05 Jul 2019 12:47 amFeatured
-கவிஞர் குணா.
நட்பைப் போற்றுமின்! நல்நட்புப் போற்றுமின்!
நல்லறம் நல்கிடும்; நள்ளுமை போற்றுமின்!
வள்ளுவம் காட்டும்! வளநண்பு நாடுமின்!
வாழ்வமைதி கூட்டும் அன்பதனை தேடுமின்!
தேர்மின் தெளியின் தோழமை நுண்மையை-
ஆர்மின், ஓர்மின் அகம்வளர் மேன்மையை-
வாழ்த்துமின்! ஔவை – அதியமானின் தோழமை-
வாழ்த்துமின்! கபிலர் – பாரியின் கேண்மையை –
இதிகாச நட்பின் இலக்கணம் கர்ணனை,
இலக்கிய நட்பினன் கோப்பெருஞ் சோழனை,
போற்றுமின் , புகழ்மின் நட்புதிறம் உயரவே!
நற்றாமிழர் தொன்மை, நேற்றவர் உணரவே!
முரண்பட்ட கொள்கையில் உடன்பட்ட நட்பில்;
பெரியார் – இராசாசிப் பேணியப் பண்பினை,
அண்ணா – காமராசர் அகல்ந்த பேரன்பினை,
அறியுமின், ஆய்மின் அவர்புகழ் வியக்கவே!
காய்தல் உவத்தலிலா கலைஞரவர் கேண்மையை-
நயத்தக்க வளத்தக்க எம்.ஜி.ஆர் கிளைமையை-
பயிலுமின், நிகிழுமின் பருபகை அழியுமின்!
பகுத்தறியுமின் பழைமையை, புரியுமின் தீநட்பை!?
கூடாநட்பில் கூடாது அகலுமின்! காமமில்லாக்
காதலெல்லாம் நட்பென காண்மின்! கணிமின்!
உறவுகள் எல்லாம் இறைவரமென உள்ளுமின்!
நட்புறவு ஒன்றேயுன் சுயதேர்வென உன்னுமின்!
எதிர்பார்ப்பிலா அன்பும், விட்டுதரும் பண்பும்,
ஏற்றாத்தழ்விலா கிழமையே நட்பறமென நுண்மின்!
மாற்றாரை தம்மைப்போல் மதித்து, நடத்துமின்!
மாசற்றார் கேண்மையில் மருவுமின், மகிழுமின்!
நம்பிக்கையே நட்பென்று நாளென்றும் நினைமின்!
நல்லுதவிகள் பலசெய்தும் நற்தோழமை நாடுமின்!
நட்புக்கும் கற்புண்டு; நற்துணையாய் வாழ்ந்துடுமின்!
நட்புறவை வளர்த்திடுமின்! நமர் அறம் காத்திடுமின்!