனால், உங்கள் குழுவின் எளிமையானவர்களையும், விவசாயிகளையும் அனுப்பி என்னையும் என் நாட்டையும் அவமதிப்புக்குள்ளாக்கிவிட்டீர்கள். அதனால், உங்களு குழுவில் மதிப்புமிக்கவர்களையும் வீரர்களையும் சான்றோர்களையும் உள்ளடக்கிய குழுவை அனுப்பி கோரிக்கை வைக்கவும்” என தகவல் அனுப்பினாள்.
முன்பு சென்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியாத மால், ஓல்காவின் கோரிக்கையை ஏற்று அதே போல ஒரு குழுவை அனுப்பினான். அந்தக் குழுவை சிரித்த முகத்துடன் வரவேற்ற ஓல்கா, “உங்கள் பயணக் களைப்புத் தீரவும் சுத்தமாகவும் குளித்துவிட்டு வரவும், உங்களுக்காக நீராவிக்குளியலுக்கான குளியலறை தயார் செய்யப்பட்டுள்ளது” என அனுப்பிவைத்தார். அவர்களும் சரிதான் என நினைத்துக்கொண்டு குளிக்கச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் குளியலறைக்குச் சென்றவுடன் அது முழுக்க தீவைத்து அவர்கள் அனைவரும் தீவைத்து கொலை செய்யப்பட்டார்கள்.
மீண்டும் மாலுக்கு ஒரு செய்தியை ஓல்கா அனுப்பினாள், “உங்களைத் திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் தான். ஆனால், இறந்த என் கணவர் ஈகோருக்காக முறையான அஞ்சலி செலுத்த வேண்டும். என் கணவர் கொலை செய்யப்பட்ட பகுதியில் என் கணவரைக் கொன்ற நீங்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மிக அதிகளவிலான ‘மீட்’ எனப்படும் மதுவை நீங்கள் தயார் செய்து அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் நானும் என் நாட்டினரும் பங்குபெறுவோம்.”
மாலும் அஞ்சலிக்கான ஏற்பாடு செய்திருந்தான். ஓல்காவும் அவள் நாட்டினரும் நேரடியாக ஈகோர் கொலை செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு விருந்து தயார் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றார்கள். அங்கே ட்ரெவ்லியன்களும் விருந்தில் கலந்து கொண்டனர். மாமிசமும் மதுவும் எல்லையின்றி வழங்கப்பட்ட விருந்தில் ட்ரெவ்லியன்கள் போதையில் மயங்கினர். அதுவரை காத்திருந்த ஓல்காவின் வீரர்கள் தங்கள் வேட்டைக்குத் தயாரானார்கள். விருந்தில் மயங்கிக்கிடந்த ட்ரெவ்லியன்களை வெட்டிச்சாய்த்தனர். ஏறக்குறைய அன்று இரவு 5,000 ட்ரெவ்லியன்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது.
இத்தனைப் படுகொலைகளுக்குப் பிறகும் ஓல்காவின் வஞ்சம் தீரவில்லை, கோபம் துளியும் குறையவில்லை.
ஓல்காவின் தலைமையில் சென்ற கீவியன் ரூஸ் படையினர் ட்ரெவ்லியன்கள் வசித்த பகுதியை முழுமையாக முற்றுகையிட்டனர். சுற்றிவளைக்கப்பட்டவர்கள் பசியால் வாடி அவரிடம் தஞ்சமடைந்து, தங்களை மன்னிக்கும் படியும் கேட்டனர். ஓல்கா கேட்கும் கப்பத்தைக் கட்டவும் அவர்கள் தயாராகினர்.
ஆனால் ஓல்காவோ அவர்களை மன்னிக்க நிபந்தனையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் தாங்கள் வளர்க்கும் மூன்று புறாக்களையும், மூன்று சிட்டுக்குருவிகளையும் தனக்குத் தர வேண்டும் என கட்டளையிட்டார்.
மக்களும் இவ்வளவுதானா, ஓல்கா பெரிய மனதுடன் தங்களை மன்னித்துவிட்டதாக எண்ணிக்கொண்டனர்.
ஓல்கா கேட்டபடியே மூன்று புறாக்கள், மூன்று சிட்டுக்குருவிகளை வழங்கினர். அப்பகுதி ட்ரெவ்லியன்களின் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருக்கும், அது போக தகவல் பரிமாற்றத்துக்காக அவர்கள் புறாக்களை வீடுகளில் வளர்ப்பதும் வழக்கம். எங்கு தகவல் அனுப்பினாலும் அவை சரியாக அவர்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் வழக்கம் கொண்டவை அந்தப் புறாக்கள்.
எல்லாக் குடும்பத்தினரிடம் இருந்தும் புறாக்களும் சிட்டுக்குருவிகளும் ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்த ஓல்கா, அவற்றின் கால்களில் கந்தகப் பொடியையும் துணிகளையும் கட்டி தீவைத்து அவற்றை விடுதலை செய்தார். அந்தப் பறவைகள் தங்களுடைய உரிமையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சேர்ந்தன, அந்தப் பகுதியே தீப்பிடித்து எரிந்தது. தீயில் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர். தீயிலிருந்து தப்பி வெளிவந்தவர்களை ஓல்காவின் படையினர் வெட்டிச்சாய்த்தனர்.
இத்தனை ஆயிரம் பேரைக் கொன்று தீர்த்த பிறகுதான் ஓல்காவின் வஞ்சம் தீர்ந்தது.
தன் மூன்று வயது மகன் அரசாட்சி பொறுப்பை ஏற்கும் வரை கீவியன் ரூஸ் பகுதியை ஓல்கா சிறப்பாக ஆட்சி புரிந்தார். வரிவசூல் செய்வது, கப்பம் வசூலிப்பது போன்ற முறைகளில் சில சீர்திருத்தங்களை ஓல்கா கொண்டு வந்தார்.
மனமாற்றம்
அவர் மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, வைக்கிங் இனவழிவந்த, கிறித்துவர்களால் பேகன்கள் என அறியப்பட்ட முந்தைய சில வழிபாட்டாளரான ஓல்கா கிறித்துவத்தைத் தழுவினார்.
அந்தப் பகுதி முழுக்க கிறித்துவம் வளர ஓல்கா துணைபுரிந்தார். அவருடைய பேரனின் ஆட்சிக் காலத்தில்தான் கீவியன் ரூஸ் பகுதி முழுக்க கிறித்துவத்துக்கு மாறியது.
அவர் இறந்த 600 ஆண்டுகள் கழித்து 16-ம் நூற்றாண்டில் ‘புனித ஓல்கா ஆஃப் கீவ்’ என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு மற்ற கிறித்துவ சர்ச்களும் அவரை புனிதராக அறிவித்தன.
For me, it is great historical
information. Though,there were lot of information, like this in the history, it is different and unique one to ruminate.
ஈகோரின் வெற்றிக்குப் பின்னும் எழுந்த பேராசை எல்லா அழிவுக்கும் ஆரம்பம்.
“இத்தனை ஆயிரம் பேரைக் கொன்று தீர்த்த பிறகுதான் ஓல்காவின் வஞ்சம் தீர்ந்தது” என்ற படிக்கும் போது கூட அடுத்து ஏதாவது திட்டம் தீட்டப்படுகிறதா? என்ற யோசனை வந்தது.நல்ல காலம்…அந்த அம்மா 600 ஆண்டுகள் கழித்து 16-ம் நூற்றாண்டில் ‘புனித ஓல்கா ஆஃப் கீவ்’ என அறிவிக்கப்படுவதற்கு தயாராகிவிட்டார்.
அருமையான வரலாற்றுப் பதிவு…..